உருவமற்றிருக்கும்.கோடிக்கணக்கான உருவங்களைத் தன்னுள்
அடக்கியிருக்கும்; இயங்காமல் இருக்கும்; எல்லா இயக்கங்களும் இதில் நடைபெறும்; ஆடாமல்
இருக்கும்; அனைத்து பொருள்களும் இதில் ஆடிக்கொண்டிருக்கும். ஒன்றுமேயில்லாமல் இருக்கும்,
அனைத்தும் இதில் இருக்கும்.
அது என்ன என்று தெரிந்து கொள்வதற்குமுன் இந்தப்பாடலை
கவனிப்போம்.
தாளின் மிசை நாளும் மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர் போள் அயில
கோள களிறாளி வர வில்
தோளமரர் தாள மதர் கூளி எழ
மீளி மிளிர்தூளி வளர்பொன்
காளமுகில் மூளுமிருள் கீள விரி
தாள
கயிலாய மலையே.
இந்தப் பாடலைக் கேட்கும்பொழுது என்ன தோன்றுகிறது?
தாளம், சந்தம், இனிமை, தமிழ், அழகு என அடுக்கிக்கொண்டே
போகலாம்.இவையெல்லாவற்றையும் விட பல விஷயங்கள் மறைமுகமாக இருக்கின்றன. முதலில், இந்தப் பாடலின் பொருள் என்ன என்று பார்க்கலாம்.
'கண்ணைப் பறிக்கும் வரிகளுடைய புலித்தோலை உடுத்துபவர்;
என்றும் பரமானந்தத்துடன் இருப்பவர்; அடியவர்களை ஆட்கொள்ளுபவர்; குற்றமற்றவர்; கூரிய
பற்களையுடைய பெரும் யானையை அடக்கி ஆண்டவர்; மிக்கத் திறன் வாய்ந்த வில்லினை தோளில்
அணிந்தவர் ; பூத கணங்கள் தாளமிட நடனம் புரிபவர்; மின்னும் திருவெண்ணீற்றினை அணிபவர்;
கரிய மேகங்கள் உண்டாக்கும் இருளைத் தனது பொன்னொளியால் போக்கும் அடிவாரத்தையுடைய மலையில்
இருப்பவர்'என்பதே இதன் பொருள்.'
‘புலி’, ‘யானை; ‘அருள் செய்பவர்’, ‘அடக்கி ஆண்டவர்;
‘இருள்’, ‘ஒளி’, என மாறுபாடுகளைக் காட்டுவதோடு மட்டுமன்றி, ஒளி என்பது ஒரு இடுகுறியாக
பாடலில் வருவதை கவனிக்கலாம்.தவிர, அவரது ஆட்டம் பாடலின் நடுவில் குறிப்பிடப்பட்டு,
எல்லாவற்றிற்கும் மையம் ஆடல் மற்றும் தாளம் என்று மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.
ஞானத்துடனே
எப்பொழுதும் சம்பந்தம் வைத்திருந்து ஏற்கெனவே அமிழ்து போல இருக்கும் தமிழை இன்னும்
இனிய அமுதாக நமக்கெல்லாம் வழங்கி வந்த திருஞானசம்பந்தர் இயற்றிய பாடல் இது.
முதலில் போட்ட புதிருக்கான விடை என்ன என்று இப்பொழுது
பார்க்கலாம்.
'அண்டம்' என்பதே அது.
ஞானசம்பந்தரின் பாடலும் இந்த அண்டத்தையே குறிக்கிறது.
எப்படி?
அணுக்களால் ஆனது அண்டம். ஒவ்வொரு அணுவுக்கு உள்ளேயும்
இருக்கும் கருப்பொருளை (nucleus ) சுற்றி மின் அணு(electron ) நொதுமம்(neutron ), நேர்மின்மி( proton) எப்பொழுதும்
சுழன்று கொண்டிருக்கின்றன.
சிவனின் நடனம் இதைத்தான் உணர்த்துகிறது. இந்த இடத்தில்
சில விஷயங்களைக் கூறுவது அத்தியாவசமாகிறது. சிவன் அல்லது நடராஜ உருவம், மதங்களுக்கு
அப்பாற்பட்ட விஷயம். தெய்வ சக்தி என்று இதனைக் குறிப்பிடலாம். இறை நம்பிக்கை இல்லாதவர்கள்
இதனை விஞ்ஞான ரீதியாக நோக்கலாம். நடராஜ உருவம் என்பது ஒரு குறியீடு. இது உணர்த்துவது
என்ன?
அந்த உருவத்தைச் சுற்றி இருக்கும் நெருப்பு ப்ரம்மாண்டத்தையும்,
விழிப்புணர்வு நிலையினையும், பிறப்பு, இறப்பு, வினைகள் இவற்றின் சுழற்சியினைக் காட்டுகின்றது.சிவனுடைய
நான்கு கைகள், நான்கு திசைகள்.மேலே இருக்கும் வலது கையில் இருக்கும் உடுக்கை, காலசக்கரத்தையும்,
ப்ரம்மாண்ட நாதத்தையும், மேலே இருக்கும் இடது கையில் உள்ள அக்னி அழித்தலையும், கீழே
உள்ள வலது கை அருளையும், கீழே உள்ள இடது கை யானையின் துதிக்கை போல சுழன்று சற்று மேலே
சென்று, அறியாமை என்னும் காட்டிலிருந்து வெளியே வருவது எப்படி என்று காட்டுகிறது. கைகளிலிருந்தும்,
தலையிலிருந்தும் தொங்கும் பாம்புகள் அகங்காரத்தையும், இடுப்பைச் சுற்றி இருக்கும் பாம்பு
குண்டலினி சக்தியையும் குறிப்பிடுகின்றன.வலது காலின் கீழே இருக்கும் குள்ள உருவம்,
குழப்பம், மறதி, இவைகளையும், அதனை மிதித்துக் கொண்டிருக்கும் வலது கால் வெற்றியையும்,
தூக்கி இருக்கும் இடது கால் எல்லாவற்றினின்றும் விடுதலையையும் குறிப்பிடுகின்றன.முழு
உருவமும் தாமரை இதழின் மீது இருப்பது, உள்ளிருக்கும் அமைதியினை உணர்த்துகிறது.
இந்த பரமானந்தம் மிக்க நடனம் நமக்கெல்லாம் உணர்த்துவது
இதுதான்.
அண்டத்தில் உள்ளவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பு
உடையவை. (Telepathy )என்னும் சேணிலை உணர்வாட்சி நிகழ்வதும் இதனால்தான். நாம் பேச நினைப்பதை
இன்னொருவர் பேசுவதும் இதனால்தான். இரண்டு ஆன்மாக்களும்
ஒரே அலைவரிசையில் இருக்கும்பொழுது இது நிகழ்கிறது.
இசை என்பதும் இந்த அணுக்களின் கூட்டுதான். கடந்த
இரண்டு மூன்று சிறப்புப் பதிவுகளில் 'இறை மறுப்பு கொள்கை உடையவர்கள் கூட தெய்வீகத்தன்மையினை
உணர முடிவது இசையால் மட்டுமே சாத்தியம்' என்று குறிப்பிட்டிருந்தேன்.
இசை என்பது இந்த அண்டம் முழுதும் நிறைந்திருக்கிறது.எனினும்,சிலரால்
மட்டுமே அந்த அணுக்களை சேர்க்கும் விதத்தில் சேர்க்க முடிகிறது. அப்படி நிகழும்பொழுது
இனிமை பன்மடங்காகிறது. அதே அலைவரிசையில் இருக்கும் ஆன்மாக்களை அந்த இசை ஈர்க்கிறது;
மெய்மறக்க வைக்கிறது. இந்த சேர்க்கையினை இயல்பாகச் செய்யும் ஒரு மாமனிதர் இளையராஜா.
எனவேதான், அந்த இசை நம்மை மகிழ வைக்கிறது;அழ வைக்கிறது; ஆட வைக்கிறது; பாடவும் வைக்கிறது.
இன்றைய சிறப்புப் பாடலும் அந்த வகையினைச் சார்ந்ததுதான்.
'ஆலாபனா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நடராஸு நயனால
ஜீவிஞ்சனா' என்ற பாடல், ராகத்தின், தாளத்தின் அழகிய ரகசியங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.
இசைஞானி, இந்தப் பாடலை தர்மவதி என்னும் ஆன்மீக உணர்வைத் தரக்கூடிய ராகத்தில் அமைத்தது
சிறப்புக்குரிய இன்னொரு விஷயம்.
இந்த இசையாக்கத்தில் மறைந்து கிடக்கும் சில
அம்சங்களை இப்பொழுது பார்க்கலாம்.
வீறமமைதியுடன் தொடங்குகிறது ஆக்கம். 6 வினாடிகளுக்கு
நாம் கேட்பது தம்பூராவின் நாதம் மட்டுமே.இந்த தியான நொடிகளே போதும், தெய்வீக
மழை பொழிய இருப்பதை நமக்குக் காட்டுவதற்கு. மிக வித்தியாசமான விருத்தம்
எஸ்.பி.பி. அவர்களின் பக்திப் பரவசம் ததும்பும் குரலில் தொடர்கிறது. இந்த
விருத்தம், அகண்டத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வீகத் தன்மையைப்
பற்றிப் பேசி, இறுதியில் நாட்டியமே அந்தப் பரம்பொருள்தான் என்று கூறுகிறது.'நாட்டியாத்மா'
என்று பாடும்பொழுது தர்மாவதி ராகத்தின் அடிக்கோடு தெரிகிறது. தொடர்கின்றன நாட்டிய
ஜதிகள்.சாஸ்திரிய நயம் மிக்க இந்த ஜதிகள் இன்னும் ஒன்றை நமக்கு உணர்த்துகின்றன.
முதல் இரண்டு ஆவர்த்தனங்களில் முதல் அரை ஆவர்த்தனம்
கீழ்க்காலத்திலும், அடுத்த அரை ஆவர்த்தனமும், தொடரும் மூன்றாவது ஆவர்த்தனமும்
அடுத்த காலத்திலும், நான்காவது ஆவர்த்தனம் அதற்கு அடுத்த காலத்திலும் அமைந்திருக்கிறது.
கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்னும் மூன்று காலங்களை குறிப்பிடுவதாகவும்
வைத்துக் கொள்ளலாம்; அல்லது மூன்று கண்களை உணர்த்துவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
லய நடன ராஜா, சொல் கட்டுகளை எவ்வாறு அமைத்திருக்கிறார்
என்று பார்க்கலாம்.
முதல் இரண்டு ஆவர்த்தனங்களில் 16, ‘3, 3, 3,1, 2, 2, 2’ என பகுக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாவது ஆவர்த்தனத்தில் இது 4, 3, 5, 4 என
அரை ஆவர்த்தனத்திற்கு பிரிக்கப்பட்டு, மொத்த மாத்திரைகள் 32 ஆகின்றன. இந்த
4, 3 மற்றும் 5,4 ஒரு மிஸ்ரம், ஒரு சங்கீரணம் எனக் கொள்ளலாம்.
நான்காவது ஆவர்த்தனம், 3, 3, 3, 4 என்று அதி
மேல்காலத்தில் சென்று மொத்த மாத்திரைகள் 64 ஆகின்றன.
'தத்தி தரிகிட தொம் கிட நம் கிட' என்னும் ஜதியும்,
தர்மவதியில் எஸ்.பி.பி.யின் அகாரமும் மேல் அடுக்கப்பட்டு ராகமும் தாளமும் நடனம் ஆடுகின்றன.
இரண்டு ஆவர்த்தனங்களுக்குப் பிறகு, மூன்று மூன்றாக ஸ்வரங்கள் பிரிந்து மேலே செல்கின்றன;
அவரோஹணமாக இறங்குகின்றன.இது சுவர்க்கத்தின் வாசற்படி.பேரின்ப லோகத்திற்கு நம்மை அழைத்துச்
செல்லும் ஏணியின் முதல் படி.
'தா...ம்' என்றபடி திறக்கிறது அந்த வாசல்.
அழகுற மிளிரும் பல்லவி, ராகத்தின் வசீகரத்தை நயம்படக்
காட்டுகிறது.அவ்வப்பொழுது ஒலிக்கும் மணியோசை,தெய்வீக உணர்வை இன்னும் அதிகரிக்கிறது.
முதலாவது இடையிசையில், ஜதிகள் மறுபடி ஒலிக்க, அவற்றிற்கு
வயலின்கள் சுருக்கமாக பதில் கூறுகின்றன.முதலாவது ஆவர்த்தனத்தில் வயலின்கள் தொடர எட்டு
எட்டு அக்ஷரங்களாக ஒலிக்கும் ஜதி,அடுத்த ஆவர்த்தனத்தில் ஆறு ஆறாக ஒலிக்கின்றன.மீதம்
இரண்டை வயலின்கள் கவனித்துக் கொள்கின்றன.மூன்று முறை இது நடக்கிறது.நான்காவது எட்டு
ஜதியாகவே ஒலிக்கிறது.
இப்பொழுது,வயலின்கள் தர்மவதியை இனிமையாகத் தொடருகின்றன.
சில கணங்கள் கடந்த பின்னர், இன்னொரு குழு வயலின்கள் சேர்ந்து கொண்டு இதே ராகத்தின்
வேறு ஸ்வரங்களைத் தொடர்ச்சியாக வாசித்து மாறுபாட்டினை காட்டுகின்றது.ராகத்தின் பல பரிமாணங்கள்
இப்பொழுது வெளிப்படுகின்றன.தொடர்கின்றன இரண்டு வீணைகள். தபலா தரங்கின் துணையுடன் இவை
தர்மவதியின் ப்ரகாசமான பகுதிகளுக்கு அழகாக அழைத்துச் செல்கின்றன.ஒவ்வொரு அரை ஆவர்த்தனத்திற்குப்
பிறகு மிகக் குறைந்த கால அளவே வரும் வயலின்கள், இறுதியில் 'த ரி கி ட தாம்' என வாசித்து
முதலாவது சரணத்திற்கு முகமன் கூறுகிறது.
முதலாவது சரணம், தொடர்ச்சியாக வரும் சுவாரசியம் அடங்கிய
பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதலாவது பகுதி ஆழமாகவும், கூருணர்வுத்திறத்துடனும் இருக்கிறது.
'கட சீம நாகேந்திர ஹாராவளி' எனத் தொடங்கும் இரண்டாவது பகுதியிலிருந்து சிறிது சிறிதாக
வேகம் பிடிக்கிறது.அரை ஆவர்த்தனத்தில் பாடப்படும் அகாரம் அழகின் அம்சம்.சிறந்த தெளிவுடன்
தீர்மானமாகச் செல்லும் இறுதிப் பகுதி,'ததீங்கிணத்தோம்' என்று மூன்று முறை கூறுவதுடன்
இந்த சரணத்தை முடிக்கிறது.
இரண்டாவது இடையிசையின் முதல் பகுதியில் நாம் காண்பது
வயலின்களுக்கும், ஏனைய பிற தாள வாத்தியங்களுக்கும் நிகழும் சம்பாஷணை மட்டுமல்ல. பண்ணமைப்பாளரின்
பலிதிசையிக்கத்திறனையும்தான்.
வயலின்கள் இரண்டு துடிப்புகளுக்கு ஒலிக்கின்றன.தொடரும்
தாளவாத்தியங்கள் இரண்டு துடிப்புகளுக்கு ஒலிக்கின்றன.ஒரே ஆவர்த்தனத்தில் இது இருமுறை
நிகழ்கிறது.அடுத்த ஆவர்த்தனத்தில், வயலின்கள் ஒரு துடிப்பும், ஒரு தாள வாத்தியக் குழு
இரண்டு துடிப்புகளும், இன்னொரு தாள வாத்தியக் குழு ஒரு துடிப்பும் இசைக்கின்றன.இதுவும்
இருமுறை நிகழ்கிறது.தொடரும் ஆவர்த்தனத்தில், வயலின்களும், தாள வாத்தியங்களும் ஒவ்வொரு
துடிப்பிலும் மாறி மாறி ஒலித்து இறுதியாக ஒன்று சேருகின்றன.ஆக்கத்திறனுக்கும், சிறப்புத்திறனுக்கும்
நிகழும் சேர்க்கை இது.
இப்பொழுது தனி வயலின் பட்டுபோன்ற சங்கதிகளுடன் செல்ல,
குழல், கவனத்துடன் அதே சங்கதிகளை தனக்கே உரித்தான பாணியில் ஒலித்து நம்மை ஆட்கொள்கிறது.இந்த
சாஸ்திரிய இசையின் இனிமையில் நாம் கட்டுண்டு கிடக்கும்பொழுது, தரங்கம் என தமது அழகிய
நிறங்களைப் பரப்புகின்றன ஜலதரங்கமும், தபலா தரங்கமும்.
ஒரு தனித்தன்மையான படிமம் அடுத்து வருகிறது. எஸ்.பி.பி.
ஜதிகள் முதலில் சொல்ல, அந்த தாள கதியிலேயே, நடராஜரின் வர்ணிப்பையும் தொடர்கிறார்.எஸ்.பி.பி.யின்
உணர்ச்சிமிக்க குரலில் அதிரும் இந்தப் பகுதி நம்மை ஆன்மீகத்தின் எல்லைக்கே அழைத்துச்
செல்கிறது. தொடரும் வயலின்களும், தாள வாத்தியங்களும் சற்று ஆவேசத்துடன் செல்கின்றன.
இரண்டு ஆவர்த்தனங்களுக்குப் பிறகு, 'மகண' 'ரகண' 'பகண' என பண்டைய புத்தகங்களில் காணப்படும்
நாட்டிய ஜதிகள் சிம்மம் போன்ற குரலில் ஒலிக்கிறது.இயல்பாகவும்,தீவிரமாகவும், கட்டுக்கோப்புடனும்
செல்கின்றன இந்தப் படிமங்கள்.
இந்த ஜதிக்கோர்வை முடிந்தவுடன் நடை கண்டத்திற்கு
மாறுகிறது.மேல்ஸ்தாயி வயலின்களும், தாள வாத்தியங்களும் செறிவுடன் ஆட,இப்பொழுது தொடர்வது
துர்கையின் வர்ணனை.வயலின்கள் தாண்டவமாட நாம் தெய்வீக உலகத்திற்குச் செல்லுகிறோம்.
இது அறிவெல்லை கடந்த நிலை..
இதுவே அண்டத்தின் நடனம்!
No comments:
Post a Comment