Wednesday 3 June 2020

இளையராஜா- சூரிய கிரணம்


காலைப் பொழுது இனிமையானது. அழகானது. சக்தி மிக்கது. சக்தி தருவது. நாளில் பல வேளைகள் இருந்தாலும் காலை வேளை போன்ற பொன்னான வேளை எதுவும் இல்லை. நாளின் பல வேலைகளுக்கு நம்மைப் பண்படுத்தும் காலை வேளை இசை நயம் மிக்கது.

இந்தக் கவிதையை சற்றுக் கவனிப்போம்:

தெள் விளிச் சிறி யாழ்ப் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி
வள் விசிக் கருவி பம்ப வயின் வயின் வழங்கு பாடல்,
வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும்பொற் பள்ளி
எள்ள அரும் கருங்கண்-தோகை இன்துயில் எழுப்பும் அன்றே.

பழிப்பதற்கரிய கருமை நிறக் கண்களையுடைய மயில் போன்ற சாயல் உள்ள பெண்கள் வெள்ளை வெளேரென ஒளி வீசும் மாடங்களில், பசும்பொன் கட்டிலிலே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெளிந்த இசை கொண்ட சிறிய யாழையுடைய பாணர்கள், வாரால் இழுத்துக் கட்டப்பட்ட முழவுகள் ஒலிக்க பாடிக் கொண்டே செல்கிறார்கள். இந்த இசையைக் கேட்ட பெண்டிர் மெதுவாகக் கண் விழிக்கின்றனர்.

தனது கற்பனைக் கண்களில் கோசல நாட்டைக் கண்ட கம்பன் தீந்தமிழில் வடித்த கவிதை இது.

கவிச் சக்கரவர்த்தி காலைப் பொழுதை இவ்வாறு வர்ணித்தால், தொண்டர்களது காலின் பொடியை அமுதாக நினைத்த இன்னொரு தமிழ்க் கவிஞர் ஒரு படி மேலே போய், அந்தப் பரம்பொருளையே எழுப்புகிறார்:

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்.
துண்ணிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படரொளி பசுத்தினன் பனி மதி, இவனோ
பாயிருள் அகன்றது; பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற,
வைகறை கூர்ந்தது மாருதம், இதுவோ!
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே!

எல்லாத் திசைகளிலும் ஒளி பரந்தது. வான் மதியும், தாரகைகளும் ஒளி மங்கிக் கொண்டு வருகின்றன. பாக்கு மரங்களிலிருந்தும் பால் மணம் வீசுகின்றது. பூந்தென்றல் மென்மையாக வீசுகின்றது. இத்தோற்றத்தைக் காண நீ எழுந்தருள்வாயாக, என்று படைத்தவனையே, அவன் படைத்த உலகை, காலை என்னும் அதிசயத்தைக் காண எழுப்புகிறார் ஆழ்வார்களுள் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார்.

இயற்கையின் சக்தி அது தான். மாபெரும் கவிஞர்களுக்கு, கலைஞர்களுக்கு மஹா சக்தி தரும். அது நம்மிடையே பரவி, நம்மையும் தாக்கும். ஆக்கம் நிறைந்த இந்த தாக்கம் நம்மை ஊக்கமடையச் செய்யும்.
இளையராஜா என்னும் ஒப்பில்லா கலைஞன் இவ்வுலகில் உதயமாகி 77 ஆண்டுகள் ஆகும் இந்தப் பொன்னான நன்னாளிலே காலைப்பொழுதை நமக்கு நினைவூட்டி நம்மை இன்ப உலகிற்கு அழைத்துச் செல்லும் ஒரு பாடலைப் பார்க்கலாம்.

1990ஆம் ஆண்டு வெளி வந்த தெலுங்குத் திரைப்படமான ‘ஜெகதேக வீருடு அதி லோக சுந்தரி’ என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அந்தாலலோ அஹோ மயம்’ என்ற பாடல், காலை வேளை நமக்குத் தரும் நேர்மறை உணர்வுகளை அழகுணர்ச்சியோடு தருகிறது.

பஹாடி என்னும் ராகத்தில் அமைந்த இந்தப் பாடல், மலையினின்று தவழ்ந்து வரும் காற்று போல நம்மைத் தழுவுகிறது. பஹாடி என்னும் ராகமே ஒரு வித்தியாசமான ராகம். இதனை ஆரோஹணம்/அவரோஹணம் எனும் ஒரு அமைப்புக்குள் கொண்டு வருவது இயலாத ஒரு விஷயம். ஸ்வரங்களைப் பாடும் முறையை வைத்தே இந்த ராகம் அமைகிறது. மோஹனம் என்னும் ராகத்தில் இருக்கும் ஸ்வரங்கள் இதற்கும் உண்டு என்றாலும், பாடும் விதத்தில் இரண்டும் பெரிதும் வேறுபடுகின்றன. அன்னிய ஸ்வரங்கள் இந்த ராகத்தில் கலக்கும்பொழுது இது இன்னும் அழகாகப் பரிமளிக்கிறது. ப த ஸ ரி க ப த ஸா,, ஸா த ப ம க ப த ஸ் போன்ற பிடிகள் இந்த ராகத்தை அடையாளம் காட்டும் சில துளிகள்.

பல திரையிசைப் பாடல்கள் இந்த ராகத்தில் இருந்தாலும், இளையராஜா அவர்கள் இந்த ராகத்தைக் கையாண்டிருப்பதில் ஒரு லாகவம் இருக்கிறது. நூற்றுக்கணக்கான பாடல்களை இந்த ராகத்தில் அவர் அமைத்திருக்கிறார். சுற்றிலும் மலை சூழ்ந்த கிராமத்தில் வளர்ந்து இயற்கையோடு ஒன்றிய இவர், பஹாடி ராகத்தை மனதார விரும்புவது இயற்கையான ஒரு நிகழ்வுதான்.

‘அந்தாலலோ’ வின் சிறப்பு, அன்னிய ஸ்வரங்களின் கலப்பு இதில் இல்லாமல் இருப்பது.

பாடலை இப்பொழுது கவனிப்போம்.

இரண்டு தொகுதிகளாகப் பிரிந்து, வெவ்வேறு ஸ்வரக்கட்டுகளை ஒரே சமயத்தில் வாசித்து மென்மையாகவும், சீறிப் பாய்ந்தும் வருகின்றன வயலின்கள். வானிலிருந்து வரும் ஒளிக் கற்றை போல் வரும் குழல், ஒளியினை எங்கும் பரப்புகிறது. தேவதைகள் போல் கீழே இறங்கும் கோரஸ், அந்த ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த அதிசயத்தைக் கண்டு, ஆச்சரியமடையும் பிற வயலின்கள் பின்னணியில் இசைக்கின்றன. ஒரு சில வயலின்கள் தந்திகளை மட்டும் மீட்டி, பிட்ஸ்ஸகாட்டோ என்னும் முறையை பின்பற்றி, மென்மையாக நம்மை ஆட வைக்கின்றன. எங்கிருந்தோ வரும் ஜானகியின் குரல், மெதுவாக நம்மை ஆட்கொள்ள, தொடர்கிறது எஸ்.பி.பி.யின் குரல். இதுவரை ஒரு தாள வாத்தியம் கூட இயங்காதது குறிப்பிடத்தக்க ஒன்று.

மூன்று தாள வாத்தியங்கள் இசைக்கின்றன பல்லவியில். லய ராஜாவின் லாகவம் இப்பொழுது நமக்குப் புலனாகிறது. த க தி மி/த க தி மி/த க தி மி/த க தி மி எனச் செல்லும் முறையில், ஒரு தாள வாத்தியம் த வையும் தி யையும் மட்டும் இசைக்க, அடுத்த தாள வாத்தியம் மூன்றாவது அசையான தி யை இசைக்க வரி முடியும்பொழுது த க தி மி/ த க ஆ ஆ ... என மூன்றாவது தாள வாத்தியம் கார்வை கொடுத்து இசைக்க, நம்மை அந்தரத்தில் கொண்டு நிறுத்துகிறது.

பல்லவியின் அமைப்பில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள், அலை போல அடித்து நமக்கும் முகமன் கூறுகிறது.

இந்த அலைகள் கவிதையின் எதுகை மோனை போல ஆடும் அழகினை முதலாவது இடையிசையின் இரண்டாவது பகுதியில் வயலின்களில் காண்கிறோம். அலைகளுக்கு எதற்குத் தாளம்? அவை ஆடுவதே ஒரு தாளம் தானே? எனவேதான், மிக மிக மென்மையாக தாள வாத்தியத்தை இசைக்கச் செய்கிறார் லய ராஜா. இடையிசை தொடங்கும்பொழுது ஒலிக்கும் இசை, காலை நேர கதிரவனின் ஒளிக்கிரணத்தைப் போல் பாய்கிறது. தொடர்ந்து வரும் குழல், புள்ளும் சிலம்பின காண் , கீசு கீசு என்று ஆனைச் சாத்தான் இசைப்பதைக் காண், என்று உதயத்திற்குக் கட்டியம் கூறுகிறது.

மென்மையான காலைத் தென்றல் போல ஒலிக்கின்றன சரணங்கள். கொடிகள் சாய்கின்றன. செடிகள் தலை நிமிர்ந்து மென்னகை புரிகின்றன. மேல் ஸ்தாயியில் செல்லும் இரண்டாவது பகுதியில், பச்சை மரங்களும், அதில் பவளம் போல் மின்னும் பழங்களும், இலைகளும், பெருமிதத்துடன் புன்னகைக்கின்றன.

இரண்டாவது இடையிசையில், சிவப்பு நிறப் பழமாக உதிக்கின்றான் ஆதவன். உதயத்தைக் காணும் குதூகலத்தில், பறவைகள் சிறகுகள் விரிக்கின்றன. வயலின்களும், குழலும் நடத்தும் விளையாட்டில், இன்னும் உயர உயரப் பறக்கின்றன. இந்த இசைச் சேர்க்கையில் தனது கிரணங்களை விரிக்கிறான் சூரியன்.

பரம்பொருளே கண் அகலப் பார்க்கிறான்.

அது ராஜ உதயமன்றோ?

 பி.கு.  இந்தப் பதிவு நேற்று மாலை(ஜூன் 2ஆம் நாள்) ‘ராஜ தீபம்’ எனும் மெய் நிகர் அமர்வில் வாசிக்கப்பட்டது.





2 comments:

Tamijarassane V said...

மிக அருமையான பதிவு. தெளிந்த நீரோடை போன்ற வர்ணனை. பஹாடி ராகத்தைப் பகர்ந்த விதமும் , பாட்டில் அமைந்த நுணுக்கங்களை விவரித்த விதமும் மிக அருமை அய்யா. வாழ்க உங்கள் இசைத்திறன் , வர்ணனைத் திறன். கம்பராமாயணப் பாடல் விளக்கமும் , பாசுரத்தின் விளக்கமும் , காலை நேரக் காட்சிகளை கண்முன்னே நிறுத்தியது....!!

Raj said...

மிக்க நன்றி!!