யோசித்துப் பார்த்தால், மலையும், காற்றும் நேர் எதிரிடை.
மலையை நாம் காண இயலும்.காற்றைக் காண இயலுமா?
மலை ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும்.அதனால் இதற்கு அசலம் என்றுகூட ஒரு பெயர் உண்டு.
ஆனால் காற்றை நாம் ஒரிடத்தில் நிறுத்த முடியுமா?சிறைப்படுத்த முடியுமா?
மலை கனம்.காற்று மெல்லியது.
ஆனால் இரண்டிற்கும் ஒரு பொருத்தம் உண்டு.
மனிதர்களாகிய நாம் சிறிது கூட குறை வைக்காமல் இரண்டையும் நாசம் செய்கிறோம்.
கவிஞர்கள் மலையின் அழகின்மீதும்,தென்றலின் மென்மையின் மீதும் காதல் கொண்டு பல காவியங்களைப் படைத்திருக்கிறார்கள்.
கற்பனை வளமும் , கவிதை அழகும் கைகோர்த்து விளையாடும் கம்ப ராமாயணத்தில் மலையைப் பற்றி ஒரு சுவையான வர்ணனை வருகிறது.
நதி மலையினின்றும் உற்பத்தி ஆகி கடலுடன் ஒன்று கலப்பதால் மலையினை நதியின் தந்தை என்றும், கடலினை நதியின் கணவராகவும் கற்பனை செய்கிறார் கவிச்சக்கரவர்த்தி.
அனலாய் கொதிக்கும் பகலவனின் சூடு தாங்க முடியாமல் தவிக்கிறதாம் மலை.
தனது மாமன் தவிக்கும் தவிப்பினைக் காண சகிக்காமல் கடல் மேகமாகப் பொங்கி மலைமுகட்டில் கூடி தண்மையைத் தணிக்கிறதாம்.
பம்பி மேகம் பரந்தது:'பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆட்டுதும் 'என்று அகல் குன்றின் மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே
கவிஞனின் அழகுணர்ச்சி!கவிதையின் அழகு!!
மற்றொரு கவிஞனோ காற்றை இவ்வாறு வர்ணிக்கிறான்:
காற்றே வா.
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு மனத்தை
மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா
இலைகளின் மீதும் நீர் அலைகளின் மீதும்
உராய்ந்து, மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
இது பாரதி எழுதிய வசனக் கவிதை.
ஒரு சில வார்த்தைகளிலேயே சுற்றுப்புறத்தினைப் பற்றி அழகாக எழுத அறிவாளியான கவிஞனால்தான் முடியும்.
ஒருவன் கவிச்சக்கரவர்த்தி.மற்றவன் மஹாகவி.
ஆனால், அழகுணர்ச்சியும்,அறிவும் கவிஞர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.
இசைக்கலைஞர்களுக்கும் உரித்தானது!
உலகின் தலைசிறந்த இசைக்கலைஞர்களுள் ஒருவராகிய இந்த மாமனிதர் அழகான, புத்திசாலித்தனம் நிறைந்த , புதுமையான பல பாடல்களை படைப்புகளை நமக்கு அளித்து வருகிறார்.
தன்னுடைய ஞானத்தாலும்,கற்பனை வளத்தாலும் உயர்ந்த இசையினை நமக்குத் தருகிறார்.
தனது கூர்மையான அறிவால் நமது இதயத்தைத் துளைத்து ஆன்மாவைத் தொடுகிறார்.
அதே சமயத்தில் தனது பக்தியினால் மிகவும் அடக்கமாக இருக்கிறார்.
அவர் தனது பாடல்களில் பல அரிய பெரிய ராகங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார்.ஆனால், இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் ராகங்களை அவர் எவ்வாறு கை ஆண்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல.எந்த இடங்களில் உபயோகப்படுத்தி இருக்கிறார் என்பதும்தான்.
நமது திரைப் படங்களில் பொதுவாக ஒரு கதாபாத்திரம் இசைக் கலைஞனாகவோ, நடனக்கலைஞராகவோ இருந்தால்தான் ராகங்கள் மிகவும் தூய்மையுடன் உபயோகப்படுத்தப்படும்.
ஆனால் நமது ராஜாவோ ப்லவித சந்தர்ப்பங்களில் கர்னாடக ராகங்களை எடுத்து ஆண்டு இருக்கிறார்.
குடும்பப்படங்களில்,மசாலா மணம் வீசும் திரைப்படங்களில்,நகைச்சுவை காட்சிகளில்,காதல் பாடல்களில்..
இன்று நாம் காண இருக்கும் பாடல் மிகவும் சிறப்பு நிறைந்த ஒரு கர்னாடக ராகத்தில் அமைக்கப்பட்டது.அந்த ராகம் மலயமாருதம் அதாவது மலையினின்றும் தவழ்ந்து வரும் காற்று என்பது இதன் பொருள்.
16வது மேளகர்த்தாவாகிய சக்கரவாகம் என்னும் ராகத்திலிருந்து பிறந்த ராகம் மலயமாருதம்.
இதன் ஆரோகணம்/அவரோகணம் ஸ ரி க ப த நி ஸா/ஸா நி த ப க ரி ஸ.
மிகவும் இனிமையான ராகமகிய மலயமாருதத்தை திரைப்படங்களில் இவருக்கு முன் யாரும் உபயோகப்படுத்தியதாகத் தெரியவில்லை.
நாம் காணவிருக்கும் பாடல் 'கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்ம்மா..'என்ற 'நெஞ்சில் ஆடும் பூ ஒன்று' என்ற திரப்படத்தில் வரும் பாடல்.
பாடலின் தொடக்கமே மகுடி போல் அமைந்து மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
மகுடி என்பது பாம்பை மயக்கும் ஒரு இசை என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.இது புன்னாகவராளி என்னும் ராகத்தில் அமைந்தது.ஆனால், மலயமாருதத்தில் மகுடி ஒலிக்கச் செய்வது ஒரு ராக ராஜாவால்தான் முடியும்.
தொடர்ந்து வரும் ஜானகியின் குரல் நம்மை மயக்கச் செய்கிறது.சந்தூரின் ஒலியோ நம்மை இதப்படுத்துகிறது.
பல்லவி ஜானகி மற்றும் எஸ்.பி.பி அவர்களின் மிக இனிமையான குரல்களில் தொடங்குகிறது.ராகத்தின் மென்மையான போக்கினை இரண்டு வரிகளிலேயே நம்மால் உணர முடிகிறது.
சில மாயமான ஆச்சரியங்களும் இந்தப் பாடலில் இருக்கின்றன.
என்ன அவை?
தாளமும் அதன் அமைப்பும்.
இந்தப் பாடல் சதுச்ர ஏக தாளத்தில் அமைந்திருக்கிறது.
நான்கு அக்ஷரங்கள் சேர்ந்த இந்தத் தாளத்தை இரு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் எட்டு சிறிய மாத்திரைகளாகப் பிரித்து அமைத்திருக்கிறார் லய ராஜா.
இதன் அமைப்பு:
த கி ட த கி ட த க/த கி ட த கி ட த க
ஆனால் வாசிக்கும் முறையோ
த அ அ த கி ட த கா/த அ அ த கி ட த கா
என்பதாகும்.
அதாவது இரண்டாவது, மூன்றாவது அக்ஷரங்களை வாசிக்காமல் விட்டு கடைசி அக்ஷரத்தை கூர்மையாக ஒலிக்கச் செய்திருக்கிறார்.
ஒலிக்கும்பொழுது அது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது!
முதலாவது வாத்திய அமைப்பில் சீறிப் பாய்கிறது வயலின்.இது ஒரு மென்மையான ஏற்றமாக நம்மை ஒரு அழகிய வனப்பு நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.அங்கே தென்றல் நம்மை வரவேற்கிறது.
சரணத்தில் அமுதம் பொங்கி வருகிறது.நம் மேல் துளித் துளியாக அது விழுகிறது.
அது ஸ்வரங்களின் தூரல்;இசைச்சாரல்.
இரண்டாவது வாத்தியக் குழு அமைப்பு நம்மை மென்மையாக வருடுகிறது.மலைகளில் பளபளக்கும் கொடிகள் சிதாரின் ஒலியுடன் தலையசைத்து ஆடுகின்றன.மலை மேல் நாம் ஏற ஏற ,அங்கு தென்றல் களிப்புடன் நம்மை வருடிச் செல்கிறது.
மூன்றாவது வாத்திய அமைப்பில், நாம் மலை முகட்டிலிருந்து கீழே பார்க்கிறோம்.சரிவைப் பார்க்கிறோம்.நிலத்தைப் பார்க்கிறோம்.பூமியைப் பார்க்கிறோம்.மரங்களைப் பார்க்கிறோம்.மரங்களில் அமைந்து கானம் இசைக்கும் பறவைகளைப் பார்க்கிறோம்.காதில் தென்றல் ரகசியம் பேசும் அழகினை உணர்கிறோம்.சந்தோஷ காற்றை உணர்கிறோம்.
இயற்கையுடன் ஒன்று கலக்கிறோம்.
அமைதி நம்மைச் சூழ்கிறது.
இது மலையிலிருந்து தவழ்ந்து வரும் தென்றல்.
மலை தாய் என்றால், தென்றல் தந்தை.
மலை சுருதி என்றால், காற்று தாளம்.
சுருதி மாதா;லயஃபிதா.
கர்னாடக இசையில் சுருதியைத் தாயாகவும், தாளத்தை தந்தையாகவும் பாவிக்கிறோம்.
இதுவே மலைகளுக்கும்,தென்றலுக்கும் உள்ள உறவு.
அவரது இசை நம்மை அழகிய மலை முகட்டிற்கு அழைத்துச் செல்லும்.அங்கே தென்றலின் நளினத்தை உணர வைக்கும்.
என்றும் ஆனந்தம்;பரமானந்தம்.
என்றும் இன்பம்;கோடி இன்பம்.
|