வண்ணங்கள்..
இவ்வுலகிலுள்ள அழகான பல விஷயங்களில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவை வண்ணங்கள்.
வண்ணங்கள் நமக்கு சக்தி தரும்.எழுச்சி தரும்.ஊக்கம் தரும்.உற்சாகம் தரும்.அமைதி தரும்.சாந்தம் தரும்.
வண்ணங்களால் கவரப் படாதவர்கள் யார் இருக்க முடியும்?
வானின் வர்ணஜாலங்களில் தன்னை மறந்த மஹாகவி இவ்வாறு பாடுகிறான்:
என்ன இந்த வண்ணத்தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!செம்பொன் காய்ச்சிவிட்ட ஓடைகள்!
வெம்மை தோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள்!
நீலப் பொய்கைகள்!அடடா நீல வண்ணமொன்றில் எத்தனை வகை!
எத்தனை செம்மை! பசுமையும் கருமையும் எத்தனை!
நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத்தோணிகள்
சுடரொளிப் பொற்கரையிட்ட கருஞ்சிகரங்கள்
ஆங்கு தங்கத்திமிங்கிலம் தான் பல மிதக்கும்.
எங்கு நோக்கிடினும் ஒளித் திரள் ஒளித் திரள்
வண்ணக்களஞ்சியம்!
காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் தெய்வத்தின் நிறம் பார்த்த மஹாகவி இந்தப் பாடலில் நிறங்களில் தெய்வீகத்தின் அழகைக் காண்கிறான்.
இன்னொரு கவிஞராகிய திருமங்கை ஆழ்வாரோ தெய்வத்தின் நிறங்களைப் பார்த்து வேறு விதமாக சிந்தித்து ஒப்பிடுகிறார்:
பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து,
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை,
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின்,
அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே
கருமை என்பது எதிர்மறையின் குறியீடு.பச்சை என்பது செழுமையின் குறியீடு.
'எதிர்மறையான எண்ணங்களை விட்டு ஒழித்தால், மனம் செழுமையாகி, தெய்வீகத்தை நாடிச் செம்மையாகும் என்பது இந்தப் பாடலின் பல பொருள்களுள் ஒன்று.
இங்கு வண்ணங்கள் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
யோசித்துப் பார்த்தால்,வண்ணங்களுக்கும், இசைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.
ஆதார ஸ்வரங்கள் 7.வானவில்லில் நாம் காணும் ஆதார வண்ணங்களும் 7.
ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் சில மாறுபாடுகள் உண்டு.ஒவ்வொரு வண்ணத்துக்கும் பலவித நிழற்கூறுகள் உண்டு.
கை தேர்ந்த இசைக்கலைஞன் ஸ்வரங்களை சரியான முறையில் ஒன்று சேர்ந்தால் நமக்குக் கிடைப்பவை இன்னிசை ராகங்கள்.ஒரு கை தேர்ந்த ஓவியன் வண்ணங்களை சரியான கலவையில் ஒன்று சேர்த்து அளித்தால் நமக்குக் கிடைப்பவை அழகிய ஓவியங்கள்.
புதைந்து கிடக்கும் ரத்தினங்களை வெளிக் கொணருவது போல,மிகச் சிறந்த ஓவியக் கலைஞன், நமக்குப் பரிச்சயமான வண்ணங்களோடு, புதுப் புது வண்ணங்களையும் காட்டுகிறான்.ஒரு மிகச் சிறந்த இசைக் கலைஞனும்,நமக்குத் தெரிந்த ராகங்களை அழகாகக் காட்டுவதோடு மட்டுமன்றி,தெரியாத பல இனிமையான ராகங்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறான்.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக,இளையராஜா என்னும் மாபெரும் இசைக் கலைஞர்,அவரது ஹார்மோனியம் என்னும் வண்ணத்தட்டிலிருந்து பல வண்ணஙளை ஸ்வரங்களாகவும், ராகங்களாகவும் அந்த வானத்தைப் போல மிக அழகாகவும், அதிசயமாகவும் அளித்துக் கொண்டு வருகிறார்.
அவரது இசை மூலமாக நமது பொய் வண்ணத்தை அகற்றி, மெய் வண்ணத்தைக் காண வைத்து தெய்வீகத்தை உணர வைக்கிறார்.
நமக்குத் தெரிந்த வண்ணங்களை மட்டுமன்றி, தெரியாத வண்ணங்களையும், இதுவரை யாரும் அறியாத வண்ணங்களையும், நாம் எல்லோரும் அறியும் வண்ணம், நமக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.
ஹேம பூஷணி, மகரந்த ப்ரியா,தூர்ஜடிப்ரியா,மிருகாக்ஷி,வர்ண ரூபிணி போன்ற மிக அரிதான ராகங்களை அவர் உபயோகப்படுத்தியதை நாம் பார்த்திருக்கிறோம்.
இன்றைய தினம்,இன்னொரு மிக அரிதான ராகத்தைனையும், அதில் அமைந்த மிக இனிமையான பாடலையும் நாம் காண இருக்கின்றோம்.மேலே குறிப்பிட்டுள்ள ராகங்களைப் போல, இந்த ராகத்தையும் இதற்கு முன்பு யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.
இந்த ராகத்தின் பெயர் மல்லிகா வசந்தம்.'நியாயா கெட்டிது' என்னும் கன்னடப் படத்தில் வரும் 'ஸாவிர ஜனுமஹளு' என்ற பாடல் இந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.
'மல்லிகா வஸந்தம்' 15ஆவது மேளகர்த்தாவாகிய மாயாமாளவகெளளையிலிரிந்து உருவான ராகம்.இதன் ஆரோஹணத்தில் 5 ஸ்வரங்கள், அவரோஹணத்தில் 7 ஸ்வரங்கள்.
ஸ க3 ம1 ப நி3 ஸா/ஸா நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ
என்பதே இதன் அமைப்பு.
அந்தர காந்தாரம்,சுத்த மத்தியமம்,பஞ்சமம்,காகலி நிஷாதம் முதலியனவும் அவரோஹணத்தில் காகலி நிஷாதம், சுத்த தைவதம்,பஞ்சமம்,சுத்த மத்தியமம்,அந்தர காந்தாரம்,சுத்த ரிஷபம் முதலிய ஸ்வரங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த ஔடவ சம்பூர்ண அமைப்பு மிகவும் எளிதாக இருக்கும்படி தோன்றினாலும்,இந்த ராகத்தைக் கேட்கும்பொழுது, இதன் தனித்தன்மை தெளிவாகத் தெரியும். இதன்
ஆரோஹணத்தில் இருக்கும் 5 ஸ்வரங்களும் இன்னொரு மிக மேன்மையான ராகமாகிய சங்கரபரணத்திலும் காணப்படுபடுகின்றன.
எனினும் சங்கராபரணம், மாயாமாளவகெளளையின்றும் மிக வித்தியாசமாக ஒலிப்பதன் காரணம் அதிலுள்ள 'ரி' மற்றும் 'த' வின் மாறுபாடுகள்(முன்னதில் இருப்பவை சதுஷ்ருதி ரிஷபம் மற்றும் சதுஷ்ருதி தைவதம்).பின்னதில் இருப்பவை சுத்த ரிஷபம் மற்றும் சுத்த தைவதம்.
சங்கராபரணத்தினின்றும் பிறந்த கேதாரம் என்னும் இனிமையான ராகத்தை இந்த ஆரோஹணம் வெகுவாக ஞாபகப்படுத்துகிறது.’ஸ ம க ம ப நி ஸா’ என்பது கேதாரத்தின் அழகு.’ஸ க ம ப நி ஸா’ என்பது மல்லிகா வசந்தத்தின் வாசம்.
இப்பொழுது பாடலைப் பற்றிப் பார்ப்போம்.
மனதை வருடிச் செல்லும் இசைவு நயத்துடன் எஸ்.பி.பி.அவர்களின் குரலில் ஒலிக்கிறது ஆலாபனை. தன்வயப்படுத்துகின்ற மாறுபாடுகளுடன் அமைந்த அகாரம், மேல் ஸ்தாயியினை முந்தரவு இசைச் சேர்ப்பின் இறுதிக்கு சற்று முன்பாகத் தொடுவது தனிச் சிறப்பு.
நிலைகொள்ளாமல் நம்மை அழகாகத் தவிக்கவிடும் உணர்வினை இன்னும் அதிகமாக்குகின்றன நேர்த்தியான நரம்பிசைக் கருவிகளும், நுண்ணியமாக ஒருங்கிணைக்கப்பட்ட லய அமைப்பும்.
இந்தப் பாடல், ஒரு சுழற்சியில் நான்கு அக்ஷரங்களைக் கொண்ட சதுஷ்ர ஏக தாளத்தில் அமைந்துள்ளது. இந்த ‘4’, ‘ 8’ மாத்திரைகளாகக் கூறு செய்யப்பட்டு, 'த க' ஒரு ஜோடியாகவும், 'தி மி' ஒரு ஜோடியாகவும் ஒலிக்கின்றன.இறுதியாக ஒலிக்கும் 'தி மி',அதாவது 7ஆவது மற்றும் 8ஆவது மாத்திரைகள் மிகக் கூர்மையுடன் மிருதங்கத்தில் ஒலித்து நமக்கு பல வண்ணங்களைக் காட்டுகிறது.
பல்லவி பற்றார்வக் கிளர்ச்சியுடன் அவிழ்கிறது.இனிய பண்போடு கூறுணர்வும் நிறைந்த இதில், ஜானகியின் இனிமையான குரல் மெல்லமைதிப் படுத்துகிறது.
பாட்டிடை முதல் இசைக்கருவிகளின் சேர்ப்பில், காதைக் கவந்து இழுக்கக்கூடிய பல அதிசயங்கள் இருக்கின்றன.
முதலில் , மின் அணு வயலினின் இழைவியக்கம் தாள இசைக்கருவி இல்லாமலே தடையின்றிச் செல்கிறது.வண்ணங்களின் சிறிய பாயொளியினை நரம்பிசைக் கருவி காட்ட, தாள வாத்தியம் இப்பொழுது அதனுடன் சேர்கிறது.ஒப்பற்ற ஊக்கத்துடன் தனது பயணத்தைத் தொடரும் வயலினுடன் அதன் நண்பர்களும் சேர்ந்து கொள்கின்றன.இதைக் கண்டு மனம் மயங்கிய புல்லாங்குழல்,அளப்பறியா கற்பனா சக்தியுடன் வாசித்து நம் மனங்களை உருக்குகிறது.வாளின் கூர்மையுடன் உள்ளே நுழையும் கிடார், தனது இசைத் தோழர்களை வரவேற்கிறது.வயலின்கள்,விளையாட்டுடன் குறுக்கு நெறுக்காக கிடாரைப் பின் தொடர்கிறது.
கனிந்த குழல், சக்தியினை ஒருமுகப்படுத்தி, ராகத்தின் தனிதன்மையினை நமக்குக் காட்டி, சரணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
சரணம் ஒத்திசைவுடன் அழகாகப் பாய்கிறது.
முதல் பகுதி,மென்மையான நறுமணத்தைப் பரப்புகிறது.
இரண்டாவது பகுதி,ஒரு பளபளப்பான சித்திரம்.மேல் ஸ்தாயியை அனாயாசமாகத் தொட்டு உச்சத்தைக் காண்பிக்கும் குரல்.அதன் இடையே ராகத்தின் ஆழத்தைக் காண்பித்து வசீகரிக்கும் புல்லாங்குழல்.
சரணத்தின் இறுதிப் பகுதி மென்மையாக தென்றல் போல் அசைகிறது.
இரண்டாவது இடை இசைச் சேர்ப்பு லய படிமங்களையும், பண்ணிசையினையும் ஒன்று சேர்ந்து அணிகலனாக்கி வரைந்த ஒரு நுண்நய ஓவியம்.
மேல் காலத்தில் ஒலிக்கும் 'த க தி மி' நட்புடன் நரம்புக்கருவியின் இன்னிசைக்குப் பதில் கூறுகிறது.உள்ளே அமிழ்ந்து கிடக்கும் பரவசத்தை வீணை வெளிக்கொணர்ந்து வருகிறது.
ஒளிக்கற்றைகள் ஒன்றாகக் கூடுவதை முனைப்பான குழலோசையில் காண்கிறோம்.துடிப்பான சந்தூரும்,செழுமையான வயலின்களும் ஒளியை ஒன்றிணைக்கின்றன.
ராகத்தின் அழகொளி நமது ஆழ்மனத்தினுள் கசிந்து செல்கிறது.
வண்ணங்கள் ஸ்வரங்களாக வருகின்றன.ஸ்வரங்கள் வர்ணச்சாயல்களுடன் வந்து நம்மையெல்லாம் ஒன்று சேர்க்கின்றன.
பந்தத்துள் சிறைப்படுத்துகின்றன.
ஆயிரம் ஜன்மங்கள் தொடரும் இந்த பந்தம்.நமக்கும் அவர் இசைக்கும் உள்ள ராக பந்தம்...
Showing posts with label நியாய கெடித்து. Show all posts
Showing posts with label நியாய கெடித்து. Show all posts
Monday, 29 August 2011
Subscribe to:
Posts (Atom)