ஆன்மீகம் என்பது என்ன?
கடவுள் நம்பிக்கையா? கடவுள் நம்பிக்கை
மட்டும்தானா?
சுய நலமா? பிறர் நலமா?
தியானமா? மற்ற நியமமா?
எனது கடவுள் உனது கடவுள் என்று சண்டையிடுவதா?
இந்த பாடல்களை கவனிப்போம்:
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலத்த
நீத்தம்,
எல்லைகளில் மறைகளாலும் இயம்பரும் பொருள்
ஈதென்னத்
தொல்லையில் ஒன்றேயாகித் துரைதொரும் பரந்த
சூழ்ச்சிப்
பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல்
பரந்ததன்றே.
தாதுறு சோலைதோறும் சண்பகக்காடுதோறும்
போதவிழ் பொய்கைதோறும் புதுமணத்தடங்கள்
தோறும்
மாதவி வேலிப் பூகவனந்தோறும் வயல்கள்
தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாயதன்றே.
கவிச் சக்கரவர்த்தியின் இந்தப் பாடல்களின்
பொருள்தான் என்ன?
மலையில் பிறந்து கடலில் கலக்கும் நதி,
பசுமை மிகுந்த சோலைகளில், அழகிய அடர்ந்த
காடுகளில், நீர்நிலைகளில், தோட்டங்களில், வயல்களில், வரப்புகளில் பாய்ந்து ஓடி, ஏரி,
குளம், குட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. துறைகளும் பெயர்களும் வேறாக இருந்தாலும்
ஆற்று வெள்ளம் ஒன்றுதான். அதுபோல பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் பரம்பொருள் ஒன்றுதான்,
என்பதே இந்த இரு பாடல்களின் சாராம்சம்.
பாடல்களுக்கு இன்னும் சில உட்கருத்துகள்
இருந்தாலும், குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. அதற்கு முன் இன்னொரு
தமிழ்க் கவிஞரின் பாடல் ஒன்றை கவனிப்போம்.
அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று
ஐம்புலனும் அடக்கி ஞானப்
புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத்து
உள்ளிருக்கும் புராணர்
கோயில்
தகவுடை நீர் மணித்தலத்துச் சங்குள வர்க்கந்
திகழச் சலசத் தீயுள்
மிகவுடைய புன்கு மலர்ப் பொரியட்ட
மணஞ்செய்யும் மிழலையாமே.
தமிழ் என்னும் அமுதினை பாலும் தெளிதேனும் கலந்து கொடுத்து இனிமைக்கு
இனிமை சேர்த்த ஞானசம்பந்தரின் பாடலே இது.
இந்தப் பாடலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. இரண்டாவது பகுதியை முதலில்
கவனிப்போம். திருவீழிமிழலை என்னும் ஊரிலுள்ள கோவில் குளத்தைப் பார்த்தவுடன் ஒரு வித்தியாச
சிந்தனை தோன்றுகிறது சம்பந்தருக்கு. இயற்கை திருமணம் நிகழ்த்திக் கொண்டால் எப்படியிருக்கும்? குளத்தின் தெள்ளத்தெரியும் நீர், ஒரு கம்பளத்தைப்
போலவும், அதன்மேல் விழுந்து கிடக்கும் வெள்ளைப் பூக்கள் சங்கு போலவும், நடுவில் செக்கச்செவேல்
என் பூத்திருக்கும் தாமரைப் பூ, அக்னி குண்டம் போலவும், புனுகு மரத்திலிருந்து இரையும்
பூக்கள் அரிசி-அதாவது அட்சதை போலவும் அவருக்குத் தோன்றுகிறது.
முதல் பகுதி என்ன கூறுகிறது? ஐம்புலன்களை அடக்கி, ஆறு பகையினை வென்று
அன்பே சிவமெனக் கருதும் மாந்தர் தம் உள்ளத்தாமரையில்
பரம்பொருள் குடி கொண்டிருக்கும் என்பதே அது.
இப்பொழுது முதல் பகுதியையும் இரண்டாவது பகுதியையும் இணைத்துப் பாருங்கள்
, பொருள் தானாகவே விளங்கும்.
கம்பன் பாடல், ஞானசம்பந்தர் தேவாரம் இரண்டிலும் உள்ள ஒற்றுமை என்ன?
இரண்டுமே உண்மையான பரம்பொருளைப் பாடுகின்றன. இரண்டுமே இயற்கையை வித்தியாசமான
நோக்கில் பார்த்து வர்ணிக்கின்றன. இரண்டுமே இசை போன்ற அழகிய தமிழில் இனிமையாக ஒலிக்கின்றன.
இப்பொழுது முதலில் கேட்ட கேள்விக்குச் செல்வோம்.
ஆன்மீகம் என்றால் என்ன?
இயற்கையை ரசிப்பது, உண்மையான பரம்பொருளைக் கண்டறிவது, எல்லாவற்றியும்
உற்று நோக்கி பகுத்தறிவது.
இந்தப் பகுத்தறிதலே, விஞ்ஞானம்.
மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் அழகுணர்ச்சியும் ஒன்று சேர்ந்தால் வருவது இனிய
கலைப் படைப்பு. மேற்கூறிய இரண்டு கவிதைகளும் இதற்குச் சான்று.
இப்பொழுது, இந்த நூற்றாண்டில் இதற்குச் சான்று இளையராஜாவின் இசை. பாமரனையும்
பண்டிதனையும் ரசிக்க வைக்கும் அளவுக்கு இவரது பாடல்கள் அமைந்திருப்பதற்குக் காரணம்
இதுவே.
கடந்த வருடங்களில் ஒரு சில பதிவுகளில், இறைமறுப்புக் கொள்கை உடையவர்கள்
கூட இறையுணர்வை அடைவது இசையில்தான் என்று குறிப்பிட்டிருக்கிறேன். இளையராஜாவின் பாடலில்
அடிநாதமாக ஓடும் ஆன்மீகம் பலருக்கும் புலப்படாமல் இருந்தாலும், அந்தப் பாடல் அவர்களைச்
சென்றடையக் காரணம் இதுவே. இன்னொரு காரணம், அவரது ரசிகத்தன்மை.இயற்கையை ஆழ்ந்து ரசிப்பது.
மற்றொரு மிக முக்கிய காரணம் இசையை அவர் பகுத்து ஆராய்ந்து
பல புதுமைகள் செய்வது. 'ஆராய்வது' என்பதும் இங்கு இவரிடம் இயற்கையாக நிகழும் ஒன்று.
இன்று நாம் காணப்போகும் பாடல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
'பொன்னில் வானில்' என்னும்
பாடலில் இயற்கை ரசனை உண்டு; இனிமை உண்டு;அடிநாதமாக ஆன்மீகம் உண்டு. இவையெல்லாவற்றையும்
விட ஒரு வித்தியாசமான ராகம் உண்டு.
கர்னாடக இசையில் பல்லாயிரக்கணக்கான ராகங்கள் இருந்தாலும், சில நூறு
ராகங்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. திரை இசையில், இவரைப் போல ராகங்களை யாரும் உபயோகப்படுத்தியதில்லை-
எண்ணிக்கையிலும் சரி, தரத்திலும் சரி, பயன்படுத்திய விதத்திலும் சரி. புழக்கத்தில்
இருக்கும் பல ராகங்களை இவர் பயன்படுத்தியிருந்தாலும், பல அரிய ராகங்களை இவர் எடுத்தாண்டிருக்கிறார்.
இவ்வாறான சில ராகங்களை உலகிலேயே முதன்முறை உபயோக்கப்படுத்தியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
கமாஸ் என்னும் ராகம் கர்னாடக இசையில் மிகவும் பிரசித்தமான ஒரு ராகம்.
மனதிற்கு அமைதி அளிக்கும் இந்த ராகத்தில் இவரே சில இனிமையான பாடல்களை அளித்திருக்கிறார்.எனினும்,
கர்னாடக கமாஸ் என்னும் இன்னொரு ராகம், பலரும் அறியாத ஒரு ராகம். இதில் ஆச்சரியப்படத்தக்க
விஷயம் என்னவெனில், ஆரோஹணத்தில் 6, அவரோஹணத்தில் 6 என மிகவும் எளிதான அமைப்புடன் இந்த
ராகம் இருந்தும், சாஸ்திரிய இசையில் இந்த ராகத்தை எனக்குத் தெரிந்தவரையில் யாரும் பயன்படுத்தியதில்லை.
திரையிசையிலும் இளையராஜாவைத் தவிர வேறு எந்த இசையமைப்பாளரும் இந்த ராகத்தை கையாண்டதில்லை-நான்
அறிந்த மட்டில். சுமார் 20 பாடல்களுக்கும் மேல் இந்த ராகத்தில் இவர் மெட்டமைத்திருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.
பஹுதாரி என்னும் பிராபல்யம் மிக்க ராகம் போல இது ஒலித்தாலும், பலரும்
இந்த ராகத்தில் அமைந்த நிறைய பாடல்களை பாகேஸ்ரீ என்று கூறுவதையும், இன்னும் சிலர் ஸ்ரீரஞ்சனி
என்று வகைப்படுத்துவதையும் வலைத்தளங்களில் நான் படித்திருக்கிறேன். ஸ்ரீரஞ்சனி போல்
இது ஒலிக்கும் காரணம் இரண்டு ராகங்களும் ஒரே கிருஹ பேதக் குழுவில் வருவதால். இந்த ராகத்தின்
பஞ்சம ஸ்வரத்தை ஆதாரமாகப் பிடித்தால், ஸ்ரீரஞ்சனி ஒலிக்கும் என்பது இசைக் கோட்பாடு.
இப்பொழுது பாடலைக் கவனிப்போம்.
விசைத்தட்டு இசைக்கருவியிலிருந்து ஒலிக்கும் மணியோசையுடன் தொடங்குகிறது
பாடல். பின்புலமாக ஒலிக்கும் வயலின்கள் இன்னும் ஒளியூட்ட, அங்கு ஒரு தெய்வீக பிரகாசத்தை
நாம் காணுகிறோம்.தொடர்கிறது ஜானகியின் அகாரம்.
இதமான மனது இப்பொழுது பதமாக, ராகத்தின் இனிமை நம்மை வசீகரிக்க, மனது இதமாகிறது.இதமான
மனது இன்னும் பதமாக, குரலின் அகாரத்தை கிளி போல் பின்பற்றி, குயில் போல் ஒலிக்கிறது
குழல்.திஸ்ர கதியில் அமைந்த அகாரத்திற்கு தாள வாத்தியம் எதுவும் இல்லை. ஆனால், தாள
வாத்தியத்தின் பொறுப்பை ஏற்கிறது, எல்லாம் வல்ல பேஸ் கிடார். நமது மனத்தின் தந்திகளை
மீட்டுவது போல் ஒலிக்கும் சிதார், நம்மை மாய உலகிற்கு இட்டுச் செல்கிறது.அது மாய உலகம்தானா?
8 திஸ்ரங்களுக்குப் பிறகு விடை கிடைக்கிறது நமக்கு.
மாயம் என்றால் பொய்மை அல்லவா? ஆனால், இப்பொழுது நாம் காண்பது நிதர்சனமான
அழகான ஒரு உண்மை அல்லவா! பொன்வானம் போடும் கோலங்களை குரலில் இழைவுடன், சங்கதிகளுடன்
ஜானகி பாடுவதும், அதைக்கேட்டு மயங்கிய குழல் அவரைப் பின் தொடருவதும், நம் கண் முன்னால்
விரிய, இது எப்படி மாய உலகம் ஆகும்?
முன்தரவு இசையில் பேஸ் கிடாரைத்
தாள வாத்தியமாகப் பயன்படுத்திய லய ராஜாவின் கைவண்ணம் பல்லவியிலும் தொடருகிறது. 'பொன்னில்'
எனும்பொழுது, 'த கி ட' என ஒலிக்கும் தபலா, 'வானம்' எனும்பொழுது, 'த க த க தி மி' என்று
6 சிறுதுடிப்புகளாக வாசிக்கப்பட்டு, பிறகு த க தி மி/த க என ஒலிக்கிறது. இதில், 'த'
வும் 'தி'யும் அழுத்தமாக ஒலிக்கப்படுவதும், ஐந்தாவது அசையாகிய 'த' சற்று மென்மையுடன்
வாசிக்கப்பட்டு, இரண்டாவது, நான்காவது, ஆறாவது அசைகள் வாசிக்கப்படாமல், கார்வை கொடுத்திருப்பது
அவருக்கே உரித்தான ராஜ முத்திரை.
இந்த ராகத்தின் மேற்கத்திய பரிமாணத்தைக் காட்டுகிறது, முதலாவது இசையிசையில்
முதலில் வரும் வயலின்கள். மேல் ஸ்தாயியில் வாசிக்கப்படும் இவை மிக லேசாக, கர்னாடக கமாஸின்
தாய் ராகமாகிய ஹரிகாம்போஜியை சற்றே கோடிட்டுக் காண்பிக்க, இவற்றுக்குப் பின்புலமாக
ஒலிப்பது, ஒற்றை வயலினின் தந்திகள் மட்டும். இவ்வாறு வில்லின் துணையின்றி இசைப்பதை
பிட்ஸிகாட்டோ என மேற்கத்திய இசையில் அழைப்பார்கள்.
மனதை அமைதியாகக் கொள்ளையடிக்கும்
குழல் தொடர்கிறது. நரம்புகளுக்குள் அமைதியாகப் பாயும் சிதார் குழலின் இன்னிசையை தனக்கே
உரித்தான முறையில் ஒலிக்கிறது. இறுதியாக, விசைத்தட்டு இசைக்கருவியிலிருந்து வரும் ஒலி,
சிதார், பேஸ் கிடார் என மூன்றும் ஒன்று சேர்ந்து நமது இதயத்தைத் துள்ள வைக்கிறது தாள
கதியுடன்.
ஒரு சிறிய ஆச்சரியம் காத்திருக்கிறது முதலாவது சரணத்தில். வலஜி என்னும்
இன்னொரு ராகத்தின் சாயல் முதல் இரண்டு வரிகளில் தென்படுகிறது. இங்கு கவனிக்க வேண்டியது
என்னவெனில், இந்த ராகத்தின் தாய் ராகமும் ஹரிகாம்போஜிதான். ஒரே வித்தியாசம், கர்னாடக
கமாஸில் உள்ளது 6 ஸ்வரங்கள், இதில் 'மத்தியமம்' எனப்படும் 'ம' வை எடுத்துவிட்டால்,
கிடைப்பது வலஜி. மிகவும் லாகவத்துடன் இதைத்தான் செய்திருக்கிறார் இன்னிசை சக்கரவர்த்தி.
சரணத்தின் இரண்டாவது பகுதியில், தாள வாத்தியங்கள் மேல் காலத்தில் சென்று,
நம்மை முன்னும் பின்னும் ஆட வைக்கின்றன வரிகள்.
விசைத்தட்டுக் கருவியினிறு வரும் ஒலி பேஸ் கிடாருடன் கூட்டமைக்கத் தொடங்குகிறது
இரண்டாவது இடையிசை. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா என்று கூறுவது போல் நுழையும் குழல்
குழைவுடன் ஒலிக்க, அங்கு இழைக்கப்படுகின்றன பட்டு நூல்கள். முதல் இடையிசையில் ஒலிக்கப்பட்ட
பிட்ஸிகாட்டோ மறுபடியும் இங்கு முன்னம் ஒலித்ததை விட இன்னும் அழுத்தமாக ஒலிக்கப்பட,
வயலின் கூட்டம் அதன் மேல் மேல்ஸ்தாயியில் படை எடுக்க, குயில் போன்ற குழல் மயில் போல
அகவ, அங்கு இயற்கையின் அற்புதத்தினை இசை வடிவமாகக் காண்கிறோம்.
இரண்டாவது சரணத்தின் தொடக்கத்தில், வித்தியாசமான இரண்டு வரிகள் தாள
ஜதியுடன் சேர்க்கப்பட அழகுணர்ச்சியினை நாம் அனுபவிக்கிறோம்.
மெய்ஞானமும், விஞ்ஞானமும் இயற்கையுடன் கலக்க, மிகுகளிப்பு அடைகிறோம்.
தெய்வீக உணர்வு என்பது இதுதானோ! உண்மையான ஆன்மீகம் என்பது இதுதானோ!
Check this out on Chirbit
No comments:
Post a Comment