ஐந்தும்
ஐந்தும்
ஐந்தும்
ஆகி அள்ளவற்று
உளாயுமாய்,
ஐந்தும்
மூன்றும்
ஒன்றுமாகி
நின்ற ஆதி தேவனே!
ஐந்தும்
ஐந்தும்
ஐந்தும்
ஆகி அந்தரத்து
அணைந்து
நின்று,
ஐந்தும்
ஐந்தும்
ஐந்தும்
ஆய நின்னை யாவர் காண வல்லரே?
அஞ்சிலே
ஒன்று பெற்றான்
அஞ்சிலே
ஒன்றைத்
தாவி
அஞ்சிலே
ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக
ஏகி
அஞ்சிலே
ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டு அயலாரூரில்
அஞ்சிலே
ஒன்றை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்.
இது
என்ன? வார்த்தை
விளையாட்டா?
அல்லது எண்களின்
விளையாட்டா?
முதலாவது
பாடல், திருமழிசையாழ்வார்
எழுதிய திருச்சந்த
விருத்தங்களில்
ஒன்று.இரண்டாவது
பாடல், கம்பன் கவிதை.
கேள்விகளுக்கு விடை தேடுவதற்குமுன்,
இந்தப்பாடல்களில்
பொதிந்துள்ள
அர்த்தத்தை
சற்றே கவனிப்போம்.
வைணவ
நெறிப்படி,
இறை சக்தி என்பது 24 தத்துவங்களைத் தன்னுள்ளே
அடக்கியுள்ளது.
இந்த இருபத்திநான்கினை நான்கு ஐந்துகள், ஒரு மூன்று மற்றும் ஒன்று என்று பிரித்து கவிதை நயத்துடன் பாடியுள்ளார்
ஆழ்வார்.
நிலம், நீர்,
தீ, காற்று, வானம் என்ற
பஞ்ச பூதங்கள்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அறிகருவிகள்.
வாய், கால், கை,எருவாய்,கருவாய் என்னும் தொழிற்கருவிகள்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை,நாற்றம் என்னும் நுண்ணிய பொருள்கள்.
முனைப்பு, மகான், விளக்கமில் பகுதி என்னும் மூன்று.
மனம் ஒன்று- ஆக மொத்தம் இருபத்தி நான்கு.
ஆக்கலின் மறைபொருளைப் பாடுவதற்கு 'ஐந்து' எனும் எண்ணை
வைத்து ஆழ்வார் விளையாடினால், அதே ஐந்தை, தனது செல்லப்பிள்ளையாகிய அனுமான் புகழ் பாட
உபயோகப்படுத்துகிறான் கம்பன்.
ஐம்பூதங்களில் ஒன்றான காற்று அதாவது வாயுவின் புதல்வனாகப்
பிறந்தான்.
ஐம்பூதங்களில் ஒன்றாகிய பூமிக்குப் பிறந்த சீதாதேவியைக்
கண்டுவருவதற்கு, ஐம்பூதங்களில் ஒன்றாகிய ஆகாய மார்க்கமாக ஐம்பூதங்களில் ஒன்றாகிய நீர்-அதாவது
கடலைக் கடந்து,எதிரிக்குப் பாடம் புகட்ட ஐம்பூதங்களில் ஒன்றாகிய தீயை அந்த வனத்தில்
வைத்தான்.
எண்களைச் சுற்றித்தான் அமைந்திருக்கிறது இந்த உலகம்.எண்களைச்
சுற்றித்தான் அமைந்திருக்கிறது நமது வாழ்க்கை.
எண்களின் ஆட்சிக்கு உட்படாதது ஏதேனும் உண்டா? காலம்,
இடம், நிகழ்வு,இனவிருத்தி, இறப்பு...எண்கள் இல்லாமல் நமது வாழ்வே ஒரு பூஜ்யம்தான்.
பூஜ்யமே ஒரு எண்தானே!இவை எல்லாமும் இன்னொரு விஷயத்திற்கும் பொருந்தும்.
தாளலயம்!
நமது வாழ்க்கை இதனுடன் ஒத்திசைக்கிறது.கடிகாரத்தின்
ஓசை,ரயிலோசை, குயிலோசை,நமது சிரிப்பு, நமது அழுகை,நமது நடை,நமது ஓட்டம்..நமது உடலே
ஸர்காடியன் ரிதம் என்னும் தாளலயத்திற்கேட்டபடிதான் இயங்குகிறது என்பது விஞ்ஞானத்திலும்
நிரூபணமாகியிருக்கிறது.
எண்கள் மற்றும் தாளலயம்.இவை இல்லாமல் நமது வாழ்க்கை
இல்லை.
முதலில் குறிப்பிட்டிருந்த பாடல்களில்,ஒரே எண் பல்வேறு
பொருள்கள் கூறுவதைப் பார்த்தோம். முதலாவது பாடலில், 24, 5, 5, 5, 5, 3, 1 என்று பிரிக்கப்பட்டதையும்,
இரண்டாவது பாடலில், 5 என்னும் ஒரு எண்ணே ஐந்து விதமான பொருள்களைக் குறிப்பிடுவதைப்
பார்த்தோம்.
கர்னாடக இசையில், எண்களும், தாளலயமும் ஒரு கட்டுக்கோப்பில்
அடங்குவதால்,பாடல்கள் அழகாக ஒலிப்பதோடு மட்டுமன்றி, நமது மூளைக்கும் வேலை அளித்து நம்மை
சுறுசுறுப்பாக்குகிறது.நமது சிந்தனை ஒருமுகப்படுகிறது.நன்கு சிந்திக்கும் திறனும் செழுமைப்படுகிறது.மனமும்
பொருளும் ஒன்று சேர்கிறது. மூளை இதயத்தை சந்திக்கிறது.
எனவேதான், ஒருமுகப்படுத்துதல், ஒன்று சேருதல்,ஒன்றையே பற்றிக்கொள்ளல், அமைதி என பல
பொருள்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் 'லயா' என்னும் சொல், தாளத்தைக் குறிப்பிடுவதற்காக
-இசையில் குறிப்பாக கர்னாடக இசையில்- பயன்படுத்தப்படுகிறது.
கடந்த ஆறு பதிவுகளில்,தாளங்களின் அடிப்படை பற்றியும்,தாளக்
குறியீடுகள் பற்றியும், ஒரு தாளம் கணக்கில் எப்படி அடங்குகிறது என்பதனையும், தாளக்
குறியீடுகள் பிரிக்கப்பட்டு, பகுக்கப்பட்டு,வகுக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும் சற்றே
விரிவாகப் பார்த்தோம்.குறிப்பாக,தமது ஆக்கபூர்வமான சிந்தனையுடன்,நல்ல கற்பனை வளத்துடன்,புதுமையான
முறையில் தாளங்களையும் அதன் படிமங்களையும் கையாண்டு உண்மையான 'லய ராஜா' என்று நம்மைக்
கூற வைக்கும் இளையராஜாவின் 6 வெவ்வேறான பாடல்களைக் கண்டோம்.ஒரே சமயத்தில் ஒலிக்கும்
இரண்டு வெவ்வேறு தாளங்கள், பல்லவியில் ஒருவகை தாள அமைப்பு, சரணத்தின் முதல் பகுதியில்
இன்னொரு தாள அமைப்பு, பல்லவி சரண அமைப்பே மிக வித்தியாசமாக அமைத்தது, ஒரு கட்டுக்கோப்பில்
அடங்காமல் தானாகச் செல்வதுபோல் சென்றாலும்,தாள லயத்தில் அடங்கும் பாடல்,மற்றும் இரண்டு
தாள வகைகள் அடுத்தடுத்து வந்து நம்மைப் பேராச்சிரியத்தில் ஆழ்த்தும் பாடல் என்று பார்த்தோம்.
இன்னொரு பரிமாணத்தைக் காட்டும் பாடல் ஒன்றுடன் இந்தத்
தொடர் முடிவடைகிறது.லயத்தைத் தன்னுள்ளே அடக்கி, அழகாக அந்த லயத்தை நளினமாக வெளிப்படுத்துவதில்
நமது பாரம்பரிய நடனத்தைத் தவிர ஒரு சிறந்த கலை இருக்க முடியாது.எனவே, இந்த இனிய நாளில்,
நாட்டியப் பாடல் ஒன்றினை நான் எடுத்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
'குந்தி
புத்ருடு' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்ய கலாபம் நவரஸ ரூபம்'
என்ற பாடல், நாட்டிய தாளக் குறியீடுகள் அழகாக இடம்பெற்று,கர்னாடக சங்கீத முறைப்படி,
கணக்குடன் தாளங்கள் பிரிக்கப்பட்டு, பகுக்கப்பட்டிருக்கும் அவரது பல நாட்டிய பாடல்களில்
ஒன்று.
8 துடிப்புகள் கொண்ட ஆதி தாளத்தில் அமைந்த இந்தப்
பாடல், நான்கு ஆவர்த்தனங்களுக்கு, மிருதங்கம் மற்றும் சலங்கை அழகான தாளப்படிமங்களை
வரைவதுடன் தொடங்குகிறது.
பல்லவியின் துவக்கத்தில் 'நாட்டிய கலாபத்தை' ரசித்து
வேடிக்கை பார்க்கும் மிருதங்கம்,'த ரி கி ட தோம்' என்று மூன்று முறை வாசித்து, பிறகு
சொற்களோடு 'த க தி மி' என்று தொடருகிறது.
முதலாவது இடையிசைச் சேர்க்கையில் நாட்டிய சொற்கட்டுகள்
கூறப்பட்டு, கீழ்வருமாறு பகுக்கப்படுகின்றன:
'தஜ்ஜொணுத தத்திமித தஜ்ஜொம்' என்பது த க த கி ட/த
க த கி ட/த க தி மி-அதாவது இரண்டு கண்டம், ஒரு சதுஸ்ரம்.5+5+4 இவைகளைக் கூட்டினால்
வருவது 14.தொடர்ந்து 2 மாத்திரைகளுக்கு இடைநிறுத்தம் நிகழ்ந்து மொத்தம் 16 ஆகி, அரை
ஆவர்த்தனத்தைப் பூர்த்தி செய்கின்றன. அடுத்த அரை ஆவர்த்தனத்திற்கு இசைக்கோர்வை இதே
சொற்கட்டுகளை இசைக்கிறது. இது மொத்தம் இருமுறை நிகழ்கிறது. தொடர்ந்து வரும் அரை ஆவர்த்தனத்தில்,
'தாம்' 'த கி ட' சேர்க்கப்பட்டு,'தஜ்ஜொணுத தத்திமித' மட்டும் பாடப்பட்டு 3,3,5,5 என
16 ஆகிறது.இதுவே இருமுறை பாடப்பட்டு, ஆவர்த்தனத்திற்கு மொத்தம் 32 மாத்திரைகள் ஆகின்றது.
'தொம் த ரி கி ட த க தத்தீம் த'என்னும் 16 மாத்திரைகள்
அடங்கிய சொற்கட்டு 4 முறை தொடர்ந்து சொல்லப்பட்டு 64 மாத்திரைகள் ஆகின்றன.
தீர்மானத்தை முடிக்கும் அடுத்த ஆவர்த்தனத்தின் முதல்
பகுதியில்,'தொம் த ரி கி ட த க தா' இரு முறையும், 'தொம் த ரி கி ட த க' ஒரு முறையும்
வந்து 12+12+8 என்று 32 ஆகி, அடுத்த பகுதியில், அதாவது அரை ஆவர்த்தனத்தில் 'தொம் த
ரி கி ட த க தா'மட்டுமே 3 முறை வந்து 36 மாத்திரைகள் ஆகின்றன.இப்பொழுது 32 ஐயும்
36ஐயும் கூட்டினால் வருவது 68.ஆனால், இது 8 துடிப்புகள் கொண்ட தாளாமாதலால்,மாத்திரைகள்
8ஆல் வகுபடும் 16, 32,அல்லது 64ஆகத்தான் இருக்க வேண்டும்.இதுவரையில் பாடலிலும் அவ்வாறு
தான் இருந்து வந்தது. அப்படியிருக்கையில், இது என்ன 68?
இங்குதான் ஒரு ஆக்கத்தின் அழகு, மற்றும் இசைப்பாடல்
ஆக்குபவரின் திறனும் இருக்கின்றன. இந்தப் பாடலின் பல்லவி சமத்தில் ஆரம்பிக்கிறது.மேற்குறிப்பிட்ட
ஆவர்த்தனத்திற்கு முந்தைய ஆவர்த்தனம் வரை கணக்கும் சமம் முதல் சமம் வரைதான் இருக்கிறது.முதலாவது
சரணத்தின் முதல் துடிப்பில், சொற்கட்டின் கடைசி 'தா'வருவதால், முதல் வரியாகிய 'ஆதி
உமாபதி' தாளத்தின் இரண்டாவது துடிப்பில் ஆரம்பிக்கிறது.எனினும், முதலாவது சரணம் தாளத்தில்
சரியாக முடிந்து, பல்லவி மறுபடி சமத்திலேயே தொடங்குகிறது.
இரண்டாவது இடையிசையில், பெரும்பாலும் நாட்டிய சொற்கட்டுகளே
வருகின்றன.
முதலாவது 32, தத்தரி/தஜ்ஜணு/தத்திமி/த கி ட/தாம்/ததீம்/த
கி ட/தீம்/தீம் - 4, 4, 5, 3, 2, 3, 3, 4, 4- என்று பிரிக்கப்படுகிறது. இது இரு முறை
நடக்கிறது. இசைக்கருவிகளும் இதையே இரண்டு முறை இசைத்து, ராகமும், தாளமும் எப்பொழுதும்
சேர்ந்து இருப்பதை உணர்த்துகிறது.ஒரு ஆவர்த்தனத்தில் அமைந்த சிறிய ஸ்வரக்கோர்வையைத் தொடர்ந்து வரும் பகுதி எண்ணிலடங்கா
ஆர்வத்துடன் செல்கிறது.
'ததீம் தத்ததீம் கிடதக தத்தீம்த'என்று பதினாறு,
3,5,4,4 ஆக இது இருமுறை சொல்லப்படுகிறது.தொடர்ந்து சொற்கட்டுகள் 4, 4, 4 என்று முதல்
மூன்று துடிப்புகளில் கீழ்க்காலத்திலும், நான்காவது துடிப்பில் மேல்காலத்தில் 8 மாத்திரைகளாகவும்
வகுக்கப்பட்டு அடுத்த அரை ஆவர்த்தனத்திலும் இதே முறையில் வருகிறது.
அடுத்து வரும் இரண்டு ஆவர்த்தனங்களில் 'நா தின் தின்
நா' மிக அழகாகவும் புத்திசாலித்தனத்துடனும் உபயோகப்படுத்தப்பட்டு நமது மனங்களை கொள்ளை
கொள்கிறது.முதல் ஆவர்த்தனத்தின் முதல் மூன்று துடிப்புகளிலும், ஐந்தாவது,ஆறாவது மற்றும்
ஏழாவது துடிப்புகளிலும் வரும் இது அடுத்த ஆவர்த்தனத்தில் ஒரு துடிப்பு விட்டு அடுத்த
துடிப்பில் வருகிறது.முதல் ஆவர்த்தனத்தின் நான்காவது துடிப்பிலும், எட்டாவது துடிப்பிலும்
முன்புபோலவே மேல்காலத்தில் 'தொம் த ரி கி ட த க' என 8 மாத்திரைகள் வருகின்றன.அடுத்த
ஆவர்த்தனத்தில், அதாவது இரண்டாவது சரணம் தொடங்குவதற்கு முன்பு வரும் ஆவர்த்தனத்தில்,
'தொம் த ரி கி ட த க' விற்கும், 'த ரி கி ட த க' விற்கும் இடையே மிளிர்கிறது 'நா தின்
தின் நா'.'த ரி கி ட த க' விற்கு முன் 2 மாத்திரை இடைவெளி இருப்பது கவனிக்க வேண்டிய
ஒன்று.இது ஆவர்த்தனத்தின் முதல் பகுதி என்றால், இரண்டாவது பகுதியில், 'த ரி கி ட' ஏழு
முறை ஒலிக்கிறது.இறுதியில், 'தத்தீம் த தா' என்று முடிகிறது. கடைசி 'தா' முன்பு போலவே
சரணத்தின் முதல் வரியின் முதல் துடிப்பில் இருக்கிறது. எனவே, மறுபடி 32+36.
இரண்டாவது சரணத்தின் இரண்டாம் பகுதி முதல்
சரணத்தின் அமைப்பினின்றும் சற்று வேறுபடுகிறது.
த கி ட/த கி ட/த கி ட/த கி ட/த க தி மி
என்று 3, 3, 3, 3, 4 ஆகச் செல்லும் இது,
கடைசி வரியில் 4, 4, 4, 4, 6, 6, 4 என்று சென்று தீர்மானத்தை முடிக்கிறது.
தாளத்தைப் பற்றிப் பார்த்த நாம், சற்றே பண்திறத்தையும்
கவனிப்போம்.
இந்தப் பாடல் ஷாடவ ராகமாகிய ஹம்சானந்தி எனும் ராகத்தில்
அமைந்துள்ளது.
முன் தரவு இசையில்,மிருதங்க-சலங்கையினைத் தொடர்ந்து,இனிமையான
வீணை, விரைவதிர்வான சிதாருடன் இணைய, வயலின்கள் மிக லாவகத்துடன் ராகத்தை வரைகின்றன.ராகத்தின்
அமைதியான தன்மையை பல்லவியில் வரும் சித்ராவின் 'இம்காரத்திலும்' அதன் துடிப்பதிர்வான
வடிவத்தை சிதாரிலும் காண்கிறோம்.பல்லவியின் இரூதியில் வரும் நவரச ரூபத்தில், ராகத்தன்
அனைத்து ரசங்களும் நமக்குப் புலப்படுகின்றன.
முதலாவது இடையிசையில் சிதார், வீணா, வேணு,வயலின்
கள் சேர்ந்து பண்திறன் மெல்லலையாக வீசுகிறது.எஸ்.பி.பி.யின் குரலில் ஒலிக்கும் தெளிவான
சொற்கட்டுகள் பாடலை இன்னும் மிளிரச் செய்கிறது.நாட்டிய சொற்கட்டுகளை ஊக்கத்துடனும்
இனிமையாகவும் ஹம்சானந்தியை மீட்டும் வீணையும், சிதாரும் இசையமைப்பாளரின் ஆக்கத்திறனை
மறுபடியும் நமக்கு உணர வைக்கிறது.
நல்ல கற்பனை
வளத்துடன் புனையப்பட்ட இரண்டு சரணங்களிலும் சாஸ்திரீய நயம் மிகுந்த இன்னிசைக் கருவிகள்
இனிமைப்பண்புடனும், வனப்புடனும் ஜதிகளை ராகத்தில் வாசித்து மனதை தன்வயப்படுத்துகின்றன.
ஆற்றொழுக்கமான படிவங்கள் நிறைந்த தாளத் தோற்றப் பொலிவு.எங்கும்
ஊடுருவிப் பாயும் பாங்கொளி.
எண்களின் ஜாலம்..தாளத்தின் கோலம்..
இது ராஜ ஜாலம்.. ஈ லய ராஜ ஜாலம்..
No comments:
Post a Comment