தெய்வீக நடனத்தை, இந்த அண்டத்தின் நாட்டியத்தைத் தன் கண்முன்னால் திருவாலங்காடு எனும் ஊரில் கண்ட காரைக்கால் அம்மையார் என்ற தமிழ்ப் புலவர்,இவ்வாறு பாடுகிறார்:
துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
உழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிச்சம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரவினோடு ஆடும் எங்கள்
அப்பன் இடம் திருவாலங்காடே.
இந்தப்பாடலில் பல சிறப்புகள் இருக்கின்றன.
ஸ ரி க ம ப த நி என்ற ஏழு சுவரங்களின் தமிழிசை குறிப்பீடுகளாகிய துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம் உழை இளி ஓசை இடம்பெறுவது முதல் சிறப்பு.
பண்டைய தமிழகத்தின் இசைக்கருவிகளாகிய சச்சரி கொக்கரை தக்கை
தகுணிச்சம் துந்துபி தாளம் மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் டமருகம் குடமுழா மொந்தை இடம்பெறுவது இரண்டாவது சிறப்பு.
இதில் தாளஇசைக்கருவிகளும் பாடல் இசைக்கருவிகளும் ஒன்றொடொன்று பின்னிப்பிணையும்படி அமைந்திருப்பது மூன்றாவது சிறப்பு.
விரவினொடு என்றால் மிகச்சிறப்போடு என்று பொருள்.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த இந்தப் பாடல் நமக்கு உணர்த்துவதுதான் என்ன?
ஆடலும், பாடலும் இறைக்கு நிகரானது என்பது ஒன்று.நடனமும், இசையும் ஒன்றோடொன்று தொடர்பு உடையது என்பது இன்னொன்று.
சில மாதங்களுக்குமுன், எவ்வாறு ஒவ்வொரு நடனக்கலைஞர் உள்ளேயும் இசை இழையூடுகிறதோ, அதேபோன்று ஒவ்வொரு இசைக்கலைஞன் உள்ளேயும் நடனம் அடிநாதமாக இருக்கிறது என்று சிறிது விளக்கமாக எழுதியிருந்தேன்.
இசை எப்படி நடனத்தைச் சார்ந்து இருக்க முடியும் என்று சிலர் வினவக்கூடும்.
ஒரு இசைக்கலைஞன் தனக்குள் தானாகவே ஆடிக்கொண்டிருக்கும் நடனத்திற்குப் பாடுகிறான்.ஒரு நடனக் கலைஞன், தனக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் இசையில் நடனமாடுகின்றான்.
எனவே, இசைக்கும் நடனத்திற்கும் சேர்ந்து ஒன்றாக வாழும் தன்மை இயற்கையாகவே அமைந்து இருக்கிறது.இரண்டிற்கும் உள்ள தொடர்பு புனிதமானது.
கடந்த மூன்று மாதங்களாக இந்திய பாரம்பரிய நடனங்களாகிய பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,மோஹினியாட்டம்,கதக்,ஒடிசி,மணிபுரி இவைகளைப் பற்றிப் பார்த்தோம்.
நிருத்தியம்,நிருத்தம்,நாட்டியம், மற்றும் அடவுகள்,ஹஸ்தங்கள் இவைகளைப் பற்றி சிறிது அறிந்து கொண்டோம்.ஒவ்வொரு பதிவிலும் நடனம் சம்பந்தப்பட்ட இசைஞானியின் பாடலை விவரமாகப் பார்த்தோம்.
ஜூன் 2 தொடங்கிய இந்தத் தொடர்,இன்றுடன் முடிவடைகிறது.
இன்றும் அவரின் மிகச் சிறந்த ஒரு நடனப்பாடலைக் காண்போம்.
அவர் ராக ராஜா மட்டும் அல்ல.லய ராஜா மட்டும் அல்ல.நடன ராஜாவும்தான் என்பது இந்த சில பாடல்கள் மூலம் நன்றாகவே புலன் ஆகி இருக்கும்.
இன்றைய ஆக்க அமைவும் தனித்தன்மை வாய்ந்த தன்னிகரில்லா ஒரு பாடல்.
அது 'விடியும் வரை காத்திரு' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அபிநயம் காட்டு..' என்ற பாடல்.
இந்தப் பாடல் சிம்மேந்திர மத்தியமம் எனும் ராகத்தில் அமைந்தது.
57வது மேளகர்த்தாவாகிய சிம்மேந்திர மத்தியமத்தில் உள்ள சுவரங்கள் ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், பிரதி மத்தியமம், பஞ்சமம், சுத்த தைவதம், மற்றும் காகலி நிஷாதம்.கீரவாணி எனும் கம்பீரமான ராகத்தின் பிரதி மத்தியம ராகமாகிய இந்த ராகம் தனக்கேயுறிய சில பிரயோகங்களால் அழகுடனும், மெருகுடனும், உள்ளத்தை உருக வைக்கும். மாயாமாளவகொளள மற்றும் ரசிகப்ரியா இந்த ராகத்தின் கிரஹபேதக் குழுவில் இருக்கின்றன.
இன்றைய பாடலில் இசையும், நடனமும் மோதுகின்றன.அதாவது இரண்டு சகோதரிகள்.ஒருவர் இசைக்கலைஞர்;மற்றவர் நடனக்கலைஞர்.இருவருக்கும் நிகழ்கிறது போட்டி இசையா,நடனமா?
பாடலை இப்பொழுது கவனிப்போம்.
முதலில் வரும் இனிமையான ஆலாபனையிலேயே, ராகத்தின் பிழிசாறினை அனுபவிக்கிறோம்.
கைதேர்ந்த ஒவியனின் தூரிகையில் ஒரே வருடலில் மிக அழகிய நிலப்பகுதியில் மின்னும் மணிகளாக ஒலிக்கிறது இந்த ஆலாபனை.
ஜானகியின் அழுத்தமான ஆலாபனையும், மிருதங்கத்தின் ஒலியும் பல இசை விந்தைகள் நிகழ இருப்பதை நமக்கு முன்கூட்டியே அறிவிக்கின்றன.
இனிமையான பிரயோகங்கள் இழைநுணுக்கமாக அமைந்திருக்கிறது பல்லவி.இசைச்சுவை நிரம்பிய வீணையும்,அதிரும் மிருதங்கமும் மன அமைவை இன்னும் உயர்த்துகிறது.
படிகத்தைப் போன்ற தெளிவான ஜலதரங்கமும், பண்திறம் வாய்ந்த தபலா தரங்கும் லாகவத்துடன் நடனம் ஆடும்பொழுது அனுபல்லவி தொடங்குகிறது.
தொடர்ந்து இரண்டு ஆவர்த்தனத்திற்கு நிலைக்கும் சங்கதி தொன்மையான இன்னிசையில் தோய்ந்து நம்மை மெய்மறக்கச் செய்கிறது.
துள்ளும் மானாகவும், மனதை அள்ளும் மயிலாகவும், கொள்ளை கொள்ளும் மீனாகவும் ராகம் நடனம் ஆடுகிறது.
பாட்டிடைக் கருவி இசைப்பில், இன்னிசை பொங்கிப் பெருகும் வீணை, ராகத்தின் பூர்வாங்க சுவரங்களாகிய ஸ ரி க ம மட்டும் வீணை மிக அழகாக இசைக்க,இதைப்பாராட்டும் வகையாக சித்திரத்தைப் போன்ற வயலின்கள்,மனங்களைத் திருடும் தபலா தரங், மற்றும் இணையே இல்லாத ஜலதரங்கம் புன்னகை புரிகின்றன.இந்த எல்லா இசைக்கருவிகளும் ஒன்று சேர்ந்து ஒருமுகமாக ராகத்தின் ஆரோகணத்தை இப்பொழுது வாசிக்கின்றன.
சரணத்தின் முதல் வரி அழகுணர்ச்சியுடன் நேர்த்தியாக அமைக்கப் பெற்றிருக்கிறது.ஆழ்ந்தாராய்வுடன் அமைந்த இரண்டாவது வரியில் எண்மங்கள் ஊடு கடக்க,மூன்றாவது வரியிலும் அதனைத் தொடர்ந்து வரும் சங்கதியிலும்,ராகத்தின் மென்மையான கூறுகளை காணுகிறோம்.முதல் சரணத்தின் இறுதி வரி, அன்னத்தின் நடைபோன்று வசீகரமாக அமைந்திருக்கிறது.
முதல் வரியின் இறுதியில் எதிர் ஒலிப்பாக வரும் வீணையும், இரண்டாம் வரியின் இறுதியில் பட்டெறிவாக வரும் குழலோசையும் ஏற்கெனவே அழகாக இருக்கும் சரணத்தை மேலும் அலங்கரிக்கின்றன.
இரண்டாவது பாட்டிடை இசைக்கருவி சேர்ப்பில், முனைப்பான வயலின்கள்,கம்பீரமான வீணை,ராகத்தினுள்ளே தீவிரமாகச் செல்லும் ஜலதரங்கம் முதலியவை பாட்டை இன்னும் பளீரென்று ஒளியுடன் மின்னச் செய்கின்றன.
இரண்டாவது சரணம் கூர் உணர்வுடன் தீட்டப்பட்டிருக்கிறது.
வரிசை மாற்றமாக திஸ்ரமும் சதுச்ரமும் மிருதங்கத்தில் ஒலிக்கின்றன.தொடர்ந்து வரும் வரிகளில், திறன்,சக்தி,இனிமை இவை மூன்றும் ஒன்று கலந்து நம்மை ஒரு தனி உலகிற்கு அழைத்துச் செல்கிறது.இசை,நடனம் இவற்றின் மேன்மையினை உணர்த்தும் பெருவளம் நிரம்பிய கற்பனைத்தொடர்களை இப்பொழுது காண்கிறோம்.
இசை துள்ளுகிறது.குதிக்கிறது.பாய்கிறது.ந்டனம் ஆடுகிறது.
ராகத்தின் ஒளியுடன் நடனம் பாடுகிறது.
கட்டுக்கோப்பான ஜதிகளை பூவளையங்களாக சுவரங்கள் அலங்கரிக்கின்றன.
இது நீட்சி மிகுந்த, வட்டமான இசை வடிவயியல்.
அபிநயம் பார்த்து நடை போடும் இசை!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
As usual, a nice post. More importantly, to me, a lovely song that I haven't heard till now. What energy Raja generates. Whenever he takes up a dance song, Raja ensures the energy levels are kept high throughout. The singers do an excellent job as well. Kudos to you for selecting and highlighting this rare. In the process I also get to read some nice poetry. What more can you ask :)
நன்றி சுரேஷ் அவர்களே.. :)
இசை துள்ளுகிறது.குதிக்கிறது.பாய்கிறது.ந்டனம் ஆடுகிறது.
every raaja song fits to the above wordings of you..
and nice of you to dig the gems and making known to us..
Raaja and raj .. always rock
நன்றி அகிலா!
Post a Comment