Monday, 2 October 2017

இசைத்தேவன் இளையராஜா


இறைத்தன்மை எனப்படுவது யாது?

சுவர்க்கம், நரகம் என்றால் என்ன? இவை நிஜமா?

இது போன்ற கேள்விகள் எழாத மனிதனே இப்பொழுது இல்லை எனலாம்.
கேள்விகள் இல்லாமல் விஞ்ஞானம் இல்லை. கேள்விகள் இல்லாமல் மெய்ஞ்ஞானம் இல்லை.கேள்விகள் இல்லாமல் அஞ்ஞானமும் இல்லை.
இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்திருக்கின்றனவா?
கிடைத்தும் இருக்கின்றன.கிடைக்காமலும் இருக்கின்றன. கிடைத்தும் கிடைக்காமல் இருப்பதும், கிடைக்காமல் கிடைத்து இருப்பதும் எது?
மீண்டும் கேள்விகள்.

இந்தக் கேள்விகளைத் தாற்காலிகமாக ஒதுக்கி, இந்தப் பாடலை கவனிப்போம்:

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீங்கரும்பனையர் தம் திருவடி தொழுவார்
ஊன் நயந்துருக உவகைகள் தருவார் உச்சி மேலுறைபவர் ஒன்றலாது ஊரார்
வானகம் இறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை உடையார்
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

தேனை விட இனிப்பானவர், வெண்மையான பால் நிறத்தில் நெற்றியில் திருநீரு அணிந்திருப்பவர், கரும்பை ஒத்தவர், உச்சந்தலையில் குடியிருப்பவர். ஓரூர் என்றிலாமல் எங்கும் வியாபித்து இருப்பவர்.யானைத்தோல் போர்த்தியவர். அவரை உணர்ந்தவர்களுக்கு உடல் உருக இன்பம் தருபவர்,

என்பதே இதன் விளக்கமாகும். இதில் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் பொதிந்ததாக இருந்தாலும், சிலவற்றை மட்டும் கவனிக்கலாம். தேன், பால், கரும்பு ஆகியவை இனிமையைக் குறிக்கின்றன. இது பக்தி எனப்படுவதின் குறியீடு. எனினும் இது முதல் படிதான் இதற்குமேல் பல படிகள் உண்டு என்பதைக் குறிக்கத்தான் உச்சந்தலையில் இருப்பவன் என்கிறார். மனித உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன என்றும், ஏழாவது சக்கரமாகிய சகஸ்ர சக்கரம் உச்சந்தலையில் இருக்கிறது குண்டலினி யோகம் கூறுகிறது. யானைத்தோல் எதற்கு? யானை என்னும் பிராணி மெய்யறிவு உடையது. மேலும், தனது பாதையில் குறுக்கிடும் தடைகளை அனாயாசமாக உடைத்தெறிந்து செல்லக் கூடும் தன்மையுடையது யானை. அதுபோல மெய்யறிவு காண விழைபவர்களின் தடைகளை உடைத்தெறிபவர் என்று குறிப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் அச்சிறுபாக்கம் என்னும் ஊரில்தான் சிவபெருமானின் தேர் அச்சு முறிந்தது என்கிறது புராணம்..

தேனினும் இனிய தமிழ்ப்பால் அருந்தி அதன் சுவையினை தனது பாடல்கள் மூலம் நம்மையெல்லாம் உணரச் செய்த திருஞானசம்பந்தரின் பாடலாகிய இதில், உச்சந்தலை, திருவடி, ஓரிடம், பல இடங்கள், வானகம், வையகம் என கவிதைக்கு அழகு சேர்க்கும் மாறுபாடுகளும் உண்டு
இந்தப் பாடலின் சாராம்சம்- தன்னை உணர்ந்தால், பேரின்பம்.அதுவே இறைத்தன்மை- என்பதாகும்.

இன்னுமொரு பாடலை இப்பொழுது கவனிப்போம்:

கருங்கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின போது,
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்;மலர்கள் வீழும்;வளர் கொம்புகள் தாழும்,
இரங்கும், கூம்பும்;திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.

ஆயர் குலத்தில் உதித்த கண்ணன் குழல் ஊதும்பொழுது, மரங்களினின்றும் தேன் துளிகள் பாய்ந்து துளிர்க்கின்றதாம். மலர்கள் சிந்துகின்றனவாம்.வளர்ந்த கிளைகள் தாழ்ந்து நிற்கின்றதாம்.உருகுகின்றதாம். கண்ணன் எங்கெங்கு நின்று வாசிக்கிறானோ, அந்தப் பக்கங்கள் நோக்கித் திரும்பி வணங்குவதைப் போல கொம்புகள் குவிந்து வழிபாடு செய்கின்றவாம்.
பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவராகிய பெரியாழ்வாரின் கற்பனை இது. 

ஞானப்பால் அருந்தியவர், முதலில் ரூபத்திலும், பின்னர் அரூபத்திலும் இறைத்தன்மையைக் கண்டார் என்றால், ஆழ்வார்களுள் பெரியவராகக் கருதப்படுபவர், தாம் வணங்கும் தெய்வம் வழங்கும் இசையில் இறைத்தன்மையைக் கண்டார்.

இது போன்ற ஒரு அனுபவம் ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. இறைமறுப்புக் கொள்கை உடையவர்களுக்கும் வருவதுதான். ஒரு மாமலையைப் பார்க்கும்பொழுது, மழையைப் பார்க்கும்பொழுது, அருவி மேலிருந்து கீழாக சோவென்று கொட்டும்பொழுது, ஒரு பறவை சிறகுககளை விரித்து வானில் பறக்கும்பொழுது, என பல்வேறு தருணங்களை ரசிக்கிறான்; அனுபவிக்கிறான். அந்த அனுபவத்தை எப்படி விளக்க இயலாதோ அதுபோல ஆன்மீகவாதிகளால் தாம் காணும் அனுபவத்தையும் விளக்க இயலாது.

என்றாலும், இரண்டு பிரிவினருமே தன்னை மறந்து ரசித்து ஒன்றிப் போவது நல்லிசையைக் கேட்கும்பொழுது. ஸ்வரங்களின் கூட்டமைப்பே எல்லா இசையிலும் இருந்தாலும், சிலவகை இசையைக் கேட்கும்பொழுது வரும் சுகானுபவம் அளப்பறியாதது. இசையின் தொழில் நுட்பங்கள் தெரியாத பாமரனும், இவைபற்றி ஓரளவு தெரிந்த பண்டிதனும், எதைப் பற்றியும் தெரியாத குழந்தைகளும், ஆறறிவு இல்லாத பிராணிகளும் கூட இவ்வகை இசையைக் கேட்கும்பொழுது தம்மை மறக்கின்றன.

இளையராஜா எனும் அற்புத இசைக்கலைஞனின் படைப்புகள் இந்த வகையைச் சார்ந்தவை. வித்தியாசமின்றி ரசிக்கப்படும் இந்த இசைக்கு. எல்லோரையும் கட்டிப்போட வைக்கும் காந்த சக்தி உண்டு. ‘ஏழிசையாய் இசைப்பயனாய்’ இருப்பது எந்த சக்தி என்று இந்தக் கலைஞன் உணர்ந்திருப்பதுதான் இதற்குக் காரணம்.

இன்று இந்த இனிய நன்னாளில் நாம் காணவிருப்பது பல்லாயிரக்கணக்கான முத்துக்களில் ஒரு முத்து.
‘ஆகாய கங்கை’ (1982) என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தேனருவியில் நனைந்திடும் அழகோ’ என்ற இந்த முத்தில், ஏனைய முத்துகளைப் போல பல தனிச்சிறப்புகள் மின்னுகின்றன. அவை என்ன என்று பார்க்கலாம்.

இந்தப் பாடல் அமைந்துள்ள ராகம் வித்தியாசமான ஒன்று. பீம்பளாசி என்னும் ஹிந்துஸ்தானி ராகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதனைச் சொல்லலாம். எனினும், இந்த ராகத்தின் ஆரோஹணத்தில் இல்லாத ரிஷபம் சில இடங்களில்-குறிப்பாக ‘ரிமக’ என்னும் ப்ரயோகமாக வருவதும், சரணங்களின் இறுதியில் அன்னிய ஸ்வரமாகிய காகலி நிஷாதம் வருவதும், கண்டிப்பாக வித்தியாசமான ஒரு நிகழ்வுதான்.
பொதுவாக திரைப்படப்பாடல்களில் அன்னிய ஸ்வரம் கலப்பது சாதாரணமான விஷயம்.எனினும், ஒரு சாஸ்திரிய இசையினை ஒட்டி புனையப்பட்ட பாடலில் அன்னிய ஸ்வரங்களை, இசைப்பாடல் ஆக்குவோர் தவிர்ப்பார்கள். குறிப்பாக இளையராஜா இதனை மிகவும் தவிர்ப்பார். இம்மாதிரி வருவதை, ஹிந்துஸ்தானி இசையில் ‘மிஸ்ர’ என்று ராகத்தின் பெயரோடு சேர்த்து அழைப்பார்கள். எனவே, இதனை ‘மிஸ்ர பீம்பளாசி’ என்று அழைக்கலாம்.

ஆனால், ‘ரிமக’ என்னும் பிரயோகத்தில் தான் இந்த ரிஷபம் வருவதால், இதனை ஒரு புதிய ராகமாகக் கொண்டு ‘ராஜ பீம்ப்ளாஸ்’ என்று அழைக்கலாமோ என்று தோன்றுகிறது எனக்கு.

இந்தப் பாடலில் ராகங்களும் மாறுகின்றன.இரண்டாவது இடையிசையில் ஒரு ராகமும், இரண்டாவது சரணத்தில் இன்னொரு ராகமும் வருவதால், இது ராகமாலிகா என்னும் வகையைச் சேர்ந்தது. இந்த ராகங்களைப் பின்னர் பார்ப்போம்.

பாடலின் தொடக்கத்திலேயே தலை காட்டுகிறார் லய ராஜா. மிருதங்கமும், தபலாவும் திஸ்ர நடையில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி-பதில் பயிற்சியில் ஈடுபடுகின்றன. திஸ்ரத்தை 6 மாத்திரைகளாகப் பிரித்து, அதில் கார்வையும் கொடுத்து தத்தமது தனித்தன்மையுடன் வாசிக்கின்றன மிருதங்கமும் தபலாவும். 12 திஸ்ரங்களுக்கு நிகழும் இந்த நிகழ்வில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு கோர்வைகள் வருவது லய ராஜாவுக்கே உரித்தான ஒரு முத்திரை. மிருதங்கத்துடனும்,தபலாவுடனும் சலங்கை ஜதி போடுவது நடன ராஜாவின் முத்திரை.

தொடர்ந்து நான்கு திஸ்ரங்களை மிருதங்கம் வாசிக்க, தபலாவும் அதனைப் பின்பற்றுகிறது. மிருதங்கத்திற்கும், தபலாவுக்கும் இடையில் குழல் ஒரு சிறிய கூவல் ஒன்று கூவுகிறது.தபலாவின் நான்கு திஸ்ரங்களுக்குப் பிறகு இன்னொரு முறை கூவுகிறது குழல். இரண்டு கூவல்களும் மிகச் சிறிது நேரமே வந்தாலும், இரண்டு வகையாக வாசித்து மனதை ஈர்க்கிறது. இது லய நடன ராக ராஜாவின் முத்திரை.
அடுத்த சுழற்சியில், மிருதங்கம், குழல், தபலா மூன்றும் மாறி மாறி வாசிக்க, ஒலிக்கத் தொடங்குகிறது பல்லவி. பல்லவி என்பதைவிட பல்லவிக்கான முகப்பு என்று கூறலாம். ‘தீம்’ என்று எஸ்.பி.பி. பாட அகாரத்தில் பதில் அளிக்கிறார் ஜானகி. ‘திரனானா’ தொடர்கிறது. அகாரமும் தொடர்கிறது. பிறகு வருகிறது மெளனம்.
மெளனமும் இசைதான் என்பதை பலமுறை காட்டியிருக்கும் இசைஞானி, இந்தப் பாடலிலும் காண்பிக்கிறார்.

‘தேனருவியில்..’ என்று துவங்கும் பல்லவி, ‘நி ஸ் ஸ் நி நி’ என்று முதல் சொற்றொடரிலேயே பீம்ப்ளாசைக் கோடிட்டுக் காட்டி விடுகிறது. முன்னர் நான் குறிப்பிட்ட அன்னிய ஸ்வரமாகிய ‘ரி’, இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிகளின் இறுதியில் வந்து உட்காருவது அழகாகவே இருக்கிறது.

பல்லவியின் மற்றொரு சிறப்பு, ஜானகி ‘தீம் திரனனா, ‘திரனா’ என்று தில்லானா மொழியில் பாட அதற்குப் பதில் கொடுப்பது போல் எஸ்.பி.பி. வரிகளைப் பாடுவது. முதல் மூன்று வரிகள் இம்மாதிரியே அமைந்திருக்கின்றன. இந்தப் பாடல் முழுவதுமே ஜானகி திரும்பத் திரும்பப் பாடுவது இந்த ஜதிகள் மட்டும்தான். பாடலின் இறுதியில் மட்டும், பல்லவியின் முதல் வரியை ஒரு முறை பாடுகிறார். இதைத் தவிரவும் அவர் சரணங்களில் செய்யும் அகாரம், இப்பாடலின் இன்னொரு சிறப்பு.

நீண்ட புல்லாங்குழல் தனக்கே உரித்தான ஆழத்துடன் வாசிக்க, தொடங்குகிறது முதலாவது இடை இசை. ஆழத்தில்தான் எவ்வளவு மென்மையான ஒரு இனிமை! மேலும், ஸ க ம ப என்னும் ஸ்வரங்கள் மட்டுமே இதில் ஒலிப்பதால், சுத்த தன்யாசி என்ற ராகம் இது என்று கூடக் கூறலாம்.

குழலின் எதிரொலி என்ன? குரலா? குரலாகவும் இருக்காலாம், அல்லது குரலை ஒத்த வாத்திய சப்தமாகவும் இருக்கலாம். இங்கு எதிரொலிப்பது- ஜலதரங்கம் மற்றும் தபலா தரங். இந்தத் தரங்கத்தைத் தொடர்ந்து அடுத்த வரிகளில் எதிரொலிப்பது அமைதியான ரிதம் கிடார்.
நீண்ட குழலுக்கு மட்டும்தான் ஆழமா, என்று கேட்டுக்கொண்டே  நுழைகிறது வீணை. ஆழமாக உள்ளே சென்று நமது இதயத்தின் நரம்புகளை மெல்ல வருடியபடியே அது மீட்டும் பொழுது, நாமும் அழகு மிகுந்த ஆழத்திற்குச் செல்கிறோம்.

‘ஆழத்திற்குள் சென்றவர்களே, நீங்கள் மேலே வந்து என்னுடன் பறக்க ஆயத்தமாகுங்கள். வையகம் எவ்வளவு இனிமையோ அதைவிட இனிமை வானகம்’, என்று கூவிக்கொண்டே வருகிறது சிறிய குழல். இதனை ஆமோதிக்கும் முகமாக, மிருதங்கம் தனது நடையை திஸ்ரத்திலிருந்து சதுஸ்ரத்திற்கு மாற்றுகிறது.’சரி நானும் வருகிறேன் உன்னோடு எனக்கும் உயரம் பிடிக்கும்’, என்று வீணை பதில் கூறி குழலின் கீதத்தைப் பின்தொடர்கிறது.

சரணத்தின் முதல் மூன்று வரிகளில் பெரும்பான்மையான மேல்ஸ்தாயி ஸ்வரங்கள் வந்து நம்மை உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. என்றாலும், சரணங்களின் தனிச் சிறப்பு இது மட்டுமே அல்ல. 

முன்பே குறிப்பிட்டது போல ஜானகியின் அகாரம். பொதுவாக இளையராஜாவின் பாடல்களில், சரணங்களில், ஏதாவது ஒரு வாத்தியம் அல்லது வாத்தியங்கள் குரல்களுடனோ அல்லது தனியாகவோ ஒலிக்கும். சற்று உற்று கவனித்தால் மட்டுமே புலப்படும் இது, வரிகளுக்கு இன்னும் அழகு சேர்க்கும். இந்த வாத்தியங்கள் செய்யும் வேலையை சில பாடல்களில் கோரஸ் எனப்படும் குழுவினர் செய்வர். எனினும் இன்னும் சில பாடல்களில் பெரும்பாலும் ஜானகி மற்றுமே செய்வார். குழுமத்தில் எனது சில பதிவுகளில் ஜானகியின் குரலையே வாத்தியமாக பயன்படுத்தியவர் இளையராஜா என்று கூறியிருக்கிறேன்.இந்தப் பாடல் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. முதல் வரி முடிந்தவுடன் மகாரத்தில் தொடங்கி அகாரமாக ஆகும் ஜானகியின் குரல், அடுத்து வரும் இரண்டு வரிகளில் வெவ்வேறு ஸ்வரக்கோர்வையுடன் கூடிய அகாரங்களாக ஒலித்து வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகின்றது.

கடைசி வரியில் இன்னொரு அன்னிய ஸ்வரமாகிய காகலி நிஷாதம் நுழைந்த்து மிஸ்ர பீம்ப்ளாசை, ராஜ பீம்ப்ளாசை அழகு படுத்துகிறது.
மிருதங்கம் ஒவ்வொரு வரியையும் ரசித்து தனது ரசிகத்தன்மையை விதவிதமான திஸ்ரங்களை வாசிப்பதன் மூலம் தெரியப்படுத்துகிறது.
முதல் சரணம் முடிந்து பல்லவி பாடப்படும்பொழுது அதன் இறுதியில் தன்னிச்சையாக ராகம் மாறுகிறது. ஜானகியின் குரலில் மாறும் ராகம், குழுவினரின் ஸ்வரங்களில் பளிச்சென தென்படுகிறது. காபி என்றாலே பலருக்கும் புத்துயிர் தருவதல்லவா! வீணையும் இதனை இசைத்து ஆமோதிக்கிறது.

சற்று நேரத்திற்கெல்லாம், ராகம் மறுபடி மாறி, பாகேஸ்ரீ என்னும் ராகமாக உருவெடுக்கிறது. ஜானகியின் அகாரத்தில் தொடரும் பாகேஸ்ரீ, எஸ்.பி.பி.யின் குரலில் இரண்டாவது சரண வரிகளிலும் ஒலிக்கிறது. நிலவையும் நம்மிடம் நெருங்கச் செய்யும் வல்லமையுள்ள இந்த ராகம், மூன்றே வரிகளில் நம் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. முதல் வரியில் மந்த்ர ஸ்தாயி ஸ்வரங்களும், இரண்டாம், மூன்றாம் வரிகளில் தார ஸ்தாயி ஸ்வரங்களும் ஒலிக்கும் இதில் கவனிக்க வேண்டியவை இரண்டு அம்சங்கள். ஒன்று- ‘ம’, ‘ஸ்’   என்னும் வாதி சம்வாதி ஸ்வரங்களைச் சுற்றி அமைந்திருப்பது, பஞ்சமம் அறவே இல்லாமலிருப்பது.

இரண்டாவது சரணம் முடிந்து ஜானகி பாடும் ‘தீம் திரனனா’ வில் மிருதங்கத்தில் ‘த’ த’ ‘த’ த’ ‘த’ ‘த’ ‘த’ என ஆறு முறை ஒலிக்கச் செய்வது மணி மகுடம்.

தேனினும் இனிது.கரும்பைக் காட்டிலும் சுவையானது. மரங்களை அசையாமல் நிற்க வைப்பது. சுவர்க்கம் என்பது இதுதான் என்று நம்மைக் கூற வைப்பது. இறைத்தன்மையை நம்மை உணர வைப்பது.

இன்னிசை, நல்லிசை, ராஜ இசை!

பி.கு.- இந்தப் பதிவு, ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘கீதாஞ்சலி’ என்னும் நிகழ்விற்காக எழுதப்பட்டு, சில இளையராஜா ரசிகர்கள் முன்னிலையில் படிக்கப்பட்ட்து. ஆண்டுதோறும் இளையராஜாவிற்கும் அவரது இசைக்கும் சமர்ப்பிக்கப்படும் இந்த நிகழ்வு, இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் சென்னையில் நடைபெற்றது.



No comments: