யோசித்துப் பார்த்தால்,மனித வாழ்க்கையே ஒருவிதமான அதிர்வுதான்.
இந்த அதிர்வுகளை பெரும்பாலும் நமது ஆழ் மனதே உணர்ந்து கொள்ளுகிறது.எனினும்,சில வேளைகளில் மிகவும் சக்தி மிக்க அதிர்வுகள் நம்மை அமைதியான,பேரானந்தமயமான ஒரு உலகிற்கு அழைத்துச்செல்லுவதை உணர்கிறோம்.
அப்பொழுது ஒரு சீறிய சக்தி பாய்ந்து,நம்முள் புகுந்து ஒவ்வொரு அணுவிலும் புகுந்து நம்மை ஆட்கொள்ளும்.
இம்மாதிரி உணர்வு சில மனிதர்களைப் பார்க்கும்பொழுது ஏற்படலாம்.சில புத்தகங்களைப் படிக்கும்பொழுது ஏற்படலாம்.தியானம் செய்யும்பொழுது உண்டாகலாம்.இசை கேட்கும்பொழுது எழும்பலாம்.
இவ்வளவு சக்திவாய்ந்த அதிர்வுகளை நமக்குக் கொடுப்பது எது?
அந்தப் பொருளா?அல்லது நமது செயலா?
இந்த தியாகராஜ கீர்த்தனையைப் பார்ப்போம்:
‘சுஜன ஜீவனா..ராமா சுகுண பூஷனா..புஜக பூஷணார்ச்சித புதஜனவனத்..’
பொருள் புரியாமல் இருந்தால் கூட ஒவ்வொரு வார்த்தையும் அதிர்வுடன் இருப்பதை உணர்கிறோம்.
இந்த வரிகளின் பொருள்தான் என்ன?
'நல்வழிப்பாதையில் செல்லும் மக்களின் ஆதாரம் நீயே..நற்குணங்களால் என்னும் விலைமதிப்பில்லாத ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனே ராமா!'
இதன் ஒவ்வொரு சொல்லும் சரியானபடி உச்சரிக்கப்பட்டாலோ, பாடப்பட்டாலோ நாம் அதிர்வுகளை உணர்கிறோம்.
பாடல் இயற்றப்பட்ட முறையே இதன் காரணம்.
இப்பொழுது இந்தக் கவிதையை சற்று கவனிப்போம்:
வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்பதன் முன்னம்துறை படிந்து
முள்லுமில்லாச் சுள்ளி யெரிமடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா!
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணனென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பது
ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே.
இது நாச்சியார் திருமொழியிலிருந்து எடுக்கப்பட்டது.
மொத்தம் 143 செய்யுள்களைக் கொண்ட நாச்சியார் திருமொழி,கடவுளின் மணப்பெண்ணாகத் தன்னை உருவகப்படுத்திப் பாடல்களைப் புனைந்த ஆண்டாளால் இயற்றப்பட்டது.
மேற்கூறிய பாடலில், அவர் கண்ணனே தனது கணவானாக வரவேண்டும் என்று காதலுக்குத் தேவனாகிய மன்மதனிடம் வேண்டுகின்றார்.
இந்த முழுப்பாடலுமே சக்தி மிகுந்ததாக இருந்தாலும்,இதில் வரும் இரண்டு வார்த்தைப் ப்ரயோகங்கள் மிகவும் விசேஷமானவை;அதிர்வு மிக்கவை.
'கள்ளவிழ் பூங்கணைத் தொடுத்து', 'புள்ளினை வாய் பிளந்தானை' எனும் சொற்களே அவை.
கள், புள் மோனைச் சொற்கள் என்ற மேலோட்டமான ஒரு காரணத்தைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு.
கண்ணனுக்குப் பல பெயர்கள் இருந்தாலும்,பறவையின் வடிவில் வந்த அசுரனைக் கொன்றவன் என்று எதற்காக இங்கே குறிப்பிட வேண்டும்?
கொக்கு என்பது ஒரு சாதுவான பறவை.அசுரன் கொக்கைப் போல வந்தான்.
அதாவது, கொடிய குணமுள்ள அசுரன் சாந்த குணமுள்ள பறவையினைப் போல உருவம் கொண்டான்.
அதே போல, மன்மதனின் ஆயுதம் அம்பு.மலர் அம்பு.கொடிய வேகத்தையுடைய அம்பு மென்மையான மலரோடு சேர்ந்திருக்கிறது.
நமது மனித மன்த்திலும் நல்லவையும், தீயவையும் கலந்து இருக்கின்றன.இறைவனிடம் அடி பணிந்து நம்மை நாமே அர்ப்பணித்தால்,நல்லவை மட்டுமே நம்மிடம் தங்கும்.தீயவை தீயினில் தூசாகும் என்பதே இதன் பொருள்.
தியாகராஜர், ஆண்டாள்.
இவர்கள் இயற்றியவை, எழுதியவை,நமக்கு அதிர்வுகளைத் தருவதன் காரணம் நம்மைப் பலவாறாக சிந்திக்க வைக்கும் பொருள் நிறைந்த சிறப்புச் சொற்கள்.
இந்த சக்தி எந்தவிதத் தூண்டுதலுமின்றி இயற்கையாகவே இவர்களுக்கு இருந்தது இன்னுமொரு சிறப்பு.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தவர்களிடம்தான் இதுபோன்ற சக்தி இருந்தது என்பதில்லை.
இன்றும் நம்மிடையே வாழும் சிலருக்கு அந்த சக்தி இருக்கிறது.
தமிழ் நாட்டில் பிறந்து, இந்தியாவின் தலைசிறந்த திரைஇசையமைப்பாளர்களுள் ஒருவராக இருக்கும் இந்த மனிதரிடமும் மாயாஜால சக்தி உண்டு.
திரைஇசைப்பாடல்களுக்கு ஒரு புதுவித அடையாளத்தை இவர் காட்டினார்.
இவரது இசை தேனாக வந்து நமது செவிகளில் பாயும், இவர் தேர்ந்தெடுக்கும் ராகங்களாலும், அதனால் அமைக்கும் மெட்டுக்களாலும்.
இவர் இசை எங்கும் எதிரொலிக்கும், இவரின் தாள சந்தத்தால்.
இவர் இசை எங்கும் அதிரும், ஒவ்வொரு வாத்தியக்கருவியின் இனிமையை அறிந்து அதற்கேற்றபடி, வாத்தியக்குழுவை இவர் வடிவமைப்பதால்.
இந்த இனிமையான நாளில் அவர் இசையில் வந்த ஒரு அருங்கனியைப் பார்ப்போம்.
அது 'மார்கழி மாதம் முன்பனி வேளையிலே' என்ற பஞ்சமி என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.
இந்தப் பாடல் கமாஸ் என்னும் ராகத்தில் அமைந்தது.
ஹரிகாம்போஜி என்னும் 28ஆவது மேளகர்த்தாவில் பிறந்தது கமாஸ்.
இதன் ஆரோஹணம்:ஸ ம1 க3 ம1 ப த2 நி2 ஸா
அவரோஹணம்:ஸா நி2 த2 ப ம1 க3 ரி2 ஸ.
இன்னொரு நிஷாத ஸ்வரமாகிய காகலி நிஷாதம் இதில் சில வேளைகளில் சிலர் கலப்பதும் உண்டு.அமைப்பில் இதற்கும், இதன் தாய் ராகமாகிய ஹரிகாம்போஜிக்கும் இதற்கும் மிகச் சிறிய அளவு வித்தியாசமே இருந்தாலும்,கமாஸ் ராகத்திற்கென்று ஒரு அழகு உண்டு.தனித்துவம் உண்டு.
மனத்திற்கு அமைதி தரும் அதே நேரத்தில் நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் சக்தியும் கமாஸிற்கு உண்டு.
பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் எளிதாகத் தோன்றும் கமாஸ் தன்னுள்ளே பல சூட்சுமங்களை அடக்கி இருக்கிறது.
இதன் சிறப்புப் பிரயோகங்கள் கமநீதநிபதனிஸா,கமபதநி,தபமகரி போன்றவை.
தமிழிசையில் இந்தப் பண்ணின் பெயர் பஞ்சசாமரம்.
இப்பொழுது பாடலைக் கவனிப்போம்.
இசைச் சந்தத்துடன் ஒலிக்கும் மிருதங்கமும், சலங்கை ஓசையும் நம்மை ஆரம்பத்திலேயே எங்கோ அழைத்துச் செல்லுகிறது.நாம் அதிர்வுகளை உணர்கிறோம்.வேகத்துடன் ஒலிக்கும் அந்த ஓசை நம்முள்ளே இருக்கும் இனிமையான உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது.
ஒரு ஸ்வரமும் ஒலிக்காமலேயே நாம் கமாஸை சுவாசிக்கிறோம்.
இப்பொழுது நமக்கு ஒரு இனிமையான வியப்பு.ஹிந்துஸ்தானி ராகங்களையே பெரும்பாலும் இசைக்கும் சிதார், கர்னாடக இசைப் பாணியில் கமாஸின் சாராம்சத்தை வாசிக்கிறது.இப்பொழுது நேர்த்தியாக நுழைகிறது வயலின்.
காதிற்கு இனிமையான ஜலதரங்கம், மென்மையாக வயலினைப் பின் தொடர்கிறது.சிதார் வயலினை வரவேற்க,அதற்கு நன்றி கலந்த வணக்கத்தைக் கூறுகிறது வயலின்.
இதனைக் கவனித்த மேற்கத்திய வாத்தியம் நுண்ணியமாக
புகுந்து முகமன் செய்கிறது.
அது மார்கழிமாதக் காலை.அமைதியான, ஆரோக்கியமான சூழ்நிலை.ஜானகியின் இனிய குரல் ஒலிக்கிறது.கமாஸ் கவிதை நயத்துடன் மார்கழிமாதத்தை அலங்கரிக்கிறது.
முதலாவது வாத்திய இடைச்செருகலில், சிதார் இரண்டு பூக்கணைகளைத் தொடுக்கிறது.அதை வாங்கிய மகிழ்ச்சியில் திளைக்கிறது மிருதங்கம்.கணைகளைத் தொடுத்த கர்வத்துடன் ராஜ நடை போடுகிறது சிதார்.
அழகிய நகை அலங்காரத்தைப் போல் வசீகரிக்கும் ஜலதரங்கமும், உள் அழகைக் காட்டும் புல்லாங்குழலும் இப்பொழுது சுவாரசியமான விளையாட்டில் ஈடுபடுகின்றன.
பொறுமையாக உள்ளே வரும் வயலின்,பல நிறங்களை நமக்குக் காட்டுகிறது.இறுதியில், பளீரென்ற வெளிச்சம் நமக்குப் புலப்படுகிறது.
அழகாகச் செதுக்கப்பட்ட சரணம் இப்பொழுது தொடர்கிறது.
'மலையின் முகட்டில் ஒலித்த' என்று தொடங்கும் வரியும் அதனைத் தொடரும் இனிமையான சங்கதியும்,தூய்மை என்னும் மொழியினால் நெய்யப்பட்டிருக்கிறது.மிருதங்கத்தில் தாள நடை அழகாக மாறுவதை கவனிக்கிறோம்.
வளமான கற்பனை என்பது இதுதானோ!
'மலர்ந்த தாமரையின்' என்னும் இரண்டாவது வரி அழகுணர்ச்சியின் வெளிப்பாடு.
டி.வி.கோபாலகிருஷ்ணனின் குரல், நம்மை ராகத்தின் மையத்திற்கு அழைத்துச் செல்லுகிறது.
தொடர்ந்து வரும் வரிகள் பளிச்சிடும் நூல்களால் பின்னப்பட்டு ஜொலிக்கின்றன.
அடுத்துவரும் ஸ்வரக்கோர்வையில் ராகத்தின் உயர்ந்த தன்மை நமக்குப் புலனாகிறது.
பலப்பல வண்ணங்கள் நேர்த்தியாக, அழகாக , ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன.நுணுக்கமான கோர்வைகள் துல்லியமாக ஒலிக்கின்றன.
ராகமும் தாளமும் ஒன்றோடு ஒன்று கலக்கின்றன.
அது ஒரு செறிவூட்டும் இசை அனுபவம்.
இந்த அனுபவத்தில் கிளர்ந்து எழுந்த குழல்,மனத்தைக் கொள்ளைகொள்ளும் படிமங்களை நமக்குக் காட்டுகிறது.
இந்தப் பாடல் ஒளிவீசும் கோபுரம்.
தானாகவே எழும்பும் இசையுணர்வுகளை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
இயக்கமற்ற நிலை..ஆழமான இசையின் உட்பொருள்..
அமைதியின் ஊற்று..
அதில் வரும் அதிர்வுகள்..
மார்கழிமாதம் முன்பனிக்காலையின் புத்துணர்வு!
|
2 comments:
"இவ்வளவு சக்திவாய்ந்த அதிர்வுகளை நமக்குக் கொடுப்பது எது?
அந்தப் பொருளா?அல்லது நமது செயலா?"
A thought that requires serious reflection. Vibes at times may be brought about by a concept akin to resonance, when the source and receiving end of the communique are on the same wavelength. This brings forth a feeling of camaraderie/fellowship.
But there are times when a verbal or non-verbal communication from a higher source creates a vibe of elevation, letting us into a secret we have never before known..an original thought or truth that opens our eyes.
We see a bit of "Divine" in these powerful souls, though they may not necessarily be Godmen.
Yes Sangeetha..
As I have mentioned,all of us undergo this experience though the frequency and the intensity might vary depending on the individual and his/her lifestyle.
Post a Comment