Thursday, 3 June 2021

இளையராஜா எனும் ஆசான்

 

சில விஷயங்கள் எளிதாகப் புரிந்து விடும். சில விஷயங்கள் புரிவதற்கு சிறிது  நேரம் எடுக்கும். சில விஷயங்கள் புரிதல் இல்லாமலே போய் விடும். புரிதல் இல்லை என நாம் உணர்வதற்கே பல காலம் பிடிக்கும்.

எனினும் புரிதலுக்கு முதல் தேவை உணர்தல். ஒரு விஷயத்தை உணர்ந்தால் மட்டுமே அதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த உணர்தல் நிகழ்வது எவ்வாறு?  நாமே உணர்வது சாத்தியமா? அல்லது ஏதாவது ஒன்று நிகழ்ந்து அதுவே ஒரு தூண்டுகோலாக அமைந்து, நம்மை உணரவைத்து புரிய வைக்குமா?

இந்தக் கவிதையைப் பார்ப்போம்:

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்

பண்டரங்க வேடத்தான் பாட்டு  வா பழனத்தான்

வண்டு உலாம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வர்ணம்

கண்ட நாள் தானறிவான் குறிக்கொள்ளாது ஒழிவானோ.

நாவுக்கு அரசர் என்று அழைக்கப்படும் அப்பர் எழுதிய தேவாரப் பாடல் இது.

இதன் பொருள்- நீர் முள்ளிகளே! கடல் முள்ளிகளே! தாழைகளே! நெய்தல்களே! பண்டரங்கத் கூத்திற்கு உரிய வேடத்தானாய். பாட்டுக்கள் நீங்காத திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான், வண்டுகள் உலாவுகின்ற குளத்தில்  நான் மூழ்க என்னைக் காப்பதற்காகத தானும் குளத்தில் குதித்து என்னைக் கரைசேர்த்த பொழுது  என் தளிர்போன்ற வண்ணத்தை அனுபவித்த அந்நாள், என் நினைவை விட்டு அகலாது. அவன் நினைவை விட்டும் அகலாது.ஆகையால், என்னைத்  தன் அடியவளாக ஏற்றுக்கொள்ளாது அவன் விட்டு விடுவானோ?

அகத்துறையைச் சார்ந்த இந்த பாடலில், நாவுக்கரசர் தம்மை ஒரு நாயகியாக உருவகப்படுத்திக் கொள்கிறார். மேலே குறிப்பிட்டிருப்பது மேலோட்டமான பொருள். இதன் ஆழ்ந்த பொருளைக் கவனித்தால், இந்த நாயகி பரம்பொருளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்திருக்கிறாள்  என்பதும், ஒரு நாள் அந்த உணர்வு வந்தது என்றும் அன்று முதல் அவனை மறக்காமல் இருப்பது மட்டுமன்றி அவன் கண்டிப்பாக தம்மைக் காப்பான் ஆகையால் அவனைப் பற்றிய நினைவு தம்மை விட்டு என்றும் அகலாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் புலனாகும்.

இதில் இன்னும் கூர்ந்து கவனிக்க வேண்டிய சொல்- பண்டரங்கம் எனும் சொல். பாண்டரங்கன் என்பதே மருவி பண்டரங்கன் என ஆனது. பாண்டு என்றால் வெளுப்பு. அதாவது வெண்மை நிறமுள்ள விபூதி. சிவன் முப்புரத்தைத் தனது நகைப்பினால் எரித்த பிறகு, அந்த சாம்பலின் மேல் அதையே அரங்கமாகக் கொண்டு தாண்டவம் ஆடியதால், பாண்டரங்கன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பாடலின் கருத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? முப்புரத்தை எரித்தது போல், அறியாமையையும் அழிப்பவராதலால், பண்டரங்கன் என்று இந்த இடத்தில் அழைக்கிறார் நாவுக்கு அரசர். இந்த சொல் ஒன்றே இந்தப் பாடலின் சாராம்சத்தை நமக்குத் தருகிறது.

புரிதலுக்குத் தேவை உணர்தல். உணர்தலுக்குத் தேவை அனுபவம். இலக்கியம் புரியாததையும் புரிய வைக்கும் .தெரியாததையும் தெரிய வைக்கும், தெளிய வைக்கும்.

இசையும் அது போலத்தான். மாமேதைகளின் இசையினைக் கேட்கக் கேட்க, உணராதவற்றையும் உணர முடியும். அதனால் தான், இளையராஜா என்னும் மாமேதையின் இசையைத் திரும்பத் திரும்பக் கேட்கிறோம். இந்த நிகழ்வே ஒரு தேடல் போலத்தான்.

இந்த இனிய நன்னாளிலே, திரும்பத் திரும்ப நம்மைத் திரும்ப வைக்கும் ஒரு பாடலைக் கேட்போம்.

1988ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம் ஸ்வர்ணகமலம், பல உணர்வுகளை வெளிக்கொணர்ந்த ஒரு படம். கே.விஸ்வனாத் அவர்களின் இயக்கத்தில் வந்த இந்தத் திரைப்படத்தில்,  நாயகி  நாட்டியத்தில் மிகவும் திறமை கொண்டவர். எனினும், நாட்டியத்தில் நாட்டம் இல்லாதவர்.  இதில் உள்ள முரண்பாடு எளிதாகப் புலப்படும். முரண்பாடு இல்லாத வாழ்க்கையும் உண்டோ? கலையில் திறன் இருந்தும், அந்தக் கலையை வெறுப்பவர் எவ்வாறு அந்தக் கலையின் அருமையை உணர்கிறார், அந்தக் கலையின் பெருமையை புரிந்து கொள்கிறார் என்பதே கதை.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கொலுவையுன்னாடே ’ என்ற பாடலே இன்றைய நிகழ்வின் சிறப்புப் பாடல். தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர் ஷாஜி இயற்றிய இந்தப் பாடல், திரைப்படத்தில் சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்டது. சங்கராபரணம் ராகத்தில் அமைந்த பாடலுக்கு  இளையராஜா வேறு ராகங்களை பயன்படுத்தியது கவனிக்க வேண்டிய ஒன்று.

ராகங்களை மாற்றுவது என்பது பெரிய விஷயமல்ல. அவற்றை சரியான முறையில் கையாள்வதுதான் பெரிய விஷயம். இதனை விடப் பெரிய விஷயம், அந்த ராகங்கள் பாடலுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதுதான்.

கூச்சுப்புடி நடனத்திற்கே உரித்தான வேகமான சொற்கட்டுகளுடன் துவங்குகிறது பாடல். முதல் இரண்டு ஆவர்த்தனங்கள் வேகமாகச் செல்ல, அடுத்த இரண்டு ஆவர்த்தனங்களில் சொற்கட்டுகள் மெதுவாக நளினத்துடன் சென்று மாறுபாட்டை அழகாக வெளிப்படுத்துகிறது. ஆறாவது ஆவர்த்தனத்தில் ஒரு சிறிய தீர்மானம் முடிந்த பிறகு, கேட்கிறது தெய்வீகமான தம்புராவின் ஒலி.

இந்த ஒலி காற்றோடு கலந்து வரும்பொழுது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இனிய குரலில் தொடங்குகிறது ‘அபிநய தர்ப்பணம்’ என்ற நாட்டிய இலக்கண நூலில் இடம்பெற்றுள்ள ஸ்லோகம்.

நடனம் ஆடுபவற்குப்  பாடவும், கைகளினால் பொருளை விளக்கவும், கண்களின் மூலம் உணர்வுகளைத் தெரியப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். அவர் களது கால்கள்  தாளகதியுடன் இயங்க வேண்டும், என்பது இதன் பொருள்.

மணியோசையுடன் தொடங்குகிறது பாடல் சுசீலா அவர்களின் குரலில்.

லதாங்கி என்னும் ராகம் ஒரு தனித்தன்மையுடன் விளங்கும் ஒரு ராகம். 63ஆவது மேளகர்த்தா ராகமாகிய இது, கல்யாணிக்கும் வாசஸ்பதிக்கும் இடையே இருந்தும் , தனக்கேயுரிய அழகுடன் பரிமளிக்கும். இந்தப் பாடலின் பல்லவி மற்றும்  அனுபல்லவி, இந்த ராகத்தில் அமைந்திருக்கின்றன. அனுபல்லவி முடியும் தருவாயில், தகிட தகிட தகிட தகிட தகதிமி என்று வரிகளை அமைத்து லய ராஜா நடனமாடுகிறார்.

லதாங்கியில் தொடரும் முதலாவது இடையிசையில், காற்றை சுற்றி சுற்றி வருகிறது குழல். அரை ஆவர்த்தனத்திற்கு வாசிக்கும் குழல், சற்றே ஓய்வெடுக்க, இடியோசை போல் முழங்கும் மிருதங்கம் மீதமுள்ள அரை ஆவர்த்தனத்திற்கு வாசிக்கிறது. அடுத்து வரும் ஆவர்த்தனத்திலும் இந்த விளையாட்டு தொடர்கிறது, சிறிது வித்தியாசத்துடன். குழல் இப்பொழுது வேறு ஸ்வரங்களை வாசிக்கிறது. மிருதங்கம் சதுஸ்ரத்திலேயே வேறு தாளக்கட்டுகளை முழங்குகிறது. இதன் பிறகு, குழலும் மிருதங்கமும் மழை நாளில் வரும் வாசம் போல இசைக்க, தொடங்குகிறது முதல் சரணம்.

இப்பொழுது நிகழ்கிறது ஒரு அதிசயம். லதாங்கியில் சென்ற இசை, சட்டென ஹம்சநாதம் என்னும் 5 ஸ்வரங்கள் கொண்ட ராகமாக மாறுகிறது. இதிலும் எஸ்.பி.பி.  நாட்டிய ஜதிகளைக் கூற, சுசீலாவின் குரல் வரிகளைப் பாட, ராகமும் தாளமும் பாவமும் இணைகின்றன. இருவரின் குரலில் தொடரும் அகாரம், செவியில் பாய்ந்து, இதயத்துள் நுழைந்து மேனியில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

தொடரும் இடையிசையில் ஹம்சநாதம் ஒரு குழந்தையைப் போல் விளையாடுகிறது. சிரிக்கிறது. நடக்கிறது. ஓடுகிறது. இடையில் மிருதங்கம் நானும் உன் போல ஒரு குழந்தைதான் என முகத்தைக் காட்டி, தனது மான் போல குதிக்கிறது. மீன் போலத் துள்ளுகிறது. மயில் போல ஆடுகிறது.

இப்பொழுது வருகிறது அடுத்த அதிசயம். தர்மவதி என்னும் ராகத்திற்கு மாறுகிறது இரண்டாவது சரணம். அகாரம் இப்பொழுது ராகத்தின் பல பரிமாணங்களைக் காட்டி வேறு சங்கதிகளுடன் ஒலிக்கிறது. 

லதாங்கியில் தொடங்கி, ஹம்ச நாதத்தில் மூழ்கி, தர்மவதியில் திளைக்கிறது.

லதாங்கியிலிருந்து காந்தாரத்தையும் தைவதத்தையும் நீக்கினால் வருவது ஹம்ச நாதம். தர்மவதியிலிருந்து இதே ஸ்வரங்களை நீக்கினால் கிடைப்பது ஹம்ச நாதம்.

சில விஷயங்கள் எளிதாகப் புரிந்து விடும். சில விஷயங்கள் புரிவதற்கு சிறிது  நேரம் எடுக்கும். சில விஷயங்கள் புரிதல் இல்லாமலே போய் விடும். விஷயங்களைப் புரிந்து கொள்ளத் தேவை உணர்தல்-

பண்டுரங்கன் என்னும் சொல்லைப் போல.



Check this out on Chirbit