Wednesday, 4 September 2019

இளையராஜா- எங்கும் வியாபித்திருக்கும் இசை


எங்கும் நிறைந்திருப்பது எது?

காற்றா?  நீரா? ஆகாயமா? இயற்கையா? இல்லை இவற்றையெல்லாம் மீறிய, இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு சக்தியா?

இதுபோன்ற கேள்விகளும், வினாக்களும், தொன்றுதொட்டு இருந்திருக்கின்றன. இன்னும் இருக்கின்றன. இதற்கான விடை கிடைத்ததா? கேள்வி பிறப்பது எப்பொழுதும். நல்ல பதில் கிடைப்பது எப்பொழுது? மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதானே மிஞ்சும்?

2500 ஆண்டுகளுக்கும் முன்பானவை என்று கருதப்படும் தமிழ் சங்க இலக்கியத்தில் பல கேள்விகளும் இருக்கின்றன.நல்ல பதில்களும் இருக்கின்றன. எட்டுத்தொகையில் ஒன்றான ஓங்கு பரிபாடல் என்று ஒரு வெண்பாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘பரிபாடல்’ மிகவும் சுவாரசியமான ஒன்று. அக நூல் என தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதில் இறையுணர்வுப் பாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எனினும், மிக முக்கியமான சிறப்பு இப்பாடல்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களில், இசை பொருந்திய பாடல்கள் பரிபாடலில் இருக்கும் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பண்ணில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்காலத் திரையிசையில் வருவது போல, பாடலாசிரியர் ஒருவர். பண் அமைத்தவர் இன்னொருவர். பிற்காலத்தில் இயற்றப்பட்ட பக்தி நூல்களாகிய தேவாரம், மற்றும் திவ்ய ப்ரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களுக்கு பரிபாடலே முன்னோடி.

இப்பொழுது முதலில் கேட்ட கேள்விகளுக்குச் செல்லலாமா?
பரிபாடலில் வரும் ஒரு பாடலிலிருந்து ஒரு சில வரிகளைப் பார்ப்போம்:

'தீயுனுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீ,
கல்லினுள் மணியும் நீ, சொல்லினுள் வாய்மை நீ,
அறத்தினுள் அன்பு நீ, மறத்தினுள் மைந்து நீ,
வேதத்து மறை நீ, பூதத்து முதலும் நீ,
வெஞ்சுடர் ஒளியும் நீ, திங்களுள் அளியும் நீ,
அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்
உறையும் உறைவதும் இலையே உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை
முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே.'

கடுவனின எயினனார் இயற்றிய இப்பாடலுக்கு பாலைப் பண்ணில் இசையமைத்தவர் பெட்டனாகனார்.

இப்பாடலின் பொருள் என்ன?

‘தீயில் இருக்கும் வெப்பம் நீ. மலர்களின் வாசம் நீ. மணிகளுள் அம்மணியின் தன்மை நீ. சொற்களுள் வாய்மைத்தன்மை நீ. அன்பு நீ.வன்மைப் பண்பும் நீ. வேதத்தின் பொருள் நீ. பூதங்களுள் முதற்பொருள் நீ. சூரியனின் ஒளி நீ.சந்திரனின் குளிர்ச்சி நீ. இங்கு கூறப்படாத எல்லாப் பொருளும் நீ. அவற்றின் உட்பொருளாக இருப்பவன் நீ.எனவே, நீ உறைவதும் இல்லை. உறைவதற்குத் தனியாக ஒரு இடமும் உனக்கு இல்லை. உன்னை சிறப்பிக்கும் காரணமாக தன்னை மறந்து, சிந்தை மறந்து சொல்லப்பட்ட அவை உனக்கு உள்ள தன்மையும் பொய். உலகில் முதலிலும், இடையிலும், இறுதியிலும், படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களைச் செய்யும் பொருட்டு நீ பிறவாத பிறப்பும் இல்லை.அவ்வாறு பிறந்தாயாயினும், உன்னைப் பிறக்கும்படி செய்தவர் எவரும் இல்லை.’

பல தத்துவங்களை உள்ளடக்கிய இப்பாடல், ஆன்மீகத்தின் சாரம் எனலாம்.

கேள்விகளுக்கு இப்பொழுது விடை கிட்டியிருக்கும். அல்லது கிட்டியது போல இருக்கும். அல்லது கிட்டாமலே இருக்கும். விடைகள் கிடைப்பது அழகு. வினாக்களாகவே இருப்பது இன்னொரு விதமான அழகு. ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்குமல்லவா?

இசை என்பதும் கேள்விகள் நிரம்பியவைதான். இந்தக் கேள்விகளால் வேள்விகளை நிகழ்த்துபவர்களை, நாம் என்னவென்று அழைக்கலாம்? ஆன்மீகவாதிகள் என்றா? இசை விற்பன்னர்கள் என்றா? அல்லது இவையெல்லாம் கடந்த மாமனிதர்கள் என்றா?

இசையில் இவருக்கு இருக்கும் ஞானத்தால் மட்டும் இவர் இசை ஞானி இல்லை. ஆன்மீகத்தில் இவர் ஆழ்ந்திருப்பதால் மட்டுமே இவர் ஞானி என்று போற்றப்படுவது இல்லை. இசையென்னும் பெருங்கடலில் ஆழ்ந்து பல நன்முத்துக்களைத் தேடிக் கண்டெடுத்து, அம்முத்துக்களை ஜொலிக்கச் செய்வதாலேயே இவர் இசை ஞானி ஆகிறார்.

அவற்றுள் ஒரு நன்முத்தே இந்த நிகழ்வின் இன்றைய சிறப்புப் பாடல்.
சிறப்புப் பாடல் என்பது பல சிறப்புகள் பெற்றிருப்பதோடு மட்டுமன்றி, தனிச் சிறப்பும் பெற்றிருக்கும் என்பது இந்த நிகழ்வினை கடந்த 11 ஆண்டுகளாக பின்பற்றி வரும் மக்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த வருட சிறப்புப் பாடல் என்ன? அதன் சிறப்பு என்ன?

இசை என்பது 7 ஸ்வரங்களுக்குள் அடங்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு உண்மை. இந்திய இசையின் தனித்தன்மை ராகங்கள் என்பதும் பெரும்பாலான அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆயிரக்கணக்கான ராகங்களில், சில ராகங்கள் மட்டுமே பிரபலமடைகின்றன. அவற்றிலும், குறிப்பிட்ட சில ராகங்கள் மட்டுமே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. ‘ஏன் சில ராகங்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும்? புழக்கத்தில் இல்லாத ராகங்கள் எப்படித்தான் இருக்கும்’, என சில கர்னாடக இசை விற்பன்னர்களுக்குக் கேள்விகள் எழும்பியிருக்கின்றன. அதன் விளைவாக சில புதிய ராகங்கள் பிறந்து, பிறகு பிரபலமும் அடைந்திருக்கின்றன.

திரையிசையில் இது போன்ற கேள்விகள் பலமுறை இளையராஜாவிற்குத் தோன்றியிருக்கின்றன. உதாரணமாக, கீரவாணி என்னும் ராகத்தை எடுத்துக் கொள்வோம். மேற்கத்திய இசையில் ஒரு ஸ்கேலாகவும், கர்னாடக இசையில் மிகவும் சாஸ்திரியமாகவும் கருதப்படும் இந்த ராகத்தில் இசை ஞானி பல பாடல்களைத் தந்திருக்கிறார். கீரவாணியில் இவ்வளவு ஜாலங்கள் செய்ய முடியுமா, இது சாத்தியம் தானா என்று கர்னாடக இசை விற்பன்னர்களே வியக்கும் அளவிற்கு இவர் இதில் விளையாடியிருக்கிறார்.

‘இந்த கீரவாணியில் ஒரு ஸ்வரத்தை மறைத்து விடுகிறேன். அப்பொழுது, இது எப்படி ஒலிக்கும்’ என்று அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும். அதன் விளைவே, இன்றைய சிறப்புப் பாடலின் மெட்டு.
1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘என் அருகே நீ இருந்தால்’ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உதயம் நீயே, உலகம் நீயே’ என்னும் பாடல் கீரவாணி ராகத்தில் இருந்து தைவதம் எனப்படும் ‘த’ வை முழுவதுமாக விலக்கி புனையப்பட்டிருக்கிறது. ராகம் சம்பந்தப்பட்ட நூல்களை ஆராய்ந்தால், இந்த ராகத்தின் பெயர் ‘ரிஷிப்ரியா’’ என்று அறிகிறோம்.
எனினும், இந்த ராகத்தை இவர் 1981ஆம் ஆண்டே ‘கீதாஞ்சலி’ என்னும் தனது முதல் பக்திப்பாடல்களின் தொகுப்பில் பயன்படுத்தியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து சில திரையிசைப் பாடல்களிலும் உபயோகப்படுத்தியிருக்கிறார். அவை என்ன பாடல்கள் என்பதை இன்று பிற்பகலில் காணலாம்.

தெய்வீகம் தவழும் தம்பூரா பின்னணியில் ஒலிக்க, ஜானகியின் அகாரத்தோடு புலர்கிறது உதயம். மேல்ஸ்தாயியில் சஞ்சரித்து, ராகத்தின் சில கோடுகளை நமக்குக் காட்டுகிறது. ஆதவனின் ஒளிக்கிரணங்கள் நம்மை மென்மையாகத் தழுவுகின்றன. வானத்தில் ஒளி வெள்ளம். வண்ணங்களின் வர்ண ஜாலம். இந்த ஓவியத்தை வரைந்தவர் யார்? அதன் தூரிகை எங்கே? மேல்ஸ்தாயியில் சஞ்சரிக்கும் அந்த சில நொடிகளில், நமக்குத் தெரிவது இந்தக் கோலம்.

இந்த உணர்வு கலையாமல் இருக்கும் முகமாகத் தொடங்குகிறது பல்லவி. ஒரு ஆவர்த்தனத்தில் அடங்கும் முதல் வரி, தாள வாத்தியங்கள் இல்லாமல் செல்கிறது. ஒரு சிறு மௌனத்தைத் தொடர்ந்து, அரை ஆவர்த்தனத்திற்கு ஒலிக்கிறது விசைத்தட்டு இசைக்கருவி. தொடர்ந்து வருகிறது இரண்டாவது வரி. மீண்டும் சிறு மௌனம். தொடர்ந்து அரை ஆவர்த்தனத்திற்கு விசைத்தட்டு.

மௌனம் என்பது ஒரு மொழியல்லவா..அதுவே இசையல்லவா..
இப்பொழுது பல்லவி மறுபடி பாடப்படும்பொழுது, மௌனத்திற்கு மரியாதை செலுத்தி ஒதுங்கியிருந்த தபலாக்கள், ஒன்று சேர்ந்து ஒலிக்கின்றன. ஒவ்வொரு ஆவர்த்தனத்தின் இறுதியிலும் ஜால்ராவும் மென்மையாக ஒலித்து உதயவானின் அழகை நமக்கு இன்னும் தெளிவாகக் காட்டுகின்றன. இன்னும் ஒளிந்திருக்கும் அழகைக் காட்டும் முகமாக, ‘மலர்ப்பதமே’ எனும் சொற்றொடர் வரும்பொழுது, விசைத்தட்டு பின்னணியில் சன்னமாக ஒலித்து, ஒளியினைப் பரப்புகின்றது.
ஒளியும் அழகு. ஒலியும் அழகு.இரண்டும் சேர்ந்தால் பேரழகு. ஆதவனும் அழகு. தவழும் காற்றும் அழகு.இரண்டும் சேர்ந்தால் பேரழகு. முதாலாவது இடையிசையில் காற்றில் தவழ்ந்து வரும் புல்லாங்குழல் இதையே நமக்கு உணர்த்துகிறது. இந்தக் குழலோசையில் இருப்பது தேடல். நமது ஆழ்மனத்திற்கும் அப்பால் சென்று நமக்குள்ளே தேடுகிறது. நம்மைத் தேட வைக்கிறது.

‘நிஸகமபா’ என்று ஒலித்து என்னை யாரென்று தெரிகிறதா என்று கேள்வி எழுப்புகின்றது. திடீரென தபலாக்கள் வேகமாக சதுஸ்ரத்தில் ஒலித்து, பிறகு தன்னை மறந்து ஒலிக்காமல் நிற்கின்றன. ஒரு சுற்று சுற்றி வரும் குழலின் ஓசை நம்மை சூழ வலம் வந்து, மௌனத்துடன் அமர்கிறது. அப்பொழுது நம்மைத் தட்டுகின்றன கிடாரும், விசைப்பலகையின் ஒலியும். வித்தியாசமான ஒலி. கதிரவனின் ஒளியின் சக்தியை நமக்கு உணர்த்துகிறதோ?

தாள வாத்தியங்களின் பின்னணி இல்லாமல் இரண்டு ஆவர்த்தனங்களுக்குச் செல்லும் இந்த ஒலியுடன், குழல் இறுதியில் இணைந்து,  நம்மை கை பிடித்து மேலே அழைத்துச் செல்கிறது.
சரணங்களின் ஒவ்வொரு வரியும் நமக்கு காலையின் அழகைக் காட்டுகின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது வரிகளின் இறுதியில் ஒலிக்கும் குழல் தேனுண்ட வண்டு போல் மயக்கத்துடன் ஒலித்து தேன் சொட்டுகளை நமது செவியில் விடுகின்றன.

தொடர்ந்து வரும் வரிகள் மேல்ஸ்தாயி ஸ்வரங்களைத் தொட்டு நம்மை இன்னும் மேலே அழைத்து மிதக்க வைக்கின்றன.

நம்மைப் பறவை போல் பறக்க வைக்கின்றது இரண்டாவது இடையிசையில் வரும் குழலோசை. அதுவும் எப்படி என்று தெரியுமா? குயில் போல தான் கூவுவதன் மூலம். இந்தக் குயிலோசை, முதலில் மூன்று முறை ஒலிக்கிறது. மறுபடி மூன்று முறை ஒலிக்கிறது, இம்முறை சற்றே வித்தியாசமாக. இரண்டாம், மூன்றாம் முறை ஒலிக்கும்பொழுது, தன்னை மறந்து வாசிப்பதையும் விட்டு ரசிக்கின்றது தபலா. தொடர்ந்து இரண்டு முறை ஒலிக்கும் குழல், குழைந்து, நெகிழ்ந்து, மகிழ்கின்றது. எங்கும் நிறைந்திருப்பது என்ன என்று நம்மை வினவுகிறது.

அது என்ன?

காற்றா? ஆகாயமா? ஒலியா? தீயினுள் இருக்கும் வெப்பமா? மலருள் ஒளிந்திருக்கும் மணமா? இவையெல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருக்கும் இசையா?

சில கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அழகு.விடை தெரியாவிட்டால் பேரழகு.

தேடலே வாழ்க்கையன்றோ?

பி.கு. இந்தப் பதிவு 'கீதாஞ்சலி' என்னும்  நிகழ்வில் கடந்த ஞாயிறு செப்டம்பர் முதல் நாளன்று படிக்கப்பட்டது. ஆங்கிலத்திலும் இதே பாடலைப் பற்றிய பதிவு இன்னொரு கோணத்தில் எழுதப்பட்டு, படிக்கப்பட்டது. ஆங்கில பதிவும் இன்னும் சற்று நேரத்தில் இந்த வலைத்தளத்தில் பதிவிடப்படும்.






No comments: