Tuesday, 17 September 2013

இளையராஜாவின் இசை-அமிழ்து!


அமிழ்து எவ்வளவு இனிதாக இருக்கும்?

அமிழ்து எவ்வளவு இனிதாக இருக்கக்கூடும்?

முதலாவது கேள்விக்கு நிஜமான அமிழ்தத்தை ஏதாவது ஒரு வகையில் அனுபவித்தவர்கள் மட்டுமே பதிலளிக்க முடியும். அமிழ்து என்ற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா? சுவைப்பதற்கு மிக இனிமையாக இருப்பதால் அதனை அமிழ்து என்கிறார்களா அல்லது அமரத்துவத்தை அளிக்கும் பண்பு அதற்கு நிஜமாக இருக்கிறதா? இதைப் பற்றி மேலும் பேசுவதற்கு முன் தமிழ்க் கவியான அருணகிரிநாதர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித்து இருக்கும் அமுது கண்டேன்.செயல் மாண்டு அடங்க

புத்திக் கமலத்து உருகிப் பெருகி புவனம் எற்றித்

தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே.

புலன்கள் ஐந்தும் செயலற்ற நிலையில் இருக்க, தாமரை போன்ற புத்தியின் மூலம் 6 முகங்களையும்,12 தோள்களையும் காணும் அப்பொழுதிலே, இனிய அமிழ்து அனைத்து உலகினையும் கடந்து கரை புரண்ட வெள்ளமாகப் பெருகிப் பாய்வதைக் காண்கிறேன்.அந்த பிரம்மாண்டத்திலே மூழ்கித் திளைக்கிறேன்,’

என்பது இதன் பொருள்.

ஷண்முகரின் பக்தர் அமிழ்தத்தை இவ்வாறு உணர்கிறார்.

பூடகமான மறைஞானம் அடங்கிய ஒரு பாடல் இது. குண்டலினி என்னும் சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் அடங்கிக் கிடப்பதாகவும், சரியானபடி தூண்டப்பட்டால்,அது மேலே எழும்பி ஆறு சக்கரங்களைத் தாண்டி இறுதியில் ஏழாவது சக்கரம் இருக்கும் சிரத்தில் தாமரை போல விரிந்து படர்ந்து பேரானந்தத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இவ்வாறு நிகழ்வதற்கு மனிதன் ‘தான்’ என்பதை முழுவதும் மறந்துவிட வேண்டும்.

இப்பொழுது இன்னொரு தமிழ்க் கவிஞராகிய திருப்பாணாழ்வார் கூறுவதைப் பார்ப்போம்:

‘மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்

சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அணையான்

அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்

உந்தி மேல் அது அன்றோ!அடியேன் உள்ளத்து இன்னுயிரே!’

‘திருமலையில்,ஒரு கிளையிலிருந்து மற்றொன்றிற்கு இடைவிடாமல் தாவும் குரங்குகள், பூக்களைப் பறிக்கும் பக்தர்கள். திருவரங்கமாகிய கோவிலிலே,செவ்வானம் போன்ற நிறத்தை உடைய ஆடை,அதன்மேல் பிரம்மனைப் படைத்த அழகு நிரம்பிய நாபிக்கமலம்,பாம்பின்மீது பள்ளி.எனது மனத்தில் குடியிருக்கும் இந்த இனிமை மிகுந்த உயிர் இதுவல்லவா!’.

இந்த இரண்டு செய்யுள்களும் வெவ்வேறு விதமாக தொனிப்பதுபோல் தோற்றமளித்தாலும், இரண்டிற்கும் நிறைய தொடர்பு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

குரங்கு என்பது நமது மனத்தின் உருவகம்.பூ நல்ல எண்ணங்களின் உருவகம்.பாம்பு குண்டலினி சக்தியின் குறியீடு.தாமரையோ பரந்து விரியும் புத்தியைக் குறிக்கிறது. ‘புத்திக் கமலம்.’

வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்து இரு கவிஞர்கள். வணங்கப்படும் தெய்வங்களின் பெயர்களும் வேறு.என்றாலும் இரண்டிற்கும் பொதுவானது எது? பரமானந்தம் அல்லது அமிர்தம்.

இப்பொழுது முதலில் கேட்ட இரண்டு கேள்விகளைப் பார்ப்போம்.முதலாவது கேள்விக்கான விடையை அருணகிரிநாதர், திருப்பாணாழ்வார் போன்றவர்களால் மட்டுமே அளிக்கமுடியும். இரண்டாவது கேள்விக்கு நம்மைப் போன்ற பாமரர்களும் பதில் அளிக்க இயலும்.புனைவாற்றல் பயணத்தை மேற்கொண்டு, இருக்கும் பொருள்களையும் இல்லாத பொருள்களையும் கற்பனை செய்து பார்ப்பது நமது இயல்பல்லவா?

என்றாலும் புனைவாற்றல் பயணம் அபாயகரமானது. இனிதாக இருந்தாலும், சில நேரங்களில் சடாலென்று கால்தடுக்கி விழச் செய்யும்.சில நேரங்களில் அதலபாதாளத்திற்குள் நம்மைத் தள்ளியும் விடும்.

அமிழ்தை கண்டுகொள்வதற்கு நாம் ஒரு முனிவராகவோ,சித்த புருஷராகவோ இருக்கவேண்டியதில்லை.சென்ற வருட சிறப்புப் பதிவில், இந்த உலகில் இறைமறுப்புக் கொள்கையுடையவர்களையும் தெய்வீகத்தன்மையை உணரச் செய்வது இசை ஒன்றுதான் என்று கூறியிருந்தேன்.மேலும், சில உயர்ந்த ஆத்மாக்கள் தமது சாகாவரம் பெற்ற பாடல்கள் மூலம், நம்மையெல்லாம் தெய்வீகத்தை உணரவைப்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.சித்தபுருஷ கவிஞர்கள் அமிழ்தைக் கண்டெடுத்து அனுபவித்தார்கள் என்றால், சிறந்த இசைக் கலைஞர்கள் அமிழ்தை நம்மையே கண்டுபிடிக்க வைத்து அனுபவிக்க வைக்கிறார்கள்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் திரு.இளையராஜா அவர்கள்.அவரது இசைப்படைப்புகள் இதுவரை உணராத பல விஷயங்களை நம்மை உணர வைக்கின்றன.இன்னவென்று சொல்லமுடியாத பல உணர்வுகளை தட்டியெழுப்பி நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.சித்த புருஷர்களின் படைப்புகள் போல் இவரது படைப்புகளும் மறைபொருள் நிரம்பியவை.நமக்குள்ளே மறைந்து கிடக்கும் சக்தியினை எழுப்பி, மேலே பயணிக்க வைத்து, தாமரையை மலரச்செய்து,அமிழ்தினைக் காணவைத்து அதனை உணரவைத்து நம்மை சுவைக்கவும் வைப்பவை. ஆக்கத்திறனுடன் இசைபற்றிய ஆழ்ந்த நுணுக்கமான அறிவும் சேர்ந்துகொள்வதால், ராகங்களை இவர் கையாளும் விதம் நம்மை வியக்கவும் அதிசயிக்கவும் வைக்கிறது.

ஷண்முகப்ரியா என்னும் ராகத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.56ஆவது மேளமாகிய இந்த ராகம் செந்நெறிவாதம் மிக்கதுடன், தனக்கே உரிய அழகும் நிரம்பியது. நம்மால் நினைத்துப் பார்க்கமுடியாத சில பரிமாணங்களை இந்த ராகத்தில் திரு,இளையராஜா அவர்கள் தொட்டிருக்கிறார். ‘சின்ன பாப்பாவை’’பொண்ணு பாக்க’ வைத்திருக்கிறார்.’அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க’ வைத்திருக்கிறார்.’வெங்காய சாம்பாரை’ உண்ண வைத்திருக்கிறார். ‘காதலைக் கூட கசக்க வைத்திருக்கிறார்.’வேட்டு வெடிக்க’ வைத்திருக்கிறார். இந்த ராகத்தின் சாயலோ, தன்மையோ சிறிதும் கெடாத வகையில் நகைச்சுவை நிரம்பிய பாடல்களை இவர் கொடுத்திருக்கிறார் என்றால், ‘தம் தனனம் தன’, ‘தகிட ததிமி’, ‘சொல்லாயோ வாய் திறந்து’ போன்ற செந்நெறிவாதம் வீசும் பாடல்களையும் அளித்திருக்கிறார்.இது ஒரு இசைக்கலைஞனின் அறிவை மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையையும் பல்திசை இயக்கத்திறத்தையும் காட்டுகிறது.

இன்று நாம் காண இருக்கும் பாடலாகிய ‘நெஞ்சம் இனிக்கிறது..’(தென்பாண்டிச் சிங்கம்), இனிமையாக ஒத்திசைக்கிறது, கலைநுணுக்கத்துடன் அழகைப் பொழிகிறது.

செழுமையான ஒரு ஆராவாரத்துடன் தொடங்குகிறது பாடல்.சதுஷ்ரத்தில் ஒன்று கோர்க்கப்பட்ட அசைகளை மிருதங்கம் முழங்க, இரண்டு தாள சுழற்சியில் நுண்ணிய படிமங்கள் அமைந்த ஒரு குட்டி தனி ஆவர்த்தனத்தையே நாம் கேட்கிறோம்.மிருதுவான இழைநயத்துடன் தொடரும் வீணை, ‘ப த நி’, ‘த நி ஸ்’, ‘ஸ் நி த ப ம’ என்னும் பிரயோகங்களால், ஷண்முகப்ரியாவை சிறு ஓவியமாக வரைந்து காட்டுகிறது.

துலக்கத்துடன் தொடங்குகிறது பல்லவி.’நெஞ்சம்’ என்னும் சொல்லிற்கே நான்குவிதமான சங்கதிகள் பாடப்படுகிறது. இதனுடன் வரும், இடையில் வரும் அகாரம், இடையிடையே ஸ்வரங்களை சிதறிப் பரப்பும் வீணை எல்லாம் சேர்ந்து முதல்நிலையான பாரம்பரிய இசையனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

இந்தப்பாடல், எட்டு துடிப்புகள் கொண்ட ஆதி தாளத்தில் அமைந்துள்ளது.என்றாலும்,பாடகிகளின் குரல் ஒலிக்கும் பல்லவியின் இறுதி வரியில் தாளத்தின் அரை சுழற்சிவரை மட்டுமே வருகிறது.மீதமுள்ள அரை சுழற்சியை வீணை இனிமையுடன் நிரப்ப அனாயாசமாக முதல் இடையிசைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நூதனமான மனவசியம்!

வீணையுடன் ஒன்று சேரும் குழல் உற்சாகத்தை அடக்கமுடியாமல் அதிவிரைவாகச் செல்லும் குமிழிகளைப் போல பயணித்து, ராகத்தின் நிறங்களைத் திறன்படக் காட்டுகின்றது.கடைசி இரண்டு ஆவர்த்தனங்களில், ஸ்வரங்கள் இரண்டு, மூன்று, நான்கு என ஜோடி சேர்ந்து லயராகராஜாவின் முழு வேகத்தை நமக்கெல்லாம் இன்னொரு முறை காட்டுகிறது.

அழகில் தோய்ந்திருக்கிறது முதலாவது சரணம்.முதல் வரி, இரண்டு மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.’அஞ்சுவர்’ என்னும் சொல் இரண்டாம் முறையாகப் பாடப்படும்பொழுது, தார ஸ்தாயி என கூறப்படும் மேல் ஸ்தாயி ஸ்வரங்களைத் தொடுகிறது. தொடரும் வரியிலும் ‘வாழ்த்தது கேட்டு’ எனும் சொல் சிறப்பு சங்கதியோடு மிளிர்கிறது.

சரணத்தின் இறுதியில் வரும் பல்லவி முன்புபோலவே அரை ஆவர்த்தனத்தில் முடிய, வீணை மறுபடி மென்மையுடன் வருகிறது. நுழைபுலம் வாய்ந்த குழல் சேர்ந்து கொள்ள, ஒரு சிறு கேள்வி-பதில் தொடர் அங்கு நிகழ்கிறது. வீணை-குழல் ஸ்வரக்கோர்வைகளை இசைக்க, மின்னல் வேகத்தில் தாளவாத்தியக் கருவிகள் அதற்குப் பதில் கூறுகின்றன.இரண்டு ஆவர்த்தனங்களுக்குப் பிறகு தாளவாத்தியமும், பண்சார்ந்த இசைக்கருவிகளும் ஒன்று சேர்ந்து ஒன்றுக்குள் ஒன்றாக ஐக்கியமாகின்றன.

தொடர்ந்து தனியாக ஒலிக்கும் வீணை, ஒரு அழகிய நதிபோல் சென்று, ராகத்தின் பல பரிமாணங்களைத் தொடுகிறது. ஆறு முகங்களும், பன்னிரு தோள்களும் அழகுடன் மின்னுவதை நாம் காண்கிறோம்.

இரண்டாவது சரணம், முதல் சரணத்திலிருந்து மாறுபட்டு, இசையமைப்பாளரின் பல்திசையியக்கத்திறத்தை நமக்கு மறுபடியும் காட்டுகிறது.மூன்று முறை ஒலிக்கும் செறிவான முதல் வரியை மேலும் கவர்ச்சியாக்குகிறது இனிய வீணை. ‘உயிர் ஒன்றுதான்’ என்று வரும் சொற்றொடர் ஒன்றே ராகத்தின் சாரத்தைக் கொட்டுகிறது. ‘அதை நினைத்தாலே’ என்று வரும் அடுத்த வரியில் ‘லயராஜா’ மீண்டும் ஆட்சி செய்கிறார்.

சதுஷ்ரத்தை வாசித்து வரும் தாளவாத்தியம், மூன்று துடிப்புகள் அடங்கிய திஸ்ரத்திற்கு மாறுகிறது.நான்கு திஸ்ரத்தைத் தொடர்ந்து, 6 மாத்திரைகளாக,  வகுத்துக்கொள்கிறது.

1 நான்கு (த க தி மி), 4 மூன்று( த கி ட), 4 ஆறு( தா த ரி கி ட), 4 மூன்று (த கி ட), 8 ஆறு (தா த ரி கி ட), 4 மூன்று (த கி ட) என்று மாறி மாறி பொழிந்து நமக்கு முழுமையான அனுபவத்தைத் தருகிறது.

அமிழ்தில் நாம் மூழ்குகிறோம்.
 

No comments: