Monday, 1 September 2025

இளையராஜா - கனிந்த, கணித, கணித்த, இசை வல்லுனர்

 

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தான் இருந்தான் உணர்ந்தெட்டே.

 

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஒன்பதாய்,

பத்து நால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்,

பத்தின் ஆய தோற்றமோடு ஓர் ஆற்றல் மிக்க ஆதிபால்,

பத்தராம் அவர்க்கு அலாது, முத்தி முற்றல் ஆகுமே?

இது என்ன?

ஒன்று, இரண்டு, மூன்று… என்று எண்ண சொல்லித் தரும் கணக்கு வகுப்பா? இதற்கும் இசைக்கும் என்ன தொடர்பு? விளக்கம் கூறுவதற்கு முன், இந்தப் பாடல்கள் தெரிவிக்கும் செய்தி என்ன என்பதைப் பார்ப்போம்.

இறைவன் ஒருவனே. அசையா சக்தியாகிய அவனிடமிருந்து அசையும் சக்தியாகிய அருள் வெளிப்படுகிறது. அவனே, படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செய்கைகளையும் செய்கின்றான். நான் கு வேதங்களிலும் அவனே நிற்கின்றான். ஐந்து பூதங்களும் அவனே. மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விஷுத்தம், ஆஞ்ஞை ஆகிய ஆறு சக்கரங்களாக மனித உடலில் இருக்கின்றான். யோக சக்தியின் மூலம் குண்டலினியை எழுப்பி, ஏழாவது சக்கரமாகிய சஹஸ்ரார சக்கரத்தையும் தாண்டி, சூனியத்தில் நிலைத்திருக்கின்றான். ஐம்பூதங்கள், ஆதவன், நிலவு மற்றும் உயிர், என எட்டிலும் நிறைந்துள்ளான். இவற்றை உணர்ந்து, அவனை எட்டுவதே வாழ்வின் நோக்கம்.

இது முதலாவது செய்யுளின் பொருள்.

பத்து திசைகளுக்கும், பத்து திசைகளைக் காவல் காப்பவர்களுக்கும், அவனே தலைவன். ஏழு ஸ்வரங்கள், ஒன்பது ரசங்கள், இவற்றுக்கு அடிப்படையானவன். பதினான்கு உலகத்தார் காண, பத்து அவதாரங்களை எடுத்தான். அவன் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு மோக்ஷம் என்பது கிடைக்கவும் சாத்தியமா?

இது இரண்டாவது செய்யுளின் பொருள்.

தனது ஞானத்தின் மூலம் மூலத்தை அறிந்து, மூலப்பொருளைத் தனது தமிழ்ப் புலமை மூலம் உலகிற்குக் காட்டிய திருமூலரும், எத்திக்கும் தித்திக்கும் தமிழ் என்னும் அமுதை, தாள லயத்துடன்  பாடல்களில் குழைத்து, இன்னும் தித்திக்க வைத்து திருமழிசை என்னும் ஊரில் வாழ்ந்த திருமழிசையாழ்வாரும், எண்களை வைத்து  நமது எண்ணங்களை ஆட்கொண்டதன் நோக்கம்?

எண்கள் நமது வாழ்வின் அடிப்படை என்பதை உணர்த்துவதற்காகத் தான். எண்கள், நமது வாழ்வில் பின்னிப் பிணைந்திருப்பதை நாம் அறிய வேண்டும் என்பதற்காகத்தான். எண்களும் , பரம்பொருளும் வேறு வேறு இல்லை என்ற உண்மையை நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.

எண்கள் இல்லாமல் இசை இல்லை, பாடல்களின் பின்புலமாக இயங்கும் ஸ்வரங்கள் ஏழு. இவையே இசையின் அடிப்படை. என்றாலும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் எண்கள் தோன்றுவது தாளம் என்ற அமைப்பில்தான்.

கட்டுக்கோப்பான இந்த எண்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அந்தக் கட்டுக்கோப்பை உடைப்பது போல் உடைத்து, பின்னர் உடனே கட்டுக்கோப்பாக க் கொண்டு வருபவர்கள் வித்தகர்கள். இளையராஜா என்னும் மாபெரும் கலைஞர், இந்த வித்தகர் வரிசையில் முதல் வரிசையில் இருப்பவர். பல்லாயிரக் கணக்கான பாடல்களில், தனது விளையாட்டை அவர் காட்டியிருந்தாலும், இன்று நாம் காண இருக்கும் பாடலில் அவர் செய்திருக்கும் கை வண்ணம், உயர்வண்ணம்; நமது கால்களையும் கட்டிப் போடும் கால் வண்ணம்.

இந்த வண்ணத்தின் அழகை ரசிப்பதற்கு முன்பாக, அடிப்படை தாளங்களைப் பற்றி மிகவும் சுருக்கமாகக் கவனிப்போம்.

த க – என்பது இரண்டு.

த கி ட – என்பது மூன்று. இது திஸ்ரம் என்ற பெயரில் அறியப்படுகிறது.

த க தி மி – நான் கு- இது சதுரஷ்ரம் அல்லது சதுஷ்ரம்.

த க த கி ட -ஐந்து – கண்டம்.

த கி ட த க தி மி – ஏழு – மிஷ்ரம்.

த க தி மி த க த கி ட – சங்கீர்ணம்.

பாடல்களில் இதனை இன்னும் சுருக்கி, பெருக்கலாம். அதாவது, தாளம் போடும் இசைக்கருவியின் வேகத்தை அதிகமாக்கினால், எண்ணிக்கையும் அதிகமாகும். நான்கு, எட்டாகலாம், பதினாறாகலாம், முப்பத்து இரண்டாகலாம்.

இப்பொழுது பாடலுக்குச் செல்வோம்.

2011 ஆம் ஆண்டு வெளியான ‘சித்திரையில் நிலாச் சோறு’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே’ என்ற பாடலே இன்றைய சிறப்புப் பாடல். கைவண்ணத்தையும் , கால்வண்ணத்தையும் சேர்த்து நமது எண்ணத்தை வண்ணமாக்கும் பாடல்.

எட்டு துடிப்புகளைக் கொண்ட ஆதி தாளம் என்னும் மிக அடிப்படையான தாளத்தில் அமைந்துள்ளது இப்பாடல். தாள வாத்தியம் எதுவும் இல்லாமல், இன்னிசை வாத்தியங்கள் மட்டுமே ஒலிக்கின்றன முகப்பு இசையில்.

மூன்று சுழற்சிகளுக்குப் பிறகு பெண் குரலில் தொடங்குகிறது பல்லவி. முதல் சுழற்சியிலும் தாள வாத்தியம் எதுவும் இல்லை. பிறகு நடக்கிறது மாயாஜாலம். சற்று முன் கூறியபடி, எட்டு பதினாறாக உடைக்கப்படுகிறது. பொதுவாக மற்றவர்கள், இந்தப் பதினாறையும் நமக்கு ஏன் வம்பு என நான்கு நான்காகவே பிரித்து விடுவார்கள். ஆனால், எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும், இந்த லய ராஜா, பெரும்பாலான பாடல்களில் வெவ்வேறு வகையாகப் பிரிப்பார். எனினும், இந்தப் பாடலில் அவர் செய்திருப்பது வியப்புக்குறிய வித்தியாசம்.

தாள வாத்தியத்தை  த க தி மி/த கி ட/ த க த கி ட/ த க தி மி – அதாவது 1 2 3 4/ 1 2 3/ 1 2 3 4 5/ 1 2 3 4- என்று பிரிக்கிறார். இதில் முதலாவது பாதியினை மிஷ்ரம் என்று கொள்ளலாம், இரண்டாவது பாதியினை சங்கீர்ணம் என்று கொள்ளலாம். இதிலும், ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. மிஷ்ரம் என்பது த கி ட/ த க தி மி என்று முன்பே குறிப்பிட்டேன். இதனை த க தி மி /த கி ட என்று மாற்றினால், அதற்கு விலோமம் என்று பெயர். எனினும் சங்கீர்ணத்தில் விலோமம் என்பது எனக்குத் தெரிந்த வரையில் இல்லை. புதுமை எனது பதுமை என்று இயங்குபவர்களுக்கு எதுவும் சாத்தியமே.

முதலாவது இடையிசையில் இந்த அமைப்பை த கி ட / த க த கி ட/ த க தி மி/ த க தி மி, என்று மாற்றுவதையும், இரண்டாவது இடையிசையில் பெரும்பாலான பகுதியில் தாள வாத்தியமே இல்லாமல் செய்வதையும், பிறகு மேற்கத்திய தாள வாத்தியமாகிய ட்ரம்ஸ் த க தி மி என்று நான்கு நான் காகச் செல்வதையும் , அழகுணர்ச்சியுடன் விவரிக்க கம்பனோ, கண்ணதாசனோ வேண்டும். நான் வெறும் இசை தாசன் மட்டும் தானே?

தாள கதியினைப் பற்றி மட்டும் விலாவாரியாகப் பேசியதால், இதில் ராகம் இல்லை என்று கருத வேண்டாம். மங்களகரமான ராகம் என்று போற்றப்படும் ஹம்சத்வனி என்ற ராகத்தில் அமைந்துள்ளது இந்தப் பாடல்.

இரண்டு குழல்கள் தனித்தனி இசைக்கோர்ப்பை சேர்ந்து இசைக்க, இணைப்பாக்கி எனப்படும் சிந்தசைசர் கிடார் ஒலியினையும், தொடர்ந்து வயலின் குழு ஒலியினையும் கொடுக்க, குழல்களும் தொடர்ந்து இசைக்க, ப்ரியதர்ஷினியின் குரலில் தொடங்குகிறது பல்லவி.இணைப்பாகிகள் அவ்வப்பொழுது குரலுடன் இணைய, பல்லவி தொடர்கிறது.

குழல்களும் ஜால்ராவும் , வயலின்களும் புடை சூழ, கிடார், ஹம்சத்வனியை அள்ளித் தருகிறது.

‘ நானும் வள்ளல்தான், இசை வள்ளல்தான் ’ என குழல், குரல்களுக்கு இடையில் கூவுகின்றது சரணத்தில்.

அதே வேகத்தில் இரண்டாவது இடையிசையில் குழல் குழு சற்றே வித்தியாசமாக தொடர்ந்து இசைக்க, செல்லோ என்னும் இசைக்கருவி சேர்ந்து கொள்ள, ஹம்சத்வனி மேற்கத்திய ஆடை அணிந்து நடனமாடுகிறது. இணைப்பாக்கி கிடாரும், வயலின்களும் தொடர்ந்து, ஹம்சத்வனியின் வேறு பரிமாணங்களைக் காட்டுகின்றன. இறுதியாக வயலின் கள் ‘ஸா நி ப ம க’ என்ற அவரோஹணத்தை இசைக்கின்றன.

அவரோஹணம்/ஆரோஹணம், திஸ்ரம், சதுஷ்ரம்,கண்டம், மிஷ்ரம், சங்கீர்ணம், விலோமம்..

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து..

இவை எண்களா? எண்ணங்களா? வண்ணங்களா?


எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

பி.கு : இந்தப் பதிவு 'கீதாஞ்சலி' என்னும் நிகழ்வை ஒட்டி எழுதப்பட்டு, நிகழ்வின் பொழுது, ப்ரத்தியேகமாக அழைக்கப்பட்ட சில ராஜா ரசிகர்களுக்காக வாசிக்கப்பட்டது. நிகழ்வு நடந்தா நாள் - ஆகஸ்ட் 31.
 

 



No comments: