Saturday, 3 November 2018

இளையராஜா- அமைதியான இசையமைப்பாளர்

அமைதி என்றால் என்ன?

நிசப்தம் எனப்படுவது எது?

ஓசை என்பது அறவே இல்லாமல் இருப்பதுதான் அமைதியா?
சப்தங்கள் அனைத்தும் அடங்கி ஒடுங்கி இருப்பதுதான் நிசப்தமா?

இந்த நிலை உண்மையில் சாத்தியம்தானா?

சற்று நேரம் கண்களை மூடிக் கொள்ளுங்கள். செவிகளை மட்டும் நன்கு தீட்டிக்கொள்ளுங்கள்.எவ்வகை ஓசையெல்லாம் கேட்கின்றன, வந்து தாக்குகின்றன என்று கவனியுங்கள். சிறிது நேரம் கழித்துப் பாருங்கள். மனம் எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்பதை உணருங்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? அவ்வளவு ஓசைகளின் இடையிலும் அமைதியா?அப்படியென்றால் ஓசை இருந்தாலும் அதனை அமைதி என்று கூறலாமா?

15ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தமிழ் எனும் அமுதத்தைப் பருகி, தாளம் எனும் கணக்கில் அடக்கி, சங்கத்தமிழை சந்தத்தமிழாக மாற்றிய அருணகிரிநாதர், ‘சும்மா இரு, சொல் அற’, என்று பாடினார். அவரே,

‘வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சி பூத்த தண்டைப்
பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே’
என்று பாடினார்.

இரவு, பகல் இல்லாத வஞ்சகம் அற்ற வெட்டவெளியில் நம்மை மறந்து, மறைந்து, ‘அவனது பாதங்களே சரண், நாம் அதற்கு அரண்’ என்று ஒன்றும் செய்யாமல் அமைதியில் நிலைத்திருப்பாய் மனமே, என்பது இதன் பொருள்.

‘வெட்டவெளி’, ‘அமைதி’, ‘நிலைத்திருப்பது’ என்றெல்லாம் கூறினாலும், அவர் வேண்டியதில் ‘செயல்’ என்று ஒன்று இல்லாமல் இருக்கிறதா?
யோசித்துப் பாருங்கள்.

அதற்கு முன் இன்னுமொரு பாடலைக் கவனிப்போம்:

‘சொல்லினால் தொடர்ச்சி நீ, சொலப்படும் பொருளும் நீ,
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ,
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்,
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே?’

திருமழிசை ஆழ்வார் எழுதிய இந்தப் பாடலும் பரம்பொருளைச் சுற்றி வந்தாலும், ‘சொல்’ என்பது எப்படி வருகிறது என்று கவனியுங்கள்.’சொல்லும் நீயே, பொருளும் நீயே’ என்று கூறிக்கொண்டு வந்தவர், ‘சொலப்படாது தோன்றுகின்ற சோதியும் நீயே’ என்கிறார். அந்த சொலப்படாத ஜோதி, அமைதிதான் என்பது நிதர்சனமாகிறது.
இரண்டு பாடல்களுக்கும் பொதுவானது அந்த அமைதி. இரண்டு பாடல்களும் தெரியப்படுத்துவது, ‘அமைதியில் ஓசை, ஓசையிலும் அமைதி’. இது எப்படி சாத்தியம் என்று கேட்பவர்கள், முதல் பத்தியில் நான் எழுதியதை மறுபடி நினைவில் கொள்ளுங்கள்.

அமைதியான காற்று என்கிறோம். காற்று ஓசையில்லாமல் அடிக்க இயலுமா?
அமைதியான நதி என்கிறோம். நதியின் அருகே சென்று உற்றுக் கவனித்தால், கண்டிப்பாக மெல்லிய ஓசை கேட்கும்.

எனவே, அமைதியும் ஓசையும் பிரிக்க முடியாத ஒன்று என்பதே உண்மை. ஓசையின் தன்மை பொறுத்தே அமைதி அமையும் என்பதும் உண்மை.
இசை கேட்டால் அமைதி.அதே சமயத்தில், இசை கேட்டால் புவியும் அசைந்தாடும். அந்த இசையின் தன்மை பொறுத்தே அமைதியும் அமையும்.

இளையராஜாவின் இசை நம்மை ஆட்கொள்ளுவதற்குக் காரணம் அந்த இசையின் ஓசையில் பரவிக் கிடக்கும் அமைதி.அந்த இசையின் அடி நாதமே அமைதி. எனவேதான் அவர், ‘யாமறிந்த மொழிகளிலே,மவுனத்தைப் போல இனிதாவது எங்கும் காணொம்’ என்கிறார்.

இன்று நாம் காணவிருக்கும் ‘சிறப்புப் பாடல்’ இந்த சப்தத்தை மையமாக வைத்துத்தான் இருக்கிறது. ‘சப்தம்’ என்பது ‘சப்த ஸ்வரங்களை’யும் குறிக்கும். ‘சூரியன்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘சப்தமயீ சப்த ப்ரம்ம மயீ’ என்ற பாடலின் சிறப்பு, சப்தம் மட்டுமல்ல, சப்த ஸ்வரங்கள் மட்டுமல்ல, அவற்றினூடே ஒளிந்திருக்கும் அமைதியும் தான்.
முதலில் அந்த சப்த ஸ்வரங்களைப் பற்றிப் பார்ப்போம். இசைக்கு அடிப்படை ஏழு ஸ்வரங்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த ஏழு ஸ்வரங்கள் , இந்திய இசையில், 12 ஸ்வரங்களாகப் பிரிகின்றன. கர்னாடக இசையில், இன்னும் 4 ஸ்வரங்கள் சேர்த்து மொத்தம் 16 ஸ்வரங்களாகின்றன. இவை பற்றிய விரிவான விளக்கம், இன்று பிற்பகலில் அளிக்கப்படும். இந்த 4 ஸ்வரங்களே விவாதி ஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த ஸ்வரங்கள் இருக்கும் ராகங்களே விவாதி ராகங்கள். இவைகளைப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. திரை இசையில் இளையாராஜா விவாதி ராகங்களைப் பயன்படுத்தியதைப் போல வேறு எவரும் பயன்படுத்தியதில்லை என்று அடித்துக் கூறலாம். எண்ணிக்கையிலும் சரி, தரத்திலும் சரி.

‘சப்த மயீ’ அமைந்த ராகம், ராகவர்த்தினி. இது ஒரு விவாதி ராகம். சாருகேசி சாயலில் இது இருந்தாலும், ‘ரி’ என்னும் விவாதி ஸ்வரம், இதற்கு ஒரு தனித்தன்மையை அளிக்கிறது. அந்தத் தனித்தன்மையே இதற்கு அழகு சேர்க்கிறது.

இந்தப் பாடலின் அமைப்பைக் கவனித்தால், சற்று வித்தியாசமாகவே இருப்பது புலனாகும். பொதுவாக, கர்னாடக கிருதிகளில், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று இருக்கும். முதலாவது வரியினை பல்லவி என்றும், தொடர்ந்து வரும் வரிகளை(இவை இரண்டாகவும் இருக்கலாம், மூன்றாகவும் இருக்கலாம்) அனுபல்லவி என்றும், அடுத்து வரும் பகுதியை சரணம் என்றும் கூறுவார்கள். திரையிசைப் பாடல்களில் பெரும்பாலும் அனுபல்லவி என்பது இருக்காது.எனினும், முழுமையாக கர்னாடக இசையை அடிப்படையாகக் கொண்ட சில பாடல்களில், அனுபல்லவி இருக்கும்.மேலும், இப்பாடல்களில் இடையிசையும் இருக்கும்.

‘சப்தமயீ’ யில் அனுபல்லவியும் இல்லை.இடையிசையும் இல்லை. இரண்டு சரணங்களும் ஒன்றைப் போல ஒன்றில்லாமல், வித்தியாசமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம்.

பாடலைக் கவனிப்போம்.

அகாரம், உகாரம், மகாரம்- மூன்றும் ஒன்றிணைந்த ப்ரணவ நாதமாய் ஒலிக்கிறது தம்பூரா.அந்த நாதத்தின் தொடர்ச்சியாக வருகிறது காவலம் ஸ்ரீகுமாரின் ஆலாபனை.மிக சுருக்கமான ஆலாபனை என்றாலும் மனதை உருக்கும் ஆலாபனையான இதில், விவாதி ஸ்வரமான ‘ரி’ மிக சாதுரியமாக ப்ரயோகிக்கப்பட்டு, ராகவர்த்தினியின் சாரத்தைப் பிழிந்து காட்டுகிறது. குரலோடு ஒலிக்கும் வயலின், காற்றில் கலந்து வந்து மணம் வீசுகிறது.

ஷட்ஜமத்தில் சிறிது நேரம் நின்று ஆலாபனையை முடிப்பது, ப்ரணவ நாதத்தை மீண்டும் நினைவு படுத்துகிறது.

ஆதி தாளத்தில், முக்கால் இடம் தள்ளி அனாகத எடுப்பில் தொடங்குகிறது பல்லவி. ‘சப்தமயீ சப்தப்ரம்ம மயீ’ என்ற முதல் வரியில், இறுதியாக வரும் ‘யீ’ இகாரப் ப்ரயோகமாக அரை ஆவர்த்தனத்திற்கும் மேலாக வந்து, ஒரு தனித்தன்மையை உண்டாக்குகிறது. அரை ஆவர்த்தனத்திற்கு வரும் மிருதங்கத்தைத் தொடர்ந்து இன்னொரு ஆச்சரியம். முக்கால் இடம் தள்ளித் தொடங்கிய பல்லவி, இப்பொழுது சமத்தில் தொடங்குகிறது.

மூன்றாம் முறை சங்கதியுடன் பாடப்படும் ‘சப்தமயீ’ யில், புதிதாக ஒரு குரல் மெலிதாக ஒலிக்கிறது. இந்தக் குரலுக்கு சொந்தக்காரரான சங்கரன் நம்பூதிரி, அடுத்து வரும் வரியை ஸ்ரீகுமாரைத் தொடர்ந்து பாடும்பொழுது, இரண்டு குரல்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடிகிறது. ஒன்று கனம், மற்றொன்று மெலிது. மாறுபாட்டில் உள்ள கவித்துவத்தை நன்கு உணர்ந்தறிந்த இசை வித்தகர், விவாதி ராகத்தில் அமைந்த பாடலில் மாறுபட்ட குரல்களை இணைத்தது வியப்புக்குரிய விஷயம் அல்லவே!

சுக ராகத்தில் லயித்திருக்க வைக்கும் அதே நேரத்தில் லயத்திலும் நம்மை லயிக்க வைக்கிறார் லய ராஜா. மிருதங்கம் வாசிக்கும் பல சதுஸ்ர அமைவுகளை பல்லவியின் ஓரிரு வரிகளில் காட்டும் இந்த ராஜா, ‘மறுபடி சரணத்தில் என்னைக் காணுங்கள்’ என்று கூறுவது போல், மிருதங்கத்தை அரை ஆவர்த்தனத்திற்கு வாசிக்க வைத்து முடிக்கிறார் பல்லவியை.

சரணத்தின் முதல் வரியில், ஆதவனின் கிரணங்கள் நம்மைத் தழுவுகின்றன. ‘ஜோதிர்மயீ’ என்ற தொடரில் வரும் விவாதி ஸ்வரம், காலைப் பனியின் புகை போல் வந்து அதிகாலையை இன்னிசைக்காலையாக்குகிறது. மேல் ஸ்தாயியைப் பிடிக்கும் அடுத்த வரிகள், பொன் காலையின் அழகைக் காட்டி, இது மட்டுமல்ல இன்னும் நிறையவே அழகுக் கொட்டிக் கிடக்கிறது என்று கட்டியம் கூறுகிறது.

பல்லவியில், மீண்டும் சந்திப்போம் என்று நம்மிடம் கூறிய லய ராஜா சொன்ன சொல் தவறாமல் வருகிறார். சதுஸ்ரத்திலிருந்து திஸ்ரத்திற்கு மாற்றி கதி பேதம் செய்து, நம்மை விசித்திரத்துக்குள்ளாக்குகிறார். விசித்திரத்தையும் சித்திரமாகச் செய்வது இவருக்குக் கை வந்த கலையாயிற்றே! ஒன்றரை ஆவர்த்தனத்திற்குத் திஸ்ரத்தில் செல்லும் பாடலில், தாள வாத்தியங்கள் மட்டும் அரை ஆவர்த்தனத்திற்கு ஒலிப்பது லய ராஜ முத்திரை!

இரண்டாவது சரணம், முன்னர் குறிப்பிட்டிருந்தது போல, முதல் சரணத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. மந்திர ஸ்தாயியில் அமைந்த முதல் வரி, வேத மந்திரம்போல ஒலித்து, தெய்வீகத்தை உணர்த்துகிறது.மத்தியம ஸ்தாயி ஸ்வரங்களுடன் மேல் ஸ்தாயி ஸ்வரங்கள் சேரும் அடுத்த வரி, காலை இளம் கதிர்களைப் போல நம்மைத் தீண்டி, நமக்கு ஒருவித சக்தியை அளிக்கிறது.

தொடர்ந்து வருகிறது ஸ்வரக்கோர்வை. அருவியிலிருந்து கொட்டும் நீரென, ஸ்வரங்கள் பொழிகின்றன. ஐந்து ஆவர்த்தனங்களுக்குப் பிறகு, திஸ்ரத்திற்கு மறுபடி மாறுகிறது பாடல்.

தாளத்தின் சப்தம். ஸ்வரங்களின் சப்தம். எனினும் நிசப்தம்.
நிசப்தத்தில் இருக்கும் சப்தம். சப்தத்தில் மறைந்திருக்கும் நிசப்தம்.
என்றும் நிலைத்து இருக்கும் நாதம்.



பி.கு.- இந்தப் பதிவு, ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘கீதாஞ்சலி’ என்னும் நிகழ்விற்காக எழுதப்பட்டு, சில இளையராஜா ரசிகர்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இளையராஜாவிற்கும் அவரது இசைக்கும் சமர்ப்பிக்கப்படும் இந்த நிகழ்வு, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 9 ஆம் நாள் சென்னையில் நடைபெற்றது.

No comments: