தெய்வீகத்தில் மூழ்கி, லயித்த திருஞானசம்பந்தர் இவ்வாறு பாடுகிறார்:
'குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய்
சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்திலங்கு சோதி நீ
கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்றிவை
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பதென் முகம்மனே.’
‘அழுக்காறும் நீயே. இனிய குணமும் நீயே. உறவும் நீயே. எப்பொழுதும் கனன்று கொண்டிருக்கும் ஜோதியும் நீயே. நான் படித்த, கற்றுணர்ந்த நூல்கள் யாவையும் நீயே. செல்வ வளமும் நீயே. இன்பமும் நீயே. அனைத்தும் நீயே. உன்னை நான் என்ன புகழ்வது?’
என்பது இதன் பொருள்.
அழுக்காறில் தொடங்கி, இறுதியில் ‘அனைத்தும் நீயே’ என்று கூறியதும், ‘உன்னை என்ன புகழ்ந்தாலும் அது போதுமா’ என்றும் பாடியிருப்பது தெய்வீகத்தில் மெய்மறந்த நிலை எனலாம்.
இன்னொரு கவிஞராகிய நம்மாழ்வார்,
'நாம் அவன் இவன் உவன், அவள் இவள் உவள் எவள்,
தாம் அவர் இவர் உவர், அது இது உது எது,
வீம் அவை இவை உவை,அவை நலம், தீங்கு அவை,
ஆம் அவை, ஆயவை, ஆய் நின்ற அவரே’
என்று பாடுகிறார்.
‘'நாம்' என்ற பெயர்ப்பொருளும், ஆண்பால் பெயர்ப்பொருள்களும், பெண்பால் பெயர்ப்பொருள்களும், ஒன்றன்பால் பெயர்ப்பொருள்களும், பலர்பால் பெயர்ப் பொருள்களும், அழிகின்ற பொருள்களும், நல்ல பொருள்களும், தீய பொருள்களும், உண்டான பொருள்களும், உண்டாகும் பொருள்களும், ஆகி நிற்கின்ற எல்லாப் பொருள்களும் அவனே’, என்பதே இதன் பொருள்.
இது மெய்மறத்தலில் இன்னொரு நிலை.
இரண்டு பாடல்களிலும் கவி நயம் இருப்பதோடு, தமிழின் அழகு மிளிர்வதோடு இன்னொரு விஷயமும் இருக்கிறது.தெய்வீகம் அல்லது இறைமை என்பதே அது.
இந்த தெய்வீகம் என்பது என்ன?
இறைமறுப்புக் கொள்கையுடையவர்களுக்கு, இந்த சொல்லைக்கேட்டால் நகைச்சுவையாக இருக்கும்.
இந்த உணர்வு என்ன இறை நம்பிக்கை இருப்பவர்களுக்குத் தான் சொந்தமானதா?மற்றவர்களுக்கு அறவே இல்லையா?
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் இவ்வுணர்வு உண்டு. எப்படி?
சற்று யோசிக்கலாம்.
நமது வாழ்வில், சில அல்லது பல தருணங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவைகளாக இருக்கின்றன.அந்தத் தருணங்களில் நமக்கு நிகழ்வது என்ன என்பதை நம்மால் கண்டிப்பாக விவரிக்க இயலாது. அந்தத் தருணங்களில், நம்மை நாமே மறந்து விடுவோம். அதிர்வுகள் ஏற்படும். காலம் நின்று போனது போல் தோன்றும். ஆனந்த பரவசம் தோன்றும் அப்பொழுது. மனம் அமைதி பெறும். எங்கும் சாந்தி நிலவும்.
இவையெல்லாம் நிகழ்வது எப்பொழுது? இனிமையான இசை நம் செவிகளில் பாயும்போது.
இசையை நாம் காண முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்.இப்படி நம்மை மெய்மறக்கச் செய்யும் இசையனுபவத்தை தெய்வீக அனுபவம் என்று கூறுவதில் தவறேதும் இருக்க முடியுமா?
இசை, அக உணர்வு, அக எண்ணம் சார்ந்ததாக இருந்தாலும், எந்த இசை நமக்கு மகிழ்ச்சி மற்றும் அமைதி தந்து நம்மை லயிக்க வைக்கிறதோ, அதுவே சிறந்த இசை என்று கருதப்படுகிறது.
காலத்தைக் கடந்து, காலத்தையும் வென்ற படைப்புகளை அளித்த பல சிறந்த இசை வல்லுனர்களை இந்த உலகம் கண்டிருக்கிறது.அவர்களது இசையின் தாக்கம் நம் வாழ்வில் ஏற்படுத்திய, ஏற்படுத்தி வரும் பாதிப்பு அளவிடமுடியாதது.
இந்த மிகச் சிறந்த வல்லுனர்களுள் ஒருவர் திரு.இளையராஜா அவர்கள். அவரது படைப்புகள், பெரும்பாலும் திரைப்படங்களுக்காகவே இருந்தாலும், அவற்றின் ஆழம், அகலம், உயரம், அளவெல்லை இவை யாவும், இசையின் புதிய பரிமாணங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. கண்டுகொள்ள வைக்கின்றன. நமக்குள்ளே அதிர்வுகளை ஏற்படுத்தி, நம்மை ஒத்திசைக்க வைக்கின்றன.
எனவேதான், பண்டிதர்களையும், பாமரர்களையும் ஒருங்கே கட்டிப்போடுகிறது அவருடைய இசை.
இன்றைய தினம் நாம் காணப்போகும் அவரது பாடல் மிகவும் சிறந்த ஒன்று. இந்தப் பாடல், இறைத்தன்மையை புகழ்வதோடு மட்டுமன்றி, இசையின் பல நுணுக்கங்களும் கொண்டிருக்கிறது. இதில் யாருமே இதுவரை செய்யாத ஒரு புதுமையும் இருக்கிறது.
ஒரே பாடல், பல ராகங்களைக் கொண்டு அமைந்திருப்பது புதிது அல்ல.கர்னாடக இசையில், இந்த வகையினை 'ராகமாலிகா' என்று அழைப்பார்கள். இந்தப் பாடலிலும் மொத்தம் 8 ராகங்கள் இருக்கின்றன. ஆனால், அதில் 3, மேளகர்த்தா முறைப்படி, ஒரே சக்கரத்தில் அமைந்திருக்கிறது. அதிக நுணுக்கங்களுக்குச் செல்லாமல், மேலெழுந்தவாரியாக இதனை விளக்குகிறேன்.
மொத்தம் இருக்கும் 72 மேளகர்த்தா ராகங்கள், 12 சக்கரங்களாக பிரிக்கப்பட்டு, ஆறு மேளங்கள் அதாவது ராகங்கள் ஒரு சக்கரத்தில் இருக்கின்றன.இந்த 6 ராகங்களிலும் 'ரி', 'க,' 'ம' என்ற 3 ஸ்வரங்களும் ஒரே வகையைச் சார்ந்தவை. 'த' மற்றும் 'நி' மட்டும் மாறுபடும். இதைப் பற்றி இன்னும் சற்றே விரிவாக பாடல் பற்றி விளக்கும்பொழுது காணலாம்.
இது போல் ஒரே சக்கரத்தில் அமைந்த ராகங்கள் ஒரே பாடலில் வருவது இதுவே முதல்முறை. திரு.கோடீஸ்வர ஐயர் இயற்றிய மேள ராக மாலிகாவில் மட்டுமே எனக்குத் தெரிந்து இவ்வாறு அமைந்திருக்கிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த அந்தப் பாடல்தான் என்ன?
'கவிக்குயில்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற
'ஆயிரம் கோடி காலங்களாக..' என்னும் பாடலே அது.
உன்னதமான ஜலதரங்கத்திற்கு, திடமான பகாவஜ் பக்கபலமாக அமைய கூர் உணர்வுடன் பண்பட்ட இசை மாயாமாளவகெளள ராகத்தில் ஒலிக்க, ஆரம்பிக்கிறது பாடல். உணர்ச்சி பொங்க எழும் குழலோசை, சுடரொளி விட்டுவரும் ஆன்மீகத்தன்மையுடனும், சலசலக்கும் அழகுடனும் ஒலிக்கிறது. இனிய இன்பமூட்டும் வீணை தனது தலையை அசைத்து, தெய்வீக அனுபவத்திற்கு முகமன் கூறுகிறது.
பல்லவி, அனாகத எடுப்பு, அதாவது தாளம் ஆரம்பித்த பிறகு - இந்தப் பாடலில் குறிப்பாகச் சொல்வதானால் முக்கால் இடம்- தள்ளி ஆரம்பிக்கிறது. திரு.பாலமுரளிகிருஷ்ணாவின் இனிமையான குரல், ஆழ்ந்த செவ்விசையுடன் ஒன்று கலந்து, 'ஆயிரம் கோடி காலங்களாக' என்று ஒலிக்கிறது. 'ஆனந்த லீலையின்' என்ற சிறுதொடர் வரும்பொழுது, வகுளாபரணம் என்னும் ராகமாக மாறிவிடுகிறது.
வகுளாபரணம் 14 ஆவது மேளம், மாயாமாளவகெளள, அதன் அடுத்த, அதாவது 15ஆவது மேளம். இரண்டையும் வேறுபடுத்துவது, 'நி' என்ற ஸ்வரம். முன்னதில் உள்ளது கைசிகி நிஷாதம், பின்னதில் உள்ளது காகலி நிஷாதம்.
முதலாவது இடையிசையில், முதலில் பிறங்கொளியுடன் ஜலதரங்கம் மின்னுகின்றது. இப்பொழுது ஒரு மாயம் நிகழ்கின்றது. அடுத்த சுருதியில், குழல் வாசிக்கிறது.இப்பொழுது ராகம் 34ஆம் மேளகர்த்தாவாகிய வாகதீஸ்வரியாக மாறுகிறது.இதில், இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 1.இது கிரஹ பேதம் அல்ல. 2.வாகதீஸ்வரியின் சில சுவரங்களே வாசிக்கப்படுகின்றன.
பக்தியுடன் துடிக்கும் குழல், புலன்கடந்த தன்மையுடன் சுடர்விடுகிறது.
வீணை ஒயிலுடன் மாயாமாளவகொளள ராகத்தை அழைத்து வருகிறது.
முதலாவது சரணத்தின் முதல் பகுதி, நேர்த்தியுடன் மினுமினுக்கிறது. 'மார்கழி மாத' என்ற வரியிலிருந்து வகுளாபரணம் மறுபடி வருகிறது.
இடைவெளியில்லாத அற்புதம்!
இரண்டாவது இடையிசையில், இன்னொரு திடீர் திருப்பம். வலஜி என்னும் ராகத்தை குழல் இசைக்கிறது. ஐந்தே சுவரங்களைக் கொண்ட இந்த ராகம் மிகவும் இதமானதொரு ராகம்.இந்த ராகத்தின் பண்சார்ந்த பல பரிமாணங்களை குழல் இசைக்க, இன்னொரு அதிசயம் நமக்காகக் காத்திருக்கிறது.
தொடர்ந்து வரும் வீணை, சக்கரவாகம் என்னும் ராகத்தை வாசிக்கிறது. இது இரண்டு விதங்களில் தலைசிறந்த வரைக்கீற்று.வலஜி என்னும் ராகம் இசைக்கோட்பாட்டின்படி, 28ஆவது மேளமாகிய ஹரிகாம்போஜியில் உதயமாகும் ஒரு ராகம். என்றாலும், இதில் உள்ள சுவரங்களாகிய ஷட்ஜமம், அந்தர காந்தாரம், பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் என்ற சுவரங்கள், சக்கரவாகத்திலும் இருக்கின்றன.அதாவது இவற்றுடன், சுத்த ரிஷபம் மற்றும் சுத்த மத்தியமம் என்னும் சுவரங்களைச் சேர்த்தால், சக்கரவாகம் ஆகும்.
மேலும், சக்கரவாகம் மாயாமாளவகொளள மேளத்திற்கு அடுத்த மேளமாகும்.எனவே, அக்னி சக்கரத்திலிருக்கும் அடுத்த ராகம் ஒரே பாடலில் வருகிறது.
குழலோசை இசைத்துண்டின் இன்னொரு சிறப்பு, கஞ்சிரா என்னும் கர்னாடக இசைக்கச்சேரிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் தாள இசைக்கருவி உடன் ஒலிப்பதாகும்.
இரண்டாவது சரணம், இந்த ராகத்தின் பலமுகங்களைக் காட்டுகிறது. இசைக்கவிதை சொற்றொடர்களைத் தவிர, ஆழ்ந்த விசாரமுள்ள உயிர்ப்பூட்டும் அகாரங்களும், இரண்டு ஆவர்த்தனங்களுக்கு இருக்கின்றன. இந்த ராகத்திற்கே உரித்தான வாசத்தை 'பாற்கடல் அமுதாக' என்னும் வரியில் உணர்கிறோம்.
மூன்றாவது இடையிசையில், குழல் முதலில் மோஹன ராகத்தையும், தொடர்ந்து மோஹன கல்யாணி ராகத்தையும் இசைக்கிறது. இனிமையான நுட்பத்துடன் வீணையும் மோஹன கல்யாணியை இசைக்கிறது. வலஜி ராகத்தின் பொழுது ஒலித்த கஞ்சிரா, இப்பொழுது மறுபடி ஒலித்து, மோஹன கல்யாணியோடு சேர்ந்து புன்னகைக்கிறது.
மோஹனத்தில் ஆரம்பிக்கும் மூன்றாவது சரணம், நம்மை உச்சநிலைக்குறிய ஆன்மீக தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. 'அருள் காக்கும்' என்னும் வரியில், மோஹனம் சாருகேசி என்னும் ராகத்திற்கு மாறுகிறது. 'மார்கழி மாத' என்ற வரியிலிருந்து வகுளாபரணம் மீண்டும் வருகிறது.
இறுதியில் வரும் குழலோசை மாயாமளவகொளளயை முனைப்புடன், தீவிரத்துடன், ஆழமாக, மென்மையாக இசைக்கிறது.
இது, தெய்வீக மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் சென்று, ஆன்மீகத்தின் மையத்தை நமக்கு உணர்த்தும் பயணம்.
ஆயிரம் கோடி காலங்களுக்கு நிலைக்கும் இந்த ஆனந்த லீலை...
Showing posts with label அக்னி சக்கரம். Show all posts
Showing posts with label அக்னி சக்கரம். Show all posts
Monday, 27 August 2012
Subscribe to:
Posts (Atom)