கையில் புல் ஒன்றை மறைத்துக்கொண்டு, 'இது என்ன கீரை' என்று கிண்டலாகக் கேட்டான் ஒரு இடையன் ஒளவையாரிடம்.
கிண்டலைப் புரிந்து கொண்ட ஒளவையாரும், இவ்வாறு பாடினார்:
‘எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!’
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!’
தமிழில் எட்டு எனும் எண்ணைக் குறிக்கும் எழுத்து 'அ', 'கால்' எனும் அளவைக் குறிக்கும் எழுத்து 'வ'.இரண்டையும் சேர்த்து அடுத்து வரும் சொல்லோடு படித்தால் வருவது 'அவலட்சணம்'.அடுத்து,எருமை, கழுதை, குரங்கு என்று நேரடியாகக் குறிப்பிடாமல் மரியாதையோடு, எமனின் வாகனம், மூதேவியின் வாகனம்,ராமனின் தூதுவன் என்கிறார்.குட்டிச் சுவரும் மரியாதையோடு கூரையிலா வீடாகிறது.இவை எல்லாவற்றையும் விட கவிஞரின் புலமை புலப்படுவது 'ஆரையடா சொன்னாய்' என்ற கடைசி வரியில். இதன் நேரடியான பொருள்-'ஆரைக்கீரை' அந்த இடையனின் கையில் இருப்பது என்பது.இன்னொரு பொருள் 'யாரைப் பார்த்து நீ கேட்கிறாய்' என்பது. 'சொன்னாய்' எனும் சொல்லில் இருக்கும் 'நாயும்' அவனைக் குறிப்பது.
நகைச்சுவை என்பது ஒரு கலை.நாம் எல்லோரும் நகைச்சுவை உணர்வோடு பிறந்தாலும்,நம்மில் பலரும் இதை இழந்து விடுகிறோம்.எனினும், நமது கீழ்ப்பொட்டுமடலில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தாலே ஒழிய,இந்த உணர்வு நம் எல்லோரிடமும் உள்ளே ஆழ்ந்த பகுதியில் உறங்கிக்கிடக்கின்றது.கூ குள் தேடல் போட்டாலும் தென்படாத இது, துன்பம் நேர்கையிலும் யாழெடுத்து இன்பம் சேர்த்து சிரிக்கும்பொழுது கரைபுடர்ந்து ஓடுகின்றது. 'இடுக்கண் வருங்கால் நகுக' என்பது பொய்யாமொழியல்லவா?
சிரிப்பு நமது மூளையைத் தூண்டி சுறுசுறுப்பாக்குகிறது.சிரிப்பு நமக்கு மகிழ்ச்சியினை உண்டாக்குகிறது.சிரிப்பு நமக்கு அமைதி தருகிறது.
இசைக்கும் இந்த சக்தி இருக்கிறது.
வாருங்கள்!நம்மை சிரிப்பலையில் ஆழ்த்தி அதே சமயத்தில் இசை பற்றிய ஓரிரண்டு பாடங்களையும் நடத்தும் ஒரு இசையாக்கத்தினைக் காண்போம்..
மரபார்ந்த இசையில் பல நுணுக்கங்கள் நிறைந்த இந்த ராகத்தை இப்படிக்கூட கையாளமுடியுமா என்று நம்மை ஆச்சரியப்படவைக்கும் ஆக்கம் என்பதால்தான் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று கூறினேன்.
'யதுகுல காம்போதி' எனும் ராகம் ஒரு சுவாரசியமான ராகம்.கர்னாடக இசையின் மும்மூர்த்திகளும் இந்த ராகத்தில் பாடல்களைப் புனைந்திருக்கிறார்கள்.குறிப்பாக தியாகராஜர் மட்டுமே எட்டு கிருதிகளை இந்த ராகத்தில் அமைத்திருக்கிறார்.தீக்ஷிதரின் நவகிருஹ கீர்த்தனைகளில் சனி பகவானின் மேல் இயற்றிய கீர்த்தனையை இந்த ராகத்தில் அமைத்திருப்பதிலிருந்து இந்த ராகத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.
இது
மிகவும் சாஸ்த்ரீயமான ராகமாகக் கருதப்பட்டாலும்,இந்த ராகத்தின் மூலத்தை ஆராய்ந்தால்,பல சுவாரசியமான தகவல்கள் புலப்படுகின்றன.
மரபார்ந்த ராகம் தொடர்பான நூலான 'சங்கீத ரத்னாகரா'வில் இந்த ராகம் பற்றிய குறிப்பு காணப்படவில்லை.இசை ஆய்வாளர்கள், இந்த ராகம் 16ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்கள்.'எருகல' என்னும் பழங்குடி மக்கள் 'காம்போஜி' ராகத்தை சில மாறுபாடுகளுடன் இசைத்ததனால்,இது 'எருகல காம்போஜி' என்ற பெயர் பெற்று, நாளடைவில் இது மருவி 'யதுகுல காம்போஜி'யாகியது என்று கருதப்படுகிறது.அதே சமயத்தில்,இந்த மண்டிலம், 'செவ்வழி' என்ற பெயரோடு தமிழிசையில் தொன்றுதொட்டு இருந்துவருவது இன்னொரு தகவல்.இசை ஆய்வாளர்களாலும்,வல்லுனர்களாலும் 'புனித நூலாக'க் கருதப்படும் 'சங்கீத சம்பிரதாய ப்ரதர்ஷணி'இந்த ராகத்தை 'எருகல காம்போஜி'என்றே குறிப்பிடுகிறது.
ஹரிகாம்போஜியிலிருந்து ஜனித்த இந்த ராகத்தின் ஆரோஹணத்தில் ஸ,ரி,ம,ப,த என்ற ஐந்து ஸ்வரங்களும் அவரோஹணத்தில் ஏழு ஸ்வரங்களும் உள்ளன.என்றாலும்,ஒரு அமைப்பில் இந்த ராகத்தைக் கட்டுப்படுத்த முடியாது.ப்ரயோகங்களைப் பொருத்து'ம' எனும் ஸ்வரம் மிக மிருதுவாகவும்,தீவிரமாகவும்,இரண்டுக்கும் இடைப்பட்டும் ஒலிக்கும் இந்த ராகத்தில்.
நகைச்சுவை அடிநீரோட்டமாக ஓடும் ஒரு பாடலை இந்த ராகத்தில் அமைத்து நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறார் இளையரா ஜா அவர்கள்.'வனஜா கிரிஜா'என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒத்தையில நின்னதென்ன' என்ற பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் நமது முகத்தில் புன்னகை தவழாமல் இருக்க வாய்ப்பில்லை.
மிகவும் லாவகமாக சித்ரா எனும் சிறந்த பாடகியால் பாடப்பட்ட இந்தப் பாடல், இசையமைப்பாளரின் ஆக்கத்திறனையும்,எதையும் புதுமையோடு அணுகும் அவரது முறையினையும் நமக்கு மறுபடியும் புலப்படுத்துகிறது.
குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் இந்தப் பாடல் முழுவதும் சாஸ்திரீயமான யதுகுல காம்போஜி அல்ல.குறிப்பாக சரணங்களில் இதன் நாட்டுப்புற வாசத்தை நம்மால் நன்கு உணர முடிகிறது.எருகுல மக்கள் காம்போஜியை உள்வாங்கி எருகுல காம்போஜியாக எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று நமக்கு புலப்படுத்தவும் செய்கிறது.
தன்னியலார்ந்த உணர்வுடன் தொடங்குகிறது பாடல்.பல்லவியின் முதல் இரண்டு வரிகள் தாள வாத்தியம் எதுவுமின்றி ஒலிக்கிறது.இரண்டு ஆவர்த்தனங்கள் முடிந்தபிறகு தலை காட்டுகின்றன தாளவாத்தியங்கள் ஒரு சுவாரசியமான சேர்மானத்துடன்.ஒரு நாட்டுப்புற தாள வாத்தியத்துடன் சேர்ந்து ஒலிக்கும் கிடார், 'த க' என்ற இரண்டு சொற்குறியீட்டுகளை மட்டும் ஒலிக்கிறது.மூன்றாவது சொற்குறியீடான 'தி' யை ஒலிக்காமல் விட்டு, நான்காவது குறியீட்டை ஒலித்து பிறகு, அடுத்த 'த க தி மி'யில் இரண்டாவதை மட்டும் ஒலிக்காமல் விடுகிறது.அதாவது எட்டு துடிப்புகள் உள்ள ஆதி தாளம் 16 மாத்திரைகளாக பிரிக்கப்பட்டு ஒலிக்கிறது.பல்லவியிலும் இடையிசையிலும் தொடர்ந்து வரும் இந்தப் படிவம், நாட்டுப்புற மெட்டில் அமைந்த பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.
பல்லவியின் இறுதியில் 4 திஸ்ரங்களுடன் 1 சதுஷ்ரம் ஒலித்து லய ராஜாவை நமக்கு மறுபடி காட்டுகிறது.
நாட்டுப்புற வாத்தியங்களுடன் மேற்கத்திய வாத்தியங்களும் சேர்ந்து முதலாவது இடையிசை நம்மை வசீகரிக்கிறது.ஒரு இசையமைப்பாளரின் திறமை அவர் தேர்ந்தெடுக்கும் வாத்தியங்களினால் மட்டுமன்றி,அவற்றை அவர் கையாளும் விதத்திலும் இருக்கிறது.இந்த இரண்டிலும் ராஜா எப்பொழுதுமே சிறந்தவர் என்பது நாம் அறிந்த ஒன்று.இர்ண்டு தொகுதிகளான ஊதுகுழல்களை நாம் கேட்க முடிகிறது. ஒரு தொகுதி,பற்றார்வத்துடன் அதே சமயத்தில் ஒரு கர்ம யோகியைப்போன்று ஒலிக்கும் அதே நேரத்தில் இன்னொரு தொகுதி செழுமையுடன் விரிவுபடுத்துகிறது.அடுத்த பகுதியில்,மூன்று விதமான வாத்தியங்கள் ஒலிக்கின்றன.ஒரு மேற்கத்திய மின்னணுக்கருவி,, ஒரு நாட்டுப்புற தந்தி வாத்தியம்,மற்றும் ஒரு வயோலா போன்ற வாத்தியம்.இதமான இனிமையுடனும், ஆழத்துடனும் முதலாவது வாத்தியம் இசைக்க,ஆவர்த்தனத்தின் இரண்டாவது பகுதியில்,நாட்டுப்புற வாத்தியம் இடைமறித்துரைக்க,குழைவான வயோலா ஒரு இனிமையான பாதையில் தனியாக செல்கிறது.
விழுத்தூய்மை மிகுந்த இசை!
நாட்டுப்புற இசையின் அழகிய சாயலோடு ஒளிமயமாக ஒலிக்கின்றன சரணத்தின் வரிகள்.முதல் இரன்டு வரிகள்,தார ஸ்தாயி ஸ்வரங்களுடன் கவர்ச்சி மிகுந்து காணப்படுகிறது.மூன்றாவது மற்றும் நான்காவது வரிகள்,இனிய சங்கதிகளுடன் நாட்டுப்புற இசை மற்றும் மரபாரன்த இசையின் சேர்க்கையாக ஒன்று கலந்து ஒலிக்கின்றன.அடுத்து வரும் வரிகள் இளைப்பாறலுடன் அமைதியாக ஒலிக்கின்றன.இரண்டாவது இடையிசையில்,பண்திறம் ஒரு நதியைப்போல செல்கிறது. மிகுந்த ஊக்கத்துடன் முதலில் முழங்குகிறது ஊதுகுழல்.மின்னணு வாத்திய கருவி,மனிதக்குரல் போன்று உள்ளுயிர்துடிப்புடன் பதிலளிக்கிறது.ஊதுகுழலும் ஏனைய நாட்டுப்புற வாத்தியக்கருவிகளும் பல வண்ணங்களைக் காட்ட நாம் அமைதி நிலைக்குச் செல்கிறோம்.
இறுதியில்,'வாய்த்துணைக்கு பேச்சு தரவா' என்னும் வரியில் 4 திஸ்ரங்கள் ஒலித்து ஒளிர்வினை அளிக்கிறது.
மிகுந்த பாங்குடனும்,கவலையற்ற மனத்துடனும்,அப்பாவித்தனத்துடனும் கூடிய ஒரு இசைப்பயணம்.
வாழ்க்கையும் இதுபோலத்தானே!
No comments:
Post a Comment